Monday, March 14, 2022

செந்தமிழினியன்/ பரீட்சன் வபா பாறூக்

 செந்தமிழினியனின் -- கிளி நின்ற சாலை –(நாவல்)

 செந்தமிழினியன் என்ற சக்திவேல் ஒரு சிறுகதை எழுத்தாளர்-புகைப்படக் கலைஞர்- கவிஞர்- என்ற தன் எல்லா அவதாரங்களையும் முடித்து விட்டு ‘’ கிளி நின்ற சாலையில் ஒரு நாவலாசிரியராக புது அவதாரம் கொண்டிருக்கிறார்...ஒரு புதிய வீச்செல்லையில் நின்று தன் கதை என்னும் ரோடு ரோலரை ஓட்டி வந்திருக்கிறார்... சாலைத் தொழிலாளிகளின் வாழ்வியல் இந்நாவலில் ஒரு நீண்ட சாலையாக பயணிக்கிறது... அவர்களின் ‘’தொங்கு நிலையை மையச் சுழற்சியாக வைத்துச் சுழல்கிறது

 அகோர வெயிலில் கால்களில் சாக்குகளால் சுற்றிக் கொண்டு தார் ஊற்றி ஓடும் அவர்களின் தகிப்புத் தன்மையை ஒரு ரோடு ரோலரின் அழுத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார்... நொறுங்கும் பொடிக்கற்கள்.. கொதிக்கின்ற தார் நெடிரோலரின் பாரிய சக்கரங்கள்...அதற்கான கிரீஸ் வாசனை...மூக்கை அடைக்கும் தூசு...மண்டை பிளக்கும் உச்சிவெயில்..சித்தாள்கள்...ஹப்பாடா...ஒரு புதிய கரடு முரடான கதைச் சாலையில் நம்மை அழைத்துப் போகிறார் ஆசிரியர்

 .. தவிரவும் அந்த ஏழ்மை மனிதர்களுக்கான யூனியன்..ஏமாற்றும் மேல்வர்க்கம்.. என்று கதையில் இன்னொரு பக்கம் விரிகிறது....அவர்களின் சராசரி இருப்பியல்..வாழ்வாதார நெருக்குவாரங்கள் ஊடே உருள்கிறது இந்நாவலின் இயந்திர சக்கரங்கள்...

வழுக்கும் சாலையில் சொகுசாகப் பயணிக்கும் நமக்கு தெரிவதில்லை அத் தொழிலாளர்களின் முதுகுகளின் மீதே நாம் பயணம் செய்கிறோம் என்று....

 பாத்திரங்களின் உரையாடல் வெளியாகவே பெரும்பாலும் கருவை நகர்த்திச் செல்லும் நாவலாசிரியர் வாசிப்புக்கு எவ்விதமான இடர்களுமின்றி மிக லாவகமாக மொழியைக் கையாள்கிறார்... ஒரு புதிய வாசிப்பனுபவத்தை நமக்குத் தரும் ‘’கிளி நின்ற சாலை’’ இருநூறு பக்கங்கள் கொண்ட ஒரு பெரிய கதை ரோலர்....

 நாவல் பற்றி விரிவாக எழுத ஏராளமான சங்கதிகள் உள்ளன .. இது இவரது முதல் நாவல் என்று சொல்ல முடியாதளவுக்கு அனுபவமும் தேர்ச்சியுமிக்க எழுத்து நடையால் நம்மை தன் நாவலில் ஒன்றச் செய்து விடுவதில் வெற்றி கண்டுள்ளார் ... செந்தமிழினியனுக்கு நமது பாராட்டுக்கள்....

 இவரது ஏனைய நூல்கள்...(1).பரிதிப் புன்னகை (ஹைக்கூ) –(2) தூறல் விண்ணப்பம் (ஹைக்கூ)— (3)அருவக் கோட்டோவியம் – (4) கி.பி.2400 ஒரு ஞாயிற்றுக் கிழமை....

 

 பரீட்சனின் --முரண்பாட்டு சமன்பாடுகள்

 என்னை நான் தேடும் பயணத்தின் அடையாளங்களாக எழுத்துகளும் சிந்துகின்றன..குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமற்ற எனது பெற்றோர் வழிப் பெயர் வபா பாறுக்.. இலங்கையில் கல்முனையை பிறப்பிடமாகக் கொண்டவன்..ஒரு சமுக மாற்றத்தை வேண்டிய போராளி.. இன்று சமுக மீட்சிக்காக பிரார்த்திக்கும் யாசகன்.....’’ என்று தன் அடையாள அட்டையை சுருக்கமாக நமக்குக் காண்பிக்கும் பரீட்சனின் உண்மையான அடையாளம் மிகப் பெரிது...

 பரீட்சன் குளிர்மை சட்டை அணிந்து கொண்டிருக்கும் ஓர் எரிமலை... அவன் கவிதைகளும் அப்படியே...சமூக மீட்சிக்காக இரத்தம் கக்கிக்கொண்டிருக்கும் அவனது பேனாவின் விளாசல்கள் கால முதுகில் கவிதை வரிகளாக விழுகின்றன... .. இவனது ‘’விரலின் விசையில் விண்ணுலகம் மண்ணுக்குள் புதையும்...

 நிகழ்காலம் எவ்வளவு நேரம்...? என்று நம்மைக் கேட்கிற இவனது கேள்விக்கு ஏது விடை....வானத்தை ஒரு சுருளாகச் சுற்றி பூமியை-கடலை-சூரியனை-சந்திரனை-அதற்குள் போட்டு மூடுகிற செப்படி வித்தை செய்கிற எழுத்துக்களும் ,ஒற்றை வரியில் ஒரு வரலாறு எழுதுகிற பேனாவும் வைத்துக் கொண்டிருக்கிற இந்த ‘’கவிதைக்கரப்பான் பூச்சி’’ யின் எத்தனையோ ஆத்ம விசாரங்களுக்கு விடையளிக்க நமக்குத் தெரியவில்லை...

 முரண்பாட்டு சமன்பாடுகள் கவிதைத் தொகுதியை எல்லா கவிதை நூல்களையும் போல இலகுவாக வாசித்து விட்டுக் கடந்து போக முடியாது.. மாட்சிமை பொருந்திய புராதன இருளுக்குள் பறீட்சன் நடக்கையில் அவனது விரலைப் பிடித்துக் கொண்டு நாமும் நடக்க வேண்டியுள்ளது ...

 எத்தனை தூரிகைகள் //எத்தனை வண்ணங்கள் // அத்தனையும் பக்குவமாய் பாவித்து// நூதனமாய் வரைந்த ஓவியத்தில்//மீதமிருந்த சிவப்பு நிறத்தை//முழுவதுமாய் கொட்டி விட்டான்// இனி ஒரு போதும் // அழியாது அந்த ஓவியம்...// பரீட்சனின் முரண்பாட்டு சமன்பாடு தொகுதியின் வரைவிலக்கணமும் இதுதான்...

 பரீட்சன்--- எரிமலையில் ஏறிக் கொண்டிருக்கும் ஓர் அதிசய எறும்பு...ஆனால் அகண்ட வெளியின் மையம் தேடிப் பறக்கும் ஒரு கவிதை ராஜாளி...

 இ த்தொகுதியை அழகுற அச்சிட்டிருக்கும் அகர ஆயுதம் அமைப்பும் அதன் நிறுவுனர் இலக்கியன் முர்ஷித்தும் பாராட்டப்பட வேண்டியவர்கள்....

 

No comments:

Post a Comment