Wednesday, August 16, 2023

யாவும் கற்பனையல்ல-

 யாவும் கற்பனையல்ல- 

சிறுகதைத்தொகுப்பு-

செங்கதிரோன். த.கோபாலகிருஷ்ணன்


மனங்களில் உச்சரிக்கும் எழுத்து மந்திரம்,


  என் அபிமானத்துக்குரிய எழுத்தாளரும், நாடறிந்த இலக்கியகர்த்தாவும் , இதழியலாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான செங்கதிரோன் திரு. த. கோபாலகிருஷ்ணன் அவர்களின் இந்த சிறுகதைத்தொகுப்பை வாசித்த பின், என் மனதில் பொங்கிய அருட்டுணர்வின் சில கூறுகளை ஒரு வாசகனாக இங்கு பதிவு செய்து கொள்கிறேன். 

இத்தொகுப்பில் உள்ள 13 கதைகளையும் சிறுகதைகளுக்குரிய பண்புகள் மாறாமல், தனக்குரிய இயல்பான எழுத்து நடையில் ஒரு தவ நிலையில் இருந்து படைத்து தந்திருக்கிறார் இந்த எழுத்து வித்தைக்காரர். 

சிறுகதை என்ற சொல்லுக்கு அகராதிப் பொருள் போல, 13 சிறுசிறு, கதைகளை தந்துள்ள இந்தப் படைப்பாளியின் எழுத்தில்,ஆங்காங்கே தூவப்பட்டுள்ள ஏதோ ஒரு மந்திரப் பொடி நம்மை அவரின் எழுத்தின் மீது வசியம் செய்து இடையறாது வாசிக்கவும்,  இவருடனே வசிக்கவும் செய்து விடுகிறது.. 

தேர்ந்த கதைக் கருக்களை நேர்த்தியான முறையில் வடிவமைத்து, தன் நிர்மாணங்களை தகுந்த முறையில் கட்டமைத்து வாசகர்முன் வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்த எழுத்து எந்திரி.

எழுத்துத் தொழிலில் நீண்டகால  அனுபவச் செழுமை காரணமாக தன் கதைகளை மிகவும் இலாவகமாக சொல்லிச் செல்லும் இந்தக் கதைசொல்லியின் வாழ்வியலின் பல்வேறுபட்ட அனுபவக் கூறுகளும், ஆழமான வாசிப்பின் அறிவுக் கூர்மையும், இத் தொகுப்பில் விரவிக் கிடப்பதை நம்மால் உணரக்கூடியதாக உள்ளது . 

இந்தக்கதைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து ஆராய்ந்து அவற்றின், வார்ப்புத் திறன், சொல்முறைமை, கையாண்ட உத்திகள் எனப் பேசிச் செல்ல  எத்தனையோ விடயங்கள் உள்ளன.அகண்ட தமிழிலக்கியப் பரப்பில் அவைபற்றிப் பேசப்படவேண்டிய அவசியமும் உள்ளது.  

தவிரவும், இவருக்குள் இயங்கும் ஒரு சமூகப் போராளியின்,ஆக்ரோஷ வெளிப்பாடு, சில கதைகளில் முனைப்புக் காட்டுகிறது. அதே சமயம்  அவர்  அக்கதைகளை ஒரு, தீவிரப் போக்கில் சொல்லுகிற தன்மை, செங்கதிரோனின் சமுக அக்கறையை வெளிக்காட்டுகிறது. மட்டுமன்றி, சமூகக் கொடுமைகளுக்கெதிராகவும்,தனிமனித சிறுமைத் தனத்துக்கு எதிராகவும் உரத்துக் குரல் கொடுக்கும் தன்மைகளும் வெளிப்பட்டு நிற்கின்றது.  ‘துரோகி’, ‘சகோதரத்துவம்’, போன்ற கதைகளில் இந்த பண்பினை காணக் கூடியதாக உள்ளது.

அதே போல, அவர் சில  கதைகளைச்  சொல்லிச் செல்லும் போக்கிலேயே தன், இயல்பான  நகைச்சுவையையும், குறும்புத் தனத்தையும் அளவோடு கலந்து தெளித்து விடுகிற பாங்கினை,  நன்றாக இரசிக்கவும் முடிகிறது.  ‘குடை கவனம்’ என்ற கதையில் மனைவிக்கு கொடுக்கின்ற ‘குறும்புக்கல்தா’வும், ‘ஒரு குழந்தையின் அழுகை’ கதையின் முடிவில் வாசகருக்குத் தரும் அதிரடி முடிவிலும் நம்மை புன்னகைக்க வைத்துவிடுகிறார் இந்த எழுத்துக் குறும்பர். 

