பாவார்த்தம்
பாலமுனை ஊரின் முதல் எழுத்து “பா”.வில்தான் ஆரம்பிக்கிறது.. பாறூக் என்ற
பெயரிலும் “பா”தான் முதல் எழுத்து...பாவேந்தல் பட்டத்திலும் “பா”தான் முன்னிலை.... அவரது பிள்ளைகளின் பெயர்களிலும் “பா” தான் பரவியிருக்கிறது.. மொத்தத்தில் “பா”வே அவரது உயிரிலும் பெயரிலும் ஊடுபாவி இருக்கிறது..
பாதான் அவரது மூச்சு பேச்சு எல்லாமே.. பாவினங்கள் அவரது பாடல்களில் பற்பல
வடிவெடுக்கும்.. பாத்திறம் அவரது பாக்களில் நிறைந்து பரவசம் தரும்.. எப்போதும்
பாக்களால் நிறைந்திருக்கும் அவரது பாத்திரம்.. பாமேடைகளில் அவரது பாத்திரமே
முதன்மை பெறுகிறது..
வெண்பா, குறும்பா, புதுப்பா எப்பாவென்றாலும் அப்பாவில் பாப்புனையும் திறமையில் ஒரு சொல்லேனும்
தப்பா. அப்பா...இவரது தமிழ் புலமைக் கொப்பாரிலர் இப்பாரில்...
பாவார்த்தம் பார்த்து உரிய பாவினம் தேர்ந்து பாவனம் கூட்டிச் சொற்களில் பாவிகம்
சேர்த்துப் பாவியற்றும் பாங்கு கைவரப்பெற்ற திறமை பார்த்தே பாறூக் அவர்களுக்கு 2011 இல் சாய்ந்தமருது அபாபீல்கள் கவிதா வட்டம் ‘பாவேந்தல்’’ என்ற பட்டமளித்துக் கௌரவம் வழங்கியது. அந்நிகழ்வை இக்கணத்தில் எண்ணி மேலும்
பெருமைப்படுகின்றோம்...
ஓங்குக மேலும் பாவேந்தல் புகழ்..
அலெக்ஸ் பரந்தாமன்
‘“எழுதுவது என் தொழில் அல்ல.. எழுத்துக்களை நான் மிகவும்
நேசிக்கின்றேன்..எழுத்தென் வயிற்றுக்குச் சோறு தருவதல்ல.. ஆயினும் எழுதிக் கொண்டேயிருக்க
விரும்புகிறேன்..’
அலெக்ஸ் பரந்தாமனின் மேற்படி சுயபிரகடனம் ஒன்றே நமக்கு அவரைப் பற்றிய
பிம்பத்தை காட்சிப்படுத்தி விடுகிறது.. இந்தப் பேனாப் போராளியின் மனதிலிருந்து
எரிமலையாய் பீறிட்டெழுந்த எழுத்துக் கங்குகள் சிறுமைக் குண மாந்தரைச் சுட்டெரிப்பவை..
ஒரு சமுகத்தின் இழிவுகளை விட்டு அதன் உன்னத மையத்தை நோக்கித் தள்ளிவிட
முயற்சிப்பவை.. இழிசெயல்களை இடித்துரைப்பவை.. மையக்கோட்டு மானிடரின் மகத்தான
குரலை மேல்தட்டு மனிதர் மத்தியில்
ஓர்மையுடன் உரக்கச் சொல்பவை..
அலெக்ஸ் பரந்தாமன் தன் எழுத்துக்கள் மூலம் நமக்கு சொல்பவை ஏராளம்..
மனவேக்காடுகள்.. முரண்நிலைக் குணபாடுகள்..போராட்ட வாழ்வின் இன்னொரு பக்கக்
காட்சிகள்.. எல்லாவற்றின் ஊடே மெல்லிய இழையாய் ஊடறுத்துச் செல்லும் அன்பின் மகா
தரிசனம்... இப்படி அவர் நமக்குக் காட்டும் அக தரிசனங்கள் பல..
1959 இல் பிறந்த இவர் 1984 களில் எழுத ஆரம்பித்தார். எனினும்
இந்திய இராணுவ வருகையின் போதும், உக்கிரமான வன்னிப் போரின்
போதும் ஏற்பட்ட இழப்புகள்,இடப்பெயர்வுகள் காரணமாக இவரது எழுத்துப் பணிகள் இடையிடையே தொய்வறுந்து
போயின...
ஆயினும் தன் நிலைபேறான சாதகமான காலப்பகுதிகளில் எல்லாம் எழுத்தூளியத்தில் ஈடுபட்டே
வந்துள்ளார்... இதனால் 2௦14இல் ‘மரணவலிகள்’ என்ற கவிதைத் தொகுதி,
2016 இல் ‘தோற்றுப்போனவளின் வாக்குமூலம்’
என்னும் சிறுகதை நூல், 2௦.....இல் ‘அழுகைகள் நிரந்தரமில்லை’
என்னும் சிறுகதை தொகுப்பு
......................................................... ஆகியன இவரது
விளைச்சல்களின் ஆரோக்கியமான அறுவடைகள் ஆகும்..
தற்போது ................... என்னும் இச்சிறுகதை நூலில் அலெக்ஸ் பரந்தாமன்
தனக்கேயுரிய அற்புதமான எழுத்து
நடையால் தன் அகவுணர்ச்சியின் வெளிப்பாடுகளை நெய்துள்ளார். மானுடத்தின்
பித்துக் குணாதிசயங்களின் மீது தன் அகச்சீற்றத்தை அற்புதமாக
வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பிலும், யாழிலும் பல பத்திரிகைகளில் ஒப்பு நோக்குனராக பணி செய்த அலெக்ஸ் பரந்தாமன்
இயற்கையிலேயே ஒரு நல்ல விவசாயி ஆவார்.. ‘’கண்ணீரோடு விதைப்பவர்கள் கம்பீரத்தோடு அறுப்பார்கள்...’’ என்ற இவரது மகுட வாசகத்தினைப் போலவே
மண்ணையும் மானுடத்தையும் கொத்திப் புரட்டி பதமாக்கி அதில் உயர் ரக விதைகளை
விதைக்கத் துடிக்கும் இந்தச் சொல்லேர் உழவனை வாழ்த்தி மகிழ்கின்றேன்...
No comments:
Post a Comment