Friday, March 14, 2025

அஷ்ரபா நூர்தீன் - ஹூருலீன்கள்

 

 

கண்ணழகிகளின் கனன்றுகொண்டிருக்கும் கனவுலகம்

 

அஷ்ரபா நூர்தீனின் கவிதைகள் கனவுலகிலிருந்து அரண்டு வந்து நிஜத்தை நோக்கி நெருப்புக் கொளுத்தி எறிபவை... ஹூருலீன்களின் கண்களில் எரிமலையை நிரப்பி எச்சரிக்கும் தன்மையவை. சலிப்படைந்த சொற்களைத் தள்ளி வைத்து விட்டு எரிசாம்பலிலிருந்து எடுத்துத் தீச்சரம் கோர்ப்பவை.

ஹூருலீன்கள் தொகுதியின், பெரும்பாலான கவிதைகள் அவர் மனதின் வெப்புசாரங்களின் வெளிப்பாடுகள் எனலாம். அவர் எடுத்தாளும், எறிகணைச் சொற்கள்,அடுத்தடுத்த பக்கங்களில் ஆண்களைக் கொஞ்சம்  சினமுற வைக்கவே செய்யும். ..அதேசமயம் பெண்களுக்கும்,சிறுவர்களுக்கும் பேராதரவுக் கரம் நீட்டி தலைதடவி செல்கின்றன..

அஷ்ரபா,  தன் ‘ஆகக் குறைந்த பட்சம்’ என்ற  முதல் கவிதை தொகுதிக்குப் பின், 12 வருடங்கள் கவிதைக் காடேறிய பின்,  மௌனத்தவம் கலைத்து ஹூருலீன்கள் என்ற இத்தொகுதியை அளித்திருக்கிறார்.  100 பக்கங்களில் 73 கவிதைகள் அணிவகுத்து நிற்க, அவற்றின் மத்தியில் ஒரு கவிதைக் கம்பீரத்தோடு நடந்து வருகிறார்.. தொகுதியை வாசித்துச் செல்லும் போது, வாசகருடன் உரையாடிக் கொண்டே அவரும், கூடவே வருவது போல், இயல்பான சொற்களை தேர்ந்தெடுத்து பக்கங்கள் முழுவதும் தூவியிருக்கிறார்,  

ஆதரவற்ற பெண் வர்க்கத்தின் பல்லூழிகாலத் துயர்களையும், தவிப்புகளையும்,  காட்சிப் படுத்தும் தன்மையில் பல பெண்ணியல்வாதக் கவிஞர்களை விட்டும் வெகுவாக வித்தியாசம் காட்டுகிறார்.

ஹூருலீன்கள் என்ற தலைப்புக் கவிதை நம்முன் வைக்கும் சந்தேகங்கள் புறக்கணிக்க முடியாதவை. படைத்த இறைவனிடம் தன் முறையீட்டை சமர்ப்பிக்கும் ஒவ்வொரு பந்தியிலும் ஆற்றாமை தொனிக்கிறது.

‘’ நான் மட்டும் அவன் ஹூருலீனாய்//இம்மை மறுமை இரண்டிலும்  இருக்கப்  //பிரியம் கொண்ட போதிலும்//நானும் அவனது ஹூருலீன்தான் எனும்// பன்மைக்குள் ஒன்றாவதும்// இறைவா உனது கட்டளையின் பிரகாரமே//

மனைவியான பின்//கணவனைத் தவிர எவர் மனத்தும்// நுழைந்தின்பம் தராதவளா யிருக்க//கற்பை அவனுக்காகவே பாதுகாத்திருக்க// பலவீனப்பட்ட ஆண்கள் மனம்// அழகைக் கண்டு இவ்வுலகில் அலைபாய்தலும்// ஒன்றுக்கு மேல் துணைவியரை//ஹலாலாக்கிக் கொள்வதும்// பின்னரும் வீதிகளில்பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளாதிருப்பதும்// அசூயை ஆன மனதோடு// மனைவியை நெருங்குதலும் // சரிதானா இறைவா?//

இவ்வாறு கவிதை முழுவதும் முறையீடு செய்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்தப் பெண்களின் ஒப்பாரிக்கு இறைவனின் பதில்தான் என்ன... கனத்த மனதுடன் கவிதையின் பக்கங்களைக் கடந்து போனாலும், கவிதையும்  அது தந்த வலியும் விட்டுப் போவதாயில்லை.

’புனிதம் என்னும் நீர்க்குமிழ்ப் பறவை எத்தனைக் காலம் உடையாமல் ஊர் சுற்ற முடியும். இவர்களின் புனிதக் குடுவைகள் போலி இல்லறத்திலிருந்து வீசப்பட்டு வீதிகளில் விழுந்து நொறுங்குகின்றன. விழுந்த வீதியெங்கும் கற்பும் ஒழுக்கமும் அள்ளிக் குவித்த சாக்கடைப் போல நாற்றமெடுக்கின்றன.’’ என்ற,  தமிழக விமர்சகன் மா. சுகுமாரின் வார்த்தைகள் இவ்விடத்தில் ஞாபகம் வருகின்றன..

என்ன இருந்தாலும், தந்தை, சகோதரன், மகன் என்ற ஆண்பாலுயிர்கள் பெண்கள் மீது கொண்டிருக்கும் தூய நேசத்தைக் கருத்திற்கொண்டு, அடுத்த நூலிலாவது ஆண்கள் மீது அன்புப்  ‘பாலையூற்று அஷ்ரபா..  கொதிக்கும் எரி குளம்பையல்ல...

