எனக்குள் நகரும் நதி- அஷ்ரப் சிஹாப்தீன்
மீள்பார்வை பத்திரிகையில் இருவாரங்களுக்கு ஒரு முறை அஷ்ரப் சிஹாப்தீன் எழுதி
வந்த, ஓரளவு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்த தொடரில் 26 பத்திகள் தொகுக்கப்பட்டு ‘’எனக்குள் நகரும் நதி’’ என பிரவாகம் எடுத்துள்ளது...
பொதுவாக பத்தி எழுத்துக்கள் தனித்தன்மை வாய்ந்தவை. சுவாரஷ்யமிக்கவை.. ஒரு
உடனடி நண்பனாக நம்முடன் பேசக் கூடியவை... இன்றைய விரைவுலகத்தில் கூட அடுத்த பஸ்
வருவதற்கிடையிலோ அல்லது வரிசையில் காத்திருக்கும் நம் முறை வருவதற்கிடையிலோ
வாசித்து விடக் கூடிய தன்மையின. ஆயின் பத்தியை வாசகனை ஈர்த்துப் பிடிக்கும் வண்ணம்
எவ்வளவு தூரம் சுவாரஷ்யமாக சொல்ல முடியும் என்பதில்தான் அதன் வெற்றி
தங்கியிருக்கிறது என்பேன்...
நண்பர் அஷ்ரப் சிஹாப்தீன் ஏற்கனவே ‘’தீர்க்கவர்ணம்’’ என்ற ஒரு பத்தி எழுத்து நூலை தந்தவர்.
கவிதைகள்-சிறுகதைகள்-மொழிபெயர்ப்புக்கள்-சிறுவர் இலக்கியம்-பயண அனுபவம்-உண்மைக்
கதைகள் என 15க்கும் மேற்பட்ட நூல்களை தந்த எழுத்துலகில் நீண்ட அனுபவம் மிக்க இவரது மேற்படி
நூலை ஒரு கடுகதி ரயிலின் வேகத்துடன் படித்து முடித்துவிட்டேன்...
பொதுவில் பத்தி எழுத்துக்களின் தன்மைகளாக அதன்
எளிமை-தெளிவு-தனித்தன்மை-எடுத்துரைப்பு என்பனவே அவதானத்துக்கு உட்படுபவை.. அத்தகைய
தன்மைகளை அச்சொட்டாக பிரதிபலித்திருக்கும் இவரது எழுத்துநதி நம் மனதுக்குள்
சலசலத்து நகர்கின்றது.... அவற்றுள் ‘அனல் ஹக்’, ஆர்ப்பரிக்கும் ஆசைகள்’,
உன்புகழ் கூறாத சொல்லறியேன்’, போன்ற பத்திகள்
ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாசிக்க வைத்து விட்டன...
இதமான அதிகாலை வெயிலை தந்து மேலெழுந்து நண்பகலில் சுட்டெரிக்கும் வெயிலை தரும்
சூரியன் போல அஷ்ரப் சிஹாப்தீனின் சொல்முறைமையும் பத்தியை ஆரம்பிக்கும் போது இனிதான
குளுமையான நீரலையாக ஆரம்பித்து நடுவில் வெந்நீராய் கொதித்து வேகமாய் நகரும்
நதியாய் நடந்து செல்கிறது...
இந்த 26 பத்திகளையும் விவாதித்து சில கருத்தாடல்களை செய்ய மனம் விழைந்தாலும் இந்த
முகநூலில் அதற்கு இடமில்லை. இந்தப் பத்திகளை வாசிப்பதன் மூலம் நூலாசிரியரோடு
சிறிது நேரம் நம் வாழ்வியலின் அக-புற சூழலியல்கள் பற்றி பேசிக்கொள்ள முடிகிறது...
நூலாசிரியருக்கு நம் வாழ்த்துக்கள்.
எனக்குள் நகரும் நதி--- மனசுக்குள் ஒலித்தோடும் காகிதநதி
எனக்குள் நகரும் நதி- (பத்திகளின் தொகுப்பு) யாத்ரா வெளியீடு- ரூ-3௦௦/- Ashroff Shihabdeen- 0777303818..37, Sri Sidhartha
mawatha,Mabola,Wattala.
எழுத்துக்கு இறக்கை வைத்துப் பறத்தல்...
அல்ஹாஜ் ஏ.எச்.ஏ பஷீர் சேர் அவர்கள் ‘அதிபர் திலகம்’ .. கலைத்தீபம்- பல்கலை ஒளி போன்ற பட்டங்களையும் கலாபூஷனம் விருதையும் பெற்றவர்.
கல்வியியல் மற்றும் எழுத்தியல் துறைகளுக்கு அப்பால் சேர் அவர்கள் ஒரு நுண்கலைகள்
நிபுணர் ஆவார். கல்முனை பாளிகாவில் இவர் அமைத்துள்ள நிர்வாக கட்டிடம்- பசுமைப்
பூங்கா முதலான பல்வேறு நிர்மாணிப்புகள் அதற்குச் சான்றாக உள்ளன..மேலும் சமுதாயப்
பணியில் ஓர் அரசியல் செயற்பாட்டளாராகவும் இருந்தார். 2௦........ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலில்
ஒரு வேட்பாளராக போட்டியிட்டிருந்தார்... .
சேர் அவர்களின் 26 ஆண்டு நீண்டகால ‘அதிபர் சேவைக் காலம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் ஒரு பொற்காலமாக
வர்ணிக்கப்படுகிறது. கல்லூரியின் பருவகால வெளியீடுகள் அனைத்துக்கும் ஓர்
உந்துவிசையாக இருந்தவர் . 1975 களில் கல்முனை சாஹிறாவில் ‘அம்பு’ என்ற விஞ்ஞான சஞ்சிகைக்கு ஆசிரியராக
இருந்தவர்..சாய்ந்தமருதின் இலக்கிய வரலாற்றில் முதல் குறுநாவல் எழுதிய பெருமையும்
இவருக்குண்டு. எம்மைப் போன்ற பல எழுத்தாளர்களின் இலக்கியச் செயற்பாடுகளுக்கு
ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தியவர்..
எழுத்துக்கு இறக்கை வைத்துப் பறக்கும் துய்யோன் என்ற இலக்கிய வல்லூறின்
பின்னால் ஒருசிறு மின்மினியாக நாமும் தொடர விரும்புகிறோம்.... அத்துடன் அன்பான
எங்கள் குருவை மனதார வாழ்த்திப் பணிகிறோம்..
No comments:
Post a Comment