எம் அப்துல் றசாக்கின் எழுத்துப்பிழை
மஹா வாக்கியங்களிலும் எழுத்துப்பிழை.... என்ற எழுத்துச்சரியா என்றால் அப்துல்
றசாக் என்ற ஓர் அபூர்வமான கதைச்சிலந்தி பின்னியிருக்கும் ‘’நூலில்’’ தெரிகிற நூல்வன்மையை அல்லது நொய்மையை இழுத்துப் பரிசோதிக்க வேண்டியிருக்கிறது...
பரிசோதித்தாலும் கதையாக இல்லாமல் கதையாகியிருக்கும் பல சூட்சும நுண்ணரசியலை
புரிந்து கொள்ளல் எவ்வளவு சாத்தியம்..? புகைமூட்டத்தின் ஊடே ஒரு பலமான
வீட்டைப் பின்னியிருக்கும் இந்த தசம பின்னங்களை முடிச்சவிழ்க்க முடியவில்லை
என்னால்….
ஒன்பது ஜன்னல்களை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்த அசகாய நிர்மானங்களை ஒரே
மூச்சில் கடந்து விட முடியாது.. நின்று நிதானித்து யன்னல்களின் சட்டகங்களை
உசுப்பிப் பரிசோதிக்க வேண்டியுள்ளது..’’மரணத்துக்குப் பின்னரான கொலை
மற்றும் தற்கொலை’’ என்ற கதை(?)இலிருந்தும் அந்த அரந்தலாவையின் அடர்வனத்திலிருந்தும் வெளியேறி வர வெகு
நேரமாயிற்று எனக்கு,...’’கா;அத்தின் மீதேற்றி வாசிக்கப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகளை’’பார்க்க உள் நுழைந்த நான் அங்கு கண்டதெல்லாம் எண்ணிக்கையற்ற சந்ததிகளின் காலச்
சதுரங்களைத்தான்.....
சூதாட்டம்-கனவுகளின் காலம்கால்ம்-வீட்டுக் குறிப்புகள்-செம்மணத்தி- ஞானத்தின்
சாரம் அல்லது கழிவறை ஞானம் ஆகிய பின்னல்களில் என் வாசிப்புச் சிறகுகள் சிக்கிக்
கொண்டு சிறு பூச்சியாகிப் போய் துடிதுடித்த நான் அவற்றிலிருந்து தப்ப முடியாதபடி
மேலும் இறுகியபோது அப்துல் றசாக் என்ற கதைச்சிலந்தி ஓடி வந்து என்னை சுற்றிக்
கட்டி அசைய முடியாதபடி இறுக்கி விட்டது...
நான் அப்துல் றசாக் என்ற கதைச்சிலந்திக்கு இரையாகிப் போய் கிடக்கிறேன்....