ஹூருலீன்கள்  தொகுதியின் ஒவ்வொரு கவிதை பற்றிய விரிவான உரையாடலுக்கு வேறு தளமும் இடமும் தேவை.  இன்னொரு சந்தர்ப்பத்தில் முயல்வோம்.

நாமிக் ரீஷ்மானின் அழகிய அட்டைப் பட வடிமைப்புடன், மிக நேர்த்தியான முறையில் நூலை, மகுடம் வெளியீடாக, ரூ; 600/-  என்ற குறைந்த விலையில் கொண்டு வந்திருக்கும், நண்பர் மைக்கல் கொலினை எவ்வளவும் பாராட்டலாம். தேவையானோர் 0774338878 உடன்  தொடர்புகொள்க..

0

தீரன்

 

 

 

 

 

 

 

அஷ்ரப் சிகாப்தீன்-கழுதை மனிதன்

 

அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’

நாடுகளை இணைக்கும் மொழிக் கயிறு

.......................................................................................................

 

மொழிபெயர்ப்புக்களினால் பல அரிய படைப்புக்கள் தமிழில் நமக்குக் கிடைக்கின்றன.  ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு, தான் பெயர்க்கும் படைப்பின் மீதான கவனம், அந்த  மொழி மீதான அறிவு, என்பன இன்றியமையாதன. இன்னும் தன் படைப்பு மொழியின் மீதும் ஆழ்ந்த நுண்ணறிவும் தேவையாகிறது.  முக்கியமாக, மொழிபெயர்ப்பாளனுக்குள்  ஒரு படைப்பாளன் இருத்தல் வேண்டும்..  இவற்றை  எல்லாம் உள்வாங்கிக் கொண்டுள்ள நண்பர் அஷ்ரஃப் சிஹாப்தீனின், மூன்றாவது மொழிபெயர்ப்பு நூலான ‘’கழுதை மனிதன்’  ஒன்பது சிறுகதைகளை உள்ளடக்கி, யாத்ரா வெளியீடாக வந்துள்ளது.  ஏற்கனவே,  ‘ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்’, ‘பட்டாம்பூச்சிக் கனவுகள்’ ஆகிய இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதை நூல்களை தந்தவர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

இவற்றை எல்லாம், இவர், ஆங்கில மொழி வழியாகவே பெயர்த்துள்ளதனால் இவை ஏறக்குறைய மூன்றாவது வடிகட்டல் தன்மையின என்றாகிறது.  மூலமொழியின்,  நிஜமான நுகர்வுணர்ச்சி இவற்றில் காணக் கிடைக்காவிட்டாலும்,  இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின், உணர்ச்சியை தமிழுக்குக் கடத்துவதில்  இம் மொழிபெயர்ப்பாளர் வெற்றி பெற்றுள்ளார் எனலாம்.

மூலப் படைப்பில் நடமாடித் திரியும் பாத்திரங்களின் பண்பாட்டுப் பின்புலங்களை  அறிந்து கொண்டு அப்பாத்திரத்தின் உரையாடல்களை தான் பெயர்க்கும் மொழிக்குள் கொணர்தல் என்பது ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு சிரமம் தரும் சவால் ஆகும்.   இந்தச் சவாலை இந்நூலாசிரியர், தன் நீண்டகால  எழுத்தனுபவத்தின்  மூலம் எதிர்கொண்டு இலாவகமாக கடந்து சென்றுள்ளார்.

இத்தொகுதியிலுள்ள, கழுதை வணிகம், பெட்டை நாய், கழுதை மனிதன் என்பன குறிப்பிடத்தக்க திறமையான தேர்ந்தெடுப்புக்கள் ஆகும். ‘’ஒரேயொரு எதிர்பார்ப்பு’’   என்ற இலங்கை எழுத்தாளர் புத்ததாச ஹேவகேயின்  கதை நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு மொழிபெயர்ப்பாகும். ஒன்பது கதைகளுமே ஒரு வகையில்  வாசக மனங்களை ஈர்க்கும் வகையில் அமைந்தவை.  

உலகின் இலக்கியங்கள் யாவும் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்வழியாக புதிய வெளிச்சத்தையும் அதன் தாக்கத்தினால் புதிய தடங்களையும் கண்டிருக்கின்றன. இங்கும், ஈரான், ஈராக், பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளின் கதைகளைத் தமிழ்ச் சாரளம் வழியாக நாம் தரிசித்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.  இந்த சாரளத்தை திறந்து தந்த மொழிபெயர்ப்பாளர் பன்னூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை எவ்வளவும் பாராட்டலாம்.

