Monday, March 14, 2022

ஜமீல்/செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன்

 

ஓவியத்திலிருந்து வெளியேறும் நிறம்.. ஜமீல்

 

வர்ணங்களை உதிர்க்கும் கவிதைப் பறவையான தோழர் ஜமீலின் ‘’ஓவியத்திலிருந்து வெளியேறும் நிறம்’’ இன்று கிடைத்தது... பல்வேறு விருதுகளின் சொந்தக்காரன் ஆகிவிட்ட ஜமீலின் வெவ்வேறு முகங்கள் இந்த கவிதைகளில் தீட்டப்பட்டிருக்கின்றன.. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும் போது நம் மனதிலும் கலர்கலராய் மழைத் துளிகள் பொழிகின்றன... முக்கோணக் கண்ணாடிக்குள் உருண்டு கோடிப் பிம்பங்கள் காட்டும் காகித உருண்டைகள் போல ஜமீலின் கவிதைளின் அழகு நம்மை மெய்மறக்கச் செய்கிறது.. ஜமீல் வாழும் உலகம் அழகானது. அந்த அழகே அவரது எழுத்துகளை வர்ண ஓவியங்கள் ஆக்கி விடுகின்றன.. அவற்றில் தந்தை தொட்டுத்தொட்டு தீற்றும் தூரிகை ஆகிறாள் ஹயாக் குட்டி... 

//....வரலாற்றின் புத்தகத்தில் /எந்தப் பக்கத்தில் /உன் நிழலை /வரையப் போகிறாய்.. என்று விசாரிக்கும் இந்தக் கவிஞன் /...நானொரு பிரளயம்/ நானொரு வரலாறு/ நானொரு சகாப்தம்....// என்று பிரசித்தம் செய்து விடுகிறான்... 

உண்மைதான் நம் ‘’மனசின் இருளில் தன் கவிதை மின்மினிப்பூச்சிகளை பறக்க விடுவதில் வெற்றி பெற்று விடுகிறார் ஜமீல்... 

(ஓவியத்திலிருந்து வெளியேறும் நிறம்..(கவிதைகள்). எதிர் பிரதிகள் வெளியீடு..அப்துல் ஜமீல்.124A.Star road.. Periyaneelavanai- Maruthamunai)

 

இன்று நல்ல ‘’விளைச்சல்’’ 

கவிஞர் நீலாவணன் எழுதிய வேளாண்மை’’ காவியம் குடலை-கதிர் என இரு பகுதிகளாக எழுதப்பட்டு கைப்பிரதியாக அவர் வீட்டில் இருந்ததை மறைந்த எழுத்தாளர் வ.அ. இராசரத்தினம் அவர்கள் பெற்று 1982 இல் அதனை நூலுருவாக்கம் செய்திருந்தார்.

வ.அ. தன் முன்னுரையில் //......இக்காவியத்தின் மூலம் இயந்திர நாகரீகத்தால் கற்பழிந்து விடாத மட்டக்களப்பின் குமரியழகையும், மட்டக்களப்பாரின் விருந்திருக்க உண்ணாத வேளான்மைத்தனத்தையும் வெளியுலகிற்கு காட்டத்தான் நீலாவணன் ஆசைப்பட்டிருக்கிறார் எனத் துலாம்பரமாகிறது .....// எனக் குறிப்பிட்டுள்ளார்...

இரு பகுதிகள் மட்டும் எழுதி பாதியில் நின்று போன இக்காவியத்தை விளைச்சல்’’ எனத் தலைப்பிட்டு மேலும் ‘’காய்’’—‘’பழம்’’ என்னும் இரு பகுதிகளை எழுதி இந்த அரிய காவியத்தை பூர்த்தி செய்துள்ளார் கவிஞர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன்......

வேளாண்மைகாவியத்தில் உள்ள கிராமிய உவமானம் உவமேயம் சற்றே அங்கதம் கலந்த கவியோட்டம் கலாசார எடுகாட்டுக்கள்..கலைஇடுகைகள் ஆகியவற்றுக்கு சற்றும் சளைக்காத அதே தர நிர்ணயத்தில் விளைச்சல் காவியத்தை ஆக்கியுள்ளார் செங்கதிரோன்... மிக இயல்பான மொழி ஓட்டம் செங்கதிரோனுக்கு இயற்கையிலேயே வாய்த்துள்ளதால் தன் குறுங்காவியத்தை சற்றும் தங்குதடையின்றி இயல்பாக நடத்திச் சென்றுள்ளார்...

//.....பேச்சோசைப் பாங்கிலான நவீன கவிதைகளின் முன்னோடிகளாகக் கருதப்படும் அமரர்கள் மஹாகவி- நீலாவணன் வரிசையில் வைக்கப்படும் தகுதியை செங்கதிரோன் இந்த விளைச்சல் காவியத்தின் மூலம் அடைந்து விட்டார்.../// என க.தங்கேஸ்வரி (முன்னாள்.பா.உ.) அவர்கள் கூறுவது மிக உண்மையே என்பதை நிரூபணம் செய்கிறது இந்த விளைச்சல்..

செங்கதிரோனின் காந்த எழுத்துக்கதிர்களின் அமோக ‘’விளைச்சல்’’ இது.... 

விளைச்சல்...செங்கதிர் இலக்கிய வட்டம்..செங்கதிரோன்.T.Gopalakirishnan---607 Bar road—Batticalaoa—0771900614.....Rs.400/=

 

No comments:

Post a Comment