எழுத்துப்பிழை எம். அப்துல்
றசாக் 78/1 உடையார் வீதி –அக்கரைப்பற்று 0718218400
ஏ.எம். சாஜித்தின் பஞ்சபூதம்---------பஞ்சபூதங்களின் போர்க்களம்
ஏ.எம். சாஜித்தின் பஞ்சபூதம் நாவல் வாசித்த அருட்டுணர்வில் இருந்து விடுபட
வெகு நேரமாயிற்று. அண்ட சராசரங்கள் அனைத்தையும் தனது அன்பின் புன்னைகையால் ஆக்கிரமித்து
வலிமை மிக்க தனது கூறிய அறிவினால் பூலோகம் பரலோகம் பற்றிய அமானுஷ்யங்களை ஆயிரத்து
நானூறு வருடங்களுக்கு முன் பறை சாற்றிய இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும்
அவரின் தோழமைகளுக்கும் இதனை காணிக்கை ஆக்கிய சாஜித்தின் வெளிப்பாட்டுணர்வில்
விகசித்த மெய்யறிவில் நாமும் மெய்மறந்து போனோம்,,,,
ஐம்பூதங்களுடன் பயணிக்கும் நம்மை தூர நின்று வேடிக்கை பார்ப்பதாக சாஜித்
சொல்லிக் கொண்டாலும் நாவல் முழுக்க நம்முடன் கூடவே வருகிறார், ‘நான்’ தேசத்து மாலுமியை நேசிக்கும் ஜாஸ்மின் இஸ்ஸத்தின் காதல் உயிர்ப்பிலும் –பாலைவனத்தில் புதையல் தோண்டும் முனியாண்டியின் தேடலைக் கடினப்படுத்தும்
பறவைகளின் வெள்ளை மொழிகளும்- நமக்குப் புரிவதற்குள் முனியாண்டியின் கொலை
அச்சுறுத்தல் நமக்குள் தகிக்கிறது,,,அதற்கிடையில்--
முப்பெரும் சக்தி கொண்ட வேடனை நாம் எதிர்கொள்ள வேண்டி வருகிறது,,,மிகவும் சுவாரஷ்யமான கழுகின் மீதேறிச் சென்று அவனை வெல்வதற்கு இந்த சூனியக்
காட்டில் யாருமில்லை. சாஜித் பின்னிய இந்த இரும்புச் சிலந்தி வலையை அறுக்க நாமும்
வாளுடன் கஞ்சாச் செடிகளை மென்றபடியே நாவலின் ஐந்தாறு பக்கங்களில் அலைகிறோம்....
அவர்தான் பிரதியின் பின்னால் ஒளிந்து கொண்டாரே...
வெள்ளை-கருப்பு மேகங்களின் மோதல்களில் வாசிப்பாளன் மின்னல் பட்டு செத்துப் போக
பிரதி மட்டும் கதை சொல்லியுடன் சமரசம் செய்து கொள்வது நமக்கு உடன்பாடாயில்லை.
தனியே போய் காற்றுவாசியாகி காற்றுடன் மந்திர வார்த்தைகள் பேசி தூண்களற்ற வானத்தில்
நம்மைத் தூக்கிப் போட்டுவிட்டார் சாஜித்.... மின்னலைப் பற்ற வைத்து இந்தப் பிரதியை
கொளுத்தி விடத்தான் நமக்கும் ஒரு எண்ணம் வருகிறது... பெருந் தீயிலிட்டு எரித்த
பின் மீண்டும் இதை வாசிக்க வேண்டும்,,,,,, அப்போதுதான் சாஜித்
என்ற கதைசொல்லியை நம்மால் புரிந்து கொள்ள முடியும்....
கட்டுக் கதைப் பொருள் இல்லை ...குணாதிசயப் பாத்திரங்கள் இல்லை...கதை நிகழ்தளம்
இல்லை... வாசித்தின்புறல் துன்புறல் இல்லை- இவை போன்ற எந்த ஆயுதமும் இல்லாமல் தன்
எழுத்துமந்திரக் கோலை மட்டுமே நம்பி -- நாவல் என்ற பெரும் காட்டாற்று அணையை வெறும்
முப்பத்தி இரண்டு பக்கங்கள் கொண்ட இப்பிரதியினால் கட்டுடைத்து தன் பக்கம் பாய
வைக்க சாஜித்துக்கு அசாத்திய துணிச்சல் வேண்டும்....
இனிவரும் நாவல் வெள்ளங்கள் இவர் உடைத்த பக்கம் பாயுமானால் சாஜித்துக்கு
வெற்றிதான்.. பாயாவிட்டாலும் சாஜித்துக்கு வெற்றிதான்..
கதைசொல்லியே...எவ்வாறாயினும் உன் அமானுஷ்ய சொற்கயிற்றில் எம்மை சிறிது
நேரமாவது கட்டிப்போட்டாயே..... உனக்கு நம் மனமார்ந்த பாராட்டுக்கள்...
No comments:
Post a Comment