இந்நூலை, தன் இலக்கியப் பயணத்தில்  உந்துதலாகவும், உறுதுணையாகவும் நிற்கின்ற,  ‘காப்பியக்கோ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்,  கவிஞர்  அல் அஷூமத், கவிஞர் தாஸிம் அகமது,  கவிஞர் நாச்சியாதீவு பர்வீன்  ஆகியோருக்கு சமர்ப்பணம் ஆக்கி தன் விரிவான மனதை வெளிக்காட்டியுள்ளார் நண்பர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

 

அழகிய கருத்தாழமிக்க அட்டைப்படத்துடன், முன்னுரை, அணிந்துரை போன்ற ‘கரைச்சல்கள்’ ஏதுமின்றி,  இலகு வாசிப்புக்கு ஏற்ற வடிவில் 97 பக்கங்களுக்கு மட்டுப்படுத்திய அளவில், வெளிவந்துள்ளது ‘கழுதை மனிதன்’.  நாடுகளை இணைக்கும் இலக்கியக் கயிறு இது.. நூலாசிரியரின் மொழிபெயர்ப்பு பணிக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்... தொடர்புகளுக்கு,  0777 303 818.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Saturday, February 8, 2025

முல்லை முஸ்ரிபா

 

முல்லை முஸ்ரிபாவின்,

ஐந்தாம் மீராக் கிழவர் முதலியர் புதினம்

இதுவரை வாசிக்கப்படவில்லை

௦௦௦

 

ஏற்றலுக்கும், மறுதலிப்புக்குமான ஒரே பிரதி.

 

முல்லை முஸ்ரிபாவின், ஐந்தாம் மீராக் கிழவர் முதலியர் புதினம் இதுவரை வாசிக்கப்படவில்லை என்ற  பிரதி 31 பின் நவீனத்துவ  கடுகுப் புனைவுகளை தொகுத்து முல்லை வெளியீடாக வந்துள்ளஒரு, சிறுகதைத் திரட்டு ஆகும்.  ‘’.. கதையில்லாக் கதைகளாக  அல்லது கதையில் கதைகளாக அல்லது பெருங்கதையின் சிறு துண்டாகவோ கதையின் வெட்டுமுகமாகவோ இந்தப் புனைவுகளை ஒருசேர வாசித்த போது உணர்ந்தேன்...’’  என்று பொன்மீராவாக அவதாரம் எடுத்து தான் பிரசவித்த பனுவல்கள் குறித்து பிரதியின் ஆசிரியர் குறிப்பிடுவது போலவே இவற்றை நுகர்வோரும் உணர்வர் ..

 

ஒரு வேலைக்காரன் தடியைப் போல வயல் வெளியிலும், வாழ்க்கைக் காலத்திலும் தன் காலூன்றி நின்ற தன் தந்தையாருக்கும், எழுதித் தீரா நிலத்தில் அலைந்து திரியும் மீராக் கிழவர்களுக்கும் இதை சமர்ப்பித்திருக்கும் முல்லை முஸ்ரிபாவின், இந்த 31 பனுவல்களுக்குள்ளும் புகுந்து வெளியேறும் போது ஒவ்வொரு தடவையும் என் செட்டைகளில் புதுவர்ணம் பூசிக் கொண்டேன்..

 

‘’வெவ்வேறு தளத்தில் இயங்கும் குறியீடுகளை வைப்பதன் மூலம், அவை தங்களுக்குள் ஊடாடி உருவாகும் பிரதித் தன்மையை நம்பியே பின் நவீனத்துவ படைப்பு இயங்குகிறது..’’  என்பதற்கு அச்சொட்டான வாக்குமூலமாக இவரது பனுவல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன...

 

‘நனவிலி’  என்னும் பனுவலில், வரும், மென்சியின் ஆகர்ஷிப்பால்  சூம்பியின் மன வேக்காட்டில் நிகழும் எதிர்வினைகளை நுன்கோர்ப்புத் திறனுடன், ஆரம்பித்து, உணர்ச்சிக்கு மேம்பட்ட தளத்தில், நின்று, ஒரு எழுத்துச் சிலந்தியாய்  பின்னிக் கட்டிவிடுகிறார் முஸ்ரிபா..

 

‘புதிய அரிச்சுவடி- வீமாவர் குறிப்பு.’ –ஒரு, மொழியின் மீது சில வன்முறைகளை நிகழ்த்துகிற ஒரு  வித்தியாசமான வார்ப்பு ஆகும். இ-ஈ குறில் நெடில் பொருத்தமற்றவை என்றும், உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை மீதான சந்தேகமும், ஊனாவுக்கு மேலே ளானாபோட்டால் ஊவன்னா வராதுஎன்றும், அரவுக்கு மேலே குற்று வைத்தால் எப்படி ர் வரும்  என்பதுமாக கதை முழுவதும் வினாக்களும், சந்தேகமுமாய்.., புதிய அரிச்சுவடி ஒன்றை ஆக்கும்  வீமாவரின் எத்தனங்கள், இறுதியில், 22ஆம் நூற்றாண்டில் கையில் புதியதொரு  மின் அரிச்சுவடியை  அரங்கேற்றுவதில் வீமாவர்க் கிழவன் வெற்றியடைகிறார். கடந்த காலத்திற்குள் மாற்றுப் பார்வையுடன் பயணம் செய்ய வேண்டும் எனக்கருதும் ஒரு திறமையான நியாயப்படுத்தலை  இங்கு நிறுவியிருக்கிறார் முஸ்ரிபா..

 

‘மாயப் பேய் வெருட்டி’  என்பது, இத்திரட்டிலுள்ள ஒரு முக்கியமான நிர்மாணம் ஆகும். மொழியின், கட்டற்ற வெளிப்பாட்டுத்தன்மை, நுகர்பவனின் அறிதலில் ஒரு புதிய வாசிப்பையும், அக வயமாகவோ புற வயமாகவோ எந்த முடிவுக்கும் வராதிருப்பதையும்  எச்சரிக்கையுடன் நோக்குகிறது இது.  பனுவல்களிளிருந்து பழைய சொற்களை அள்ளி எறியும் போது, நாமும் தவிர்க்க முடியாவாறு வெளியே வந்து விழுகிறோம்..