மேலும், “அந்த ஏவறை சத்தம்’, ‘கூடு விட்டு’, ‘யாவும் கற்பனையல்ல”,போன்ற கதைகள்,  அமானுஷ்யத் தன்மையின எனலாம். இந்தவகையான கதைக் கருக்களை தமிழ்ச் சிறுகதை தளத்தில் பரிசோதித்துப் பார்த்தவர்கள் சொற்பளவினரே. இதில், செங்கதிரோன் தன் மாயத் தமிழ் நடையையும்,  கைவால்யமான எழுத்தனுபவத்தையும் கொண்டு மிக இலாவகமாக இக்கதைகளை நகர்த்தி, தன்  அனுபவ உணர்வை வாசகருக்குள் தொற்றிவிடச் செய்வதில் வெற்றி பெற்று விடுகிறார். இக்கதைகள் தரும் விசித்திர நுகர்வை வாசகரால் இலகுவில் கடந்து விட முடிவதில்லை.

சமுக அழுக்குகள் மீது வெஞ்சினம் கொண்டு வாழுகிற, இந்த எழுத்துப்போராளி,  ‘ஊர்மானம்’ என்ற கதையில், வேலாப்போடியின் உருவகத்தில் தானே வந்து, சமூகத்திடம் உரத்துக் கேட்கிற கேள்விகளுக்கு தமிழ்-முஸ்லிம் சமுகத்தில் யாரிடமும் பதில் இல்லை. 

‘அங்கிருந்து வந்தவர்கள்’ என்ற கதை, விடுதலைப்போராளிகளின் கட்டுப்பாடு சிலபோதில் கைமீறிச் சென்று பரிதாபத்துக்குரிய ஓர் இளைஞனைப் படுகொலை செய்வதில் வந்து முடிகிற துர்ப்பாக்கிய சம்பவம் ஒன்றை பதைபதைக்க வைக்கும் மொழியில் விபரிக்கிறது. விறுவிறுப்பான எழுத்தில் அதே சமயம் நிதானமான முறையில் இக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் ஆசிரியர்..

இத்தொகுதியில்,உள்ள, ‘கரப்பத்தான் பூச்சி’  என்ற கதை, இந்நூலின் தலைப்பாக போடக் கூடிய அளவு முக்கியமான ஒரு நட்சத்திரக் கதையாகும்.  இரு கரப்பத்தான் பூச்சிகளின் புணர்வில், மகாபாரதப் புராணத்தின் ஒரு சம்பவத்தைக் கொண்டு வந்து கச்சிதமாகப் பொருத்தி, கடைசியில், //இரு உயிர்கள் கலவி இன்பத்தில் ஈடுபட்டிருக்கையில், அதனைக் குழப்புவது அல்லது கெடுப்பது சாபத்துக்குரிய பாவம்.// என்று கதாசிரியர் அவற்றைத் தப்பிக்க வைப்பதுவும், பாண்டு மன்னனை மறுவாசிப்பு செய்துள்ள வகையிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இந்தப் படைப்பாளியின் உயர்ந்த, இளகிய  மனோபாவத்தின் போற்றுதலுக்குரிய பண்பும் இக்கதையில் இழையோடி நிற்கிறது. .. 

பொதுவாக, இத்தொகுப்பிலுள்ள கதைகள், சொல்நேர்த்தியிலும், எடுத்தாண்ட கருப் பொருள்களாலும் வெற்றி பெற்று விடுகின்றன. வாசகர் மனதிலும் தங்கி விடுகின்றன..ஆசிரியர் தன் கதைகளை,  தான் வாழும் சூழலை ஒட்டியே நகர்த்துவதால் கதைகள் மிக யதார்த்தமான தன்மையை பெற்று, வாசகரை கதையோடு ஒன்றிக்க வைத்து விடுகின்றன. இது ஆசிரியருக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்,  தவிரவும், சிறுகதைகள் பற்றிய ஆசிரியரின் தெளிவான பார்வையையும் இது வெளிக்காட்டி நிற்கிறது.  இத்தொகுப்பில் உள்ள பலகதைகள்  பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளமை அதற்குச் சான்றாகவும் அமைகின்றன. 

கற்பனைப் புனைவுகளுக்கு ஒப்பனைப் பூச்சு தீற்றி தமிழ் வெளியில் சஞ்சரிப்போர்  மத்தியில், இவை யாவும் கற்பனையல்ல என்று யதார்த்தச் சிறகுகளைப் பொருத்தி தன் படைப்புலகில் தனித்துவமாகப் பறக்கின்ற செங்கதிரோன் என்ற எழுத்து விஞ்ஞானியை மனமுவந்து பாராட்டுகின்றேன். வாழ்க அவர் எழுத்துப் பணி..

தீரன். ஆர்.எம். நௌஷாத்.

2023.07.15