 

இவ்வாறே, ‘ரபான்’ கதையில்,  அந்த ஒலியின் இசைவாக்கத்தில் ஒன்றிப் போன மஹ்தியின் மனம், தனக்கான  பண்பாட்டு வெளியில், ரபான் தரும் ஒலியை விருப்பத்துக்குரிய ஒரு பேசுபொருளாக மாற்றி விடுகிறது. அந்த தெய்வீக இசைக்காக ஏங்குகிறது.. மஹதியும் சுற்றுப்புற சூழல் குறித்த கவலைகள் அற்றுப் போய், தானே பக்கீர் ஆகி விடுகிறான்.... அருமையான ஒரு வார்ப்பு இது.

 

அழகிரிசாமியின் அணில், நாய் பார்க்கிற வேலை, முட்டை வாசி  என்னும், தலைப்புக்களில், நாமும் மேய்ந்து கொண்டிருக்கும் போது அவை முன் வைக்கும் பேசுபொருளுடன் அவற்றைப் பேசுவதன் தன்மை குறித்தும் பரிசீலனைசெய்ய வேண்டியிருக்கிறதை மறுதலிப்பதற்கில்லை. இக்கதைகளின் மையமான பொருள், ஆசிரியனுக்கு உரித்தானதா, ஆசிரியன் இக்கதைகளுக்கான சூழ்நிலைகளையும் கதாபாத்திரங்களையும் உருவாக்குகிறானா என்பதில் நமக்கு ஒரு புரிதல் ஏற்படவே செய்கிறது.. இக்கதைகளில், சூழலியல் பிறழ்வுகளை தான் ஒழுங்கமைத்த பாத்திரங்களில் இட்டு நிரப்புகிற, அற்புத  வேலையை செய்கிறார் என்றே தோன்றுகிறது.

 

ஒரு வாழ்க்கைக் கோடு, முட்டையன் முபாரக்கனோடு இணங்கிச் செல்லும் தன்மையை தனக்குரிய முட்டை மொழியில், எடுத்துரைக்கும் முட்டைவாசி ஒரு ஆச்சரியம் பொதிந்த கட்டுமானம் ஆகிறது. முட்டையில் வசிக்கும் நிலையில், முட்டைவாசி என்றும்,  முட்டையை வாசிக்கும்  நிலையில் முட்டை-வாசி  என்றும் பக்கங்கள் முழுவதும் முட்டையிட்டு  செல்லும் கதை சொல்லி, ஓர் எளிய முட்டைக்கருவை  இலகு  வடிவத்தில்  ஒத்துப்போகும் தன்மையுடன்  புரிந்து வைத்திருந்ததற்கு மாறாக வேறு நோக்கங்களுடனும்  அணுகலாம் என்ற சிந்தனையுடன் முட்டையை உருட்டிச் செல்கிறார்...ஒரு இலகு கதை சொல்லியாக முட்டை படாமல் போட்டியின் பெயரைக் காப்பாற்றி விடுகிறார்.

 

அமிர்தலிங்கம் லிங்கேஷன் எனும், லிங்கி பட்டுப் போன ஆலமரக் காலத்தை எண்ணி வர்ணக் கண்ணீர் விடும் பாங்கினை அதீதத் தனத்துடன் சொல்லுகின்ற முஸ்ரிபா என்னும் ‘கதை நிர்மானி’யின் வார்த்தைகள் 77 ஆம் பக்கத்தில் சறுக்கி விழுந்து, காயமுற்ற சொற்களை கொஞ்சம் ஆறுதல்படுத்தியிருக்கின்றன என்றே எண்ணத் தோன்றுகிறது.

 

‘’...  துண்டு துண்டானவை, தொடர்பற்றவை, தற்காலிக மானவை, நிலையற்றவை நேர் கோட்டுத்தனமற்றவை, பன்மியப்பாங்கு கொண்டவை, நேர்க்காட்சித் தளத்தவை ஆகியவை பின்னை நவீனத்தால் பாராட்டப்படுகின்றன.....’’ பேராசிரியர் முத்துமோகனின் இந்தக் கூற்றை நாம் முல்லை முஸ்ரிபாவின்,சினத்த முகத்தை அணிந்தவன்,ஏஐ. விருத்தர்,காலம் வீடு மரம் போன்ற  இயற்றுகைகளுடன் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவை,நமக்கு இயல்பாகவே  ஏற்படவே செய்கிறது,,  

 

தொடர்ச்சியற்றதாகக் கதைசொல்லும் முறை கொப்ப,  முஸ்ரிபாவின்,  இயற்றுகைகளை,  ‘’கதை’’ என்பதற்குள் வகைப்படுத்த முடியாதுதான். அவர் தயாரித்து அளித்துள்ள மனிதவார்ப்புக்கள் ஒவ்வொன்றும்,  தனித் தன்மையின. அவர்களின் மொழியை முழுவதுமாக அவரே மொழிந்து விடுவது இயற்கையை மீறும் செயலாகவும் இருக்கிறது. வருஷன், பெயின்ற் மாஸ்டர், வென்று தணியும் தாகத்தில் வரும் கோச் ஆகிய மானுட வார்ப்புகளுக்கு இன்னும் சிறிது  மொழிச் சுதந்திரம் கொடுத்திருக்க முடியும்..

 

இக் கதைத் திரட்டில் உள்ள, ‘ஐந்தாம் மீராக் கிழவர் கூற்று’  என்னும் இயற்றுகை ஒரு உச்சக்கட்ட  திரட்சி என்று கூறலாம். நிலச் சுவாவாந்தரான கதிர் மீரா என்னும் முதலாம் மீராக் கிழவன் –கற்பூரப்புல், குமாரபுரம் பகுதிகளில் குடியேறிய மக்கள் கூட்டத்தின் பிரதிநிதியான இரண்டாம் கதிர் மீராக் கிழவன்,  தண்ணீருற்றில் நிலை கொண்ட மக்கள் தொகுதியின் பிரதிநிதியான மூன்றாம் மீராக் கிழவன், 1950 களில் வாழ்ந்த மீராசாஹிபு அப்பா என்னும், நான்காம் மீராக் கிழவன், புதினம் பெருக்கெடுத்தலில் நிராசையாகிப் போன ஐந்தாம் மீரான், ஆகியோரின் பண்பாட்டசைவுகளை சித்தரித்து இவர்களை வரலாற்றின் நெடிய வாய்க்காலில் இணைக்கின்ற முயற்சியில், அலைந்து திரிந்த இக்கதை சொல்லிக்கும், நமக்கும்  1995க்குப் பின் ஒரு தகவலும் சரியாகக் கிடைக்கவில்லை எனினும் புதினம் நிறையப் பறந்து திரியும் பொன்னி வண்டுக்காவது கிடைக்கலாம்.

 

முல்லை முஸ்ரிபாவின், பனுவல்களில் உள்ள சுயமோகக் கூறுகளைக் கண்டறிந்து, அவற்றின், தளங்களின் மீதும், குறியீடுகளின் மீதும் ஆச்சரியப்படும்படியான கேள்விகளை எழுப்பி , அவற்றுக்கான விடைகளை தேடுவதில் வாசகனின் கவனக் குவிப்பு  மிகவும், தேவையுடையதாகிறது. வாழ்க்கைக் கோடுகளை வரைவதில்  இப்பிரதி உருவாக்குனர் எத்தகைய ஆச்சரியங்களை, நுகர்வோரில் செதுக்குகிறார் என்பது ஒரு முக்கிய நிலைப் பண்பு ஆகும்..

 

நூறு மீற்றர் ஓடுவது போல இந்நூலில் எல்லோராலும் ஓட முடியாது.. சாக்கினுள் வாசகனும், நூலாசிரியரும் காலை விட்டுக் கொண்டு,  நிறுத்தி நிதானித்து ஓடவேண்டி இருக்கிறது..வாசகரை தன் சக பயணியாகப் பாவிக்காமல், தன் போக்கினைத் தொடரும்படி பிரதி  முழுவதும் அதட்டுகிறார்.

 

சிறுகதைகள் பற்றி, இளைய எழுத்தாளர்கள் பலர் கொண்டிருக்கும் மாயாஜாலத்தை  இவரது இக்கதைகள் முற்றிலும் உடைத்து விடும் எனலாம். பனுவல்களின்    கட்டமைப்புகளும், ஏன் கருமுட்டைகளும் ஒழுங்கற்றதோர் ஒழுங்கமைப்பில் அடுக்கப்பட்டிருப்பதையும்  கண்டு கொள்ள முடியும்.  இவரது, எல்லா அளிப்புகளும் தொடர்ச்சியின்மையை விடாப்பிடியாகத் தொடர்வதையும்  புரிந்து கொள்ளவும் இயலும். 

 

முல்லை பப்ளிகேஷன் வெளியீடாக, லார்க் பாஸ்கரனின் வியத்தகும் அட்டை அமைப்புடன் வந்துள்ள ஐந்தாம் மீராக் கிழவர் முதலியர் புதினம் இதுவரை வாசிக்கப்படவில்லை  எனும் முல்லை முஸ்ரிபாவின் கதைத் திரட்டு இந்த காலப்பகுதியில் வெளியான உச்சபட்ச அதிநவீனக் கதைக் கோர்ப்பு என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.  மேலும், இந்த கதை நிர்மானங்கள் பற்றி, உரத்த தொனியிலான  உரையாடலுக்கும்  இடமுண்டு என்பதைக் கூறிவிடுகிறேன். .....   (தொடர்புகள்..077 5562475.)

௦௦௦

 

n  தீரன்.ஆர்.எம். நௌஷாத்.

 

 

Tuesday, October 1, 2024

எஸ். பாயிஷா அலி- பூந்துணர்

 

வரிகளுக்கூடான வாழ்க்கை மாற்றம்

 

கிண்ணியா, பாடசாலை தோழிகள் இருவர்  உருவாக்கிய   KGC 95  என்ற  வட்ஸ் அப்  குரூப் இன்று, கிண்ணியா மகளிர் மஞ்சரி ( KMM) என்ற  அரச அங்கீகாரம்  பெற்ற மகளிர் அமைப்பாக வியாபித்து, பெரு வளர்ச்சி கண்டுள்ள  வரலாறு  நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த அமைப்பானது, கிண்ணியாவில் நன்கு வேரூன்றி ஏறக்குறைய 250 மகளிரைக் கொண்டு, கிண்ணியாவில் கலை இலக்கிய சமூகப் பணிகளில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது..

குறைந்த வருமானம் உடைய பாடசாலை மாணவர்களுக்கு  பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்,  அனர்த்த நிவாரணம்,  இலவச சிங்கள, ஆங்கில  நிகழ்நிலை வகுப்புகள்,  ஆன்மீக வழிகாட்டல், புனித குர்ஆன் விளக்க வகுப்புகள்  எனப் பல்வேறு சேவைகளை வழங்கி வரும்  இந்த அமைப்பின், எதிர்கால நோக்கங்களாக,  மகளிருக்கான ஒரு நூலகம் அமைத்தல், முச்சக்கர வண்டிக்கான பெண் சாரதிகளை பயிற்றுவித்தல், அடைவுமட்டம் குறைந்த வகுப்புக்களை பாரமெடுத்து உயர்த்துதல்,  இஸ்லாமிய மரணச் சடங்குப் பயிற்சி நெறி, பெண்களுக்கான உளவியல் வலுவூட்டல் நிகழ்வுகள், முதியோர் பராமரிப்பு,  வைத்திய முகாம் மற்றும் இரத்த தான நிகழ்வுகள்.....இப்படி இன்னும் பலவிதமான ஆரோக்கியமான நிகழ்ச்சி நிரல்களை தம் வசம் வைத்துக் கொண்டிருக்கும்  இந்த  கிண்ணியா மகளிர் மஞ்சரி  வெளியிட்டிருக்கும் ஒரு சஞ்சிகை பூந்துணர் என்ற பெயரில்  மலர்ந்துள்ளது.. அவர்களின் ஒரு நல்ல சஞ்சிகைக்கான கனவு இன்று சாத்தியமாகியிருக்கிறது....

 

“வரிகளுக்கூடான வாழ்க்கை மாற்றம்”  என்ற மகுட வாசகத்தை அணிந்துகொண்டு,  அழகான தளக்கோலத்துடன்,  காத்திரமான –பல ஆக்கங்களுடன், பன்னூலாசிரியர், திருமதி, பாயிஷா அலி  அவர்களின் நெறியாள்கையில் கிண்ணியா மகளிரின் பல்வேறுபட்ட காத்திரமான ஆக்கங்களுடன், வெளிவந்துள்ளது.  

 

சஞ்சிகையில் உள்ள, அருமையான பல ஆக்கங்களில், றைஹானத்தும்மா ரீச்சர் என்னும் ஆளுமை, தன் பிள்ளைகளிடம் விதைத்து விட்ட  அந்த, திடவுறுதி, தன்னம்பிக்கை போன்ற உணர்வுகளை கவர்ச்சியான எழுத்து நடையில்  சொல்லியிருக்கும்  பாயிஷா அலியின் வனராணி என்ற  கட்டுரை உயிரோட்டம் மிக்கதாய் உள்ளது.  

 

குத்துக் கச்சான் என்ற பம்பரா நிலக்கடலையின், பூர்வீகம், வளர்ச்சி, விளைச்சல் பற்றி, அப்துல் ஹசன் ஆயிஷா அவர்கள் விபரித்துச் சொல்லும்  பெறுமதியான ஒரு ஆக்கமும் பூந்துணர் சஞ்சிகையை அலங்கரிக்கின்றது. கிண்ணியா சபீனா வின் இருள் விலகுமே... என்ற சிறுகதை ஒரு நல்ல நூலிழையில் பின்னப்பட்டிருந்த போதிலும், கதையின் பாத்திரங்கள்  கிண்ணியா நிலத்தின் மொழி நடையைப் பேசவில்லை என்பது ஒரு நெருடல்...

 

ரிக்காசா முகமத் நபாரின்,  ‘உறவாடுவோம்’ என்ற  உரைநடைச் சித்திரம்  மனித வாழ்வின் அன்பு,  உறவு, இயல்பு, போன்றவற்றை  இலகு நடையில் விபரித்துச் செல்கிறது. சன்ஷீதா ஜமீலின், உளத் தூய்மை என்ற ஆக்கம்   மானுட உளவியலை  இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் விளக்கும் ஒரு சிறந்த ஆக்கம் ஆகும்.

ஆசிரியர்களின் வாண்மை விருத்திச் செயற்பாடுகள் என்ற மாபெரும்  விடயதானத்தை நன்கு சுருக்கித் தந்துள்ளார் பிரதி அதிபர்,  சித்தி ஷிஹாரா  முகம்மது அலி   அவர்கள்..

 

பூந்துணரின்  முதன்மைப் பெண் ஆளுமைகள் வரிசையில்  முதலாவதாக,  மூதூர் முதல் பா.உ. அபூபக்கர் அவர்களின் பேர்த்தியும், பட்டதாரிக் கல்வியியலாளருமான, திருமதி சல்மத்துல் ஜெஸீலா நிஜாம்தீன் அவர்களுக்கு இந்த இதழில் கிரீடம் சூட்டிக் கௌரவம் செய்திருக்கிறார்கள். 

 

இவ்விதழில்,  ‘புகை’ என்ற தலைப்பில்,  வைத்திய கலாநிதி  ரஜியா முயீஸ் அவர்களின் அனுபவப் பகிர்வு  குறிப்பிடத்தக்க ஓர் ஆக்கம் ஆகும்.

 

ஓய்வுபெற்ற அதிபர், திருமதி ரைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்கள் எழுதியிருக்கும், கிண்ணியாவின் கல்வித் தாய் சித்தி ரீச்சர்  என்ற விவரணம், சித்தி ரீச்சரின், கல்விப் பணிகள், அவரது குணாதிசயங்கள் , போன்றவற்றை விபரமாக எடுத்துச் சொல்லும் ஒரு முக்கிய கட்டுரை ஆகும்.. கிண்ணியாவின் கல்வி வரலாற்றில் இவரைப் போன்ற மூத்த மகளிரின் வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

 

‘’சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கக் கூடிய  மனோதைரிய உள்ளவராக இருந்தால்தான்  சிறப்பான மாணவ சமுதாயத்தை  உருவாக்கலாம்...’’ என்று பிரகடனம் செய்யும்  திருமதி  நாதிரா ஷஹீத்  அமீன்பாரி  என்ற ஓய்வு நிலைப் பள்ளி முதல்வரின் நேர்காணல் எத்தனையோ காத்திரமான  கல்வியியல் கருத்துக்களையும், நிர்வாக மேம்பாட்டு ஆலோசனைகளையும் சொல்கிறது.  இந்நேர்காணலை திறம்படச் செய்துள்ளார், ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான் அவர்கள்.

 

கின்னியாச் செல்வி என எழுத்துலகில் பேர்பெற்ற  நூலாசிரியர்  கலாபூஷணம்,  ராஹிலா மஜீத் நூன்  என்பாரின், ‘’இல்லத்தரசிகளும், இல்லற வாழ்வும்’’ என்ற நூல் பற்றிய ஒரு அறிமுகத்தையும், நூலாசிரியரின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி நாம் அறியாத பல தகவல்களையும்  எஸ். மிஸ்ரியா அமீன் தந்துள்ளார்..

 

கிண்ணியா மகளிர் மஞ்சரி என்ற இயக்கம், துளிர்விட்ட வரலாறு தொடக்கம், மஞ்சரி ஆற்றிய, ஆற்றிவரும்   பணிகள் சேவைகள் பற்றி விலாவாரியான  ஒரு கட்டுரையை வரைந்துள்ளார் இவ்வமைப்பின் உப தலைவர்  டாக்டர்  மு.ச. நஸ்லுன் சிதாரா அவர்கள்.

 

பாடசாலைக் கல்வி தொடர்பாக  சம காலத்தில் பேணப்பட வேண்டிய  சிறுவர் உரிமைகள் பற்றி, சட்டத்தரணி எஸ். நசீரா நஜாத் அவர்கள் பெறுமதியான, விரிவான  ஒரு ஆக்கத்தை தந்துள்ளார். யு. கிசோர் ஜகான் என்பார் ‘’பெண்களின் புலம்பல்’’ என்ற சுவாரஸ்யமான ஒரு தலைப்பில் பெண்கள் அன்றாட வாழ்வில் எதிகொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், தொல்லைகளைப் படியளிட்டு அவற்றுக்கான தீர்வுகளையும்  அழகுறத் தந்துள்ளார்.

 

பாடசாலையில் வைத்து பூப்பெய்தும்  ஒரு மாணவியின் உடல், உள வலிகளை மிக அற்புதமான மொழி நடையில் சொல்கிறது   கிண்ணியா பாயிஷா அலியின், ’புரிதல்’ என்ற சிறுகதை, அந்த மாணவியின் வேதனை, அவள் எதிர்கொள்ளும் வினைகள் போன்றவற்றை மையச் சரட்டாகக் கொண்டு  கதையை இலகுவாக நகர்த்தியிருக்கிறார் ஆசிரியர்.

 

மற்றும், பாத்திமா  முஸ்னா பவாஸின் ‘சமையல் குறிப்பு’  உட்பட பல நல்ல கவிதைகளையும் உள்ளடக்கி  வெளிவந்துள்ள பூந்துணர் சஞ்சிகை நானூறு ரூபாய் விலையில் 71 பக்கங்களில் மிக அழகான தோற்றப் பொலிவுடன் கிடைக்கிறது.

 

கிண்ணியா மகளிர் மஞ்சரிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

 

Wednesday, July 10, 2024

நபீல்/இக்பால் அலி/கப்பார்

 

நபீலின், தென்னம்படல் மறைப்பு.

நடந்த நாட்களின் நூதனசாலை

 

என்னத்தை எழுதவில்லை நபீல்..?  காகிதங்கள் முழுவதும் நினைவு மேகங்கள் கொண்டு கடந்த காலங்களை, பெருமழையாகப் பெய்து தள்ளியிருக்கிறார்.. அந்த ஞாபக வெளி முழுவதும் நம்மையும் அழைத்துச் செல்கிறார். 

 

நூலின் ஒவ்வொரு தாளாகப் புரட்டப் புரட்ட, ஒரு கருப்பு வெள்ளை ஆல்பத்தின் செருகேடுகளைப் புரட்டிப் புரட்டி வியக்கும் உணர்வில் இலயித்து விட்டேன்.  

நடந்த நாட்களின் நூதனசாலையின் ஒவ்வொரு அறையாக, நபீலின் எழுத்துநடை  திறந்து காட்டுகிற நுட்பத்தில் மெய்மறந்து,  சாப்பிடக் கூட மறந்து நூலை வாசித்து முடித்து விட்டேன். என்னடா நபீல்.. உன் கணினி, சொற்களை அள்ளி எறியும் கடலா என்ன...அலையலையாக ஞாபகங்களை அள்ளியள்ளி வீசுகிறதே..

 

 

வண்டில் மாடு மூத்தப்பா, நைனார் மாமா, புள்ளிம்மா, வானொலி மாமா, இலங்க மஸ்தார்,  ஆலாத்திக்காரி,  குழந்தம்மா, என்று எங்கள் மண்ணின் மூத்த மைந்தர்களை மறுபடி உயிர்ப்பித்துக் காட்டுகிறார். ஈர்க்கில் மிட்டாய் ,சோத்துக்களறி, பணியாரம், கிழங்குப் பொரியல், கஞ்சிக் கிடாரம் குஞ்சுச் சோறு,  என்று மீண்டும் வாயூற வைக்கிறார்.  கடற்கரைப்பள்ளி, பிச்சிப்பிலாவடி, சலூன்கடை, சந்தை, தேநீர்கடை, கக்கூஸ், கடல்வாடி முழுவதும் நடந்து திரிகிறார். பூணாரம்,புள்ளக்கூடு,பாய், கிடுகு வேலி, கிறுக்குச் சித்திரம், லக்ஸ்பிறே பசு, என்று மறைந்த,மறந்த பொருட்களைக் காட்டி  அதிசயம் செய்கிறார். அத்துடன் பேய் வரும் என்று வேறு பயமுறுத்துகிறார்.

 

‘’... கற்பனைகளைக் காண்பிக்கவில்லை,  நமது முகத்தை  நாமே பார்க்கும்  ஒரு புகைப்பட ஆல்பத்தை  விரித்துப் போடுகிறேன். என்னை என்னிடமே மீட்டுத் தந்த  என் பால்ய கால  நினைவுகளை  உங்களிடம் ஒப்புவிக்கிறேன்..’’ என்று நபீல் சொல்வதுதான் உண்மை. நீ இன்னுமின்னும் ஒப்புவிக்க வேண்டும், அதைஎல்லாம் நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.. இதன் இரண்டாவது பாகத்தை இன்னும் எழுதவில்லையா நீ?

 

பத்திரிகையில் இத்தொடர் வரும்போது இரசித்து வாசித்து வியந்தவன் நான்.  காரணம், பத்தி எழுத்துக்களை ஒரு சிறுகதைக்குரிய சாயலில் புதுமையான நடையில் அவர், தன் புதினங்களைச் சொல்லியிருந்த விதம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.

 

 

ஏற்கனவே,2010 இல், காலமில்லாக் காலம்,2011 இல், எதுவும் பேசாத மழை நாள்  ஆகிய இரு கவிதை நூல்களைத் தந்தவர் நபீல். கிழக்கு மாகாண சாகித்திய விருதும் பெற்றவர்.

 

நண்பர் பிரவீனின், அழகிய அட்டைப் படமும், நேர்த்தியான தளக் கோலமும் கொண்டு, 286  பக்கங்களில்,  அதிசயங்களை அடைத்து வைத்திருக்கும் இந்நூல், ஒரு காலச்சுவடு வெளியீடாகும். ரூ: 1200/ விலையில் கிடைக்கும் இந்நூல் அடுத்த தலைமுறையின் அதிசய புதையல் ஆகும். வாழ்த்துக்கள் நபீல். (0772858095)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அப்பாவின் டயரி-

இது கப்பாரின் உயிரி.

 

எஸ்.ஏ. கப்பார்- 1977 களில் உற்பவித்துப் பாய்ந்த ஓர் எழுத்து ஆறு. எழுத்தாளர், சஞ்சிகை ஆசிரியர், பத்திரிகையாளர், வங்கி மேலாளர் எனப் பல முகங்கள் கொண்டவர்.  வெண்ணிலா எனும்  காலாண்டிதழை கடந்த 2021 முதல்  நடத்தி வருகிறார்.  இவர் வங்கித் தொழிலிருந்து ஓய்வு பெற்றபின் பல்வேறு ஊடகங்களில் எழுதி வந்தாலும், தமிழன் பத்திரிகையில் வெளியான தன் 15 சிறுகதைகளைத் தொகுத்து ‘அப்பாவின் டயரி ‘ என்ற இந்நூலை கொணர்ந்துள்ளார்.  

 

தன் வாழ்வியலில் கண்டு , கேட்டு , அனுபவித்த மானுடவியலின் பல்வேறு கூறுகளை எழுதுவது இவரது இயல்பான சுவாபம் ஆகும்.  இத்தொகுப்பிலுள்ள பல கதைகள் இதற்கு சான்றாக உள்ளன.  மானுட வாழ்வின் இழிகுணத்தை சுட்டெரிக்கின்ற தன்மை இவரது கதை நெடுகிலும் ஊடுபாவிச் செல்கின்றன.. தவிர  மானுட வாழ்வின் சில மென்மையான பக்கங்களை, அவர் தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு,  தொட்டுச் செல்வதிலும் அவரது எழுத்தனுபவம் நன்கு வெளிப்பட்டு நிற்கிறது

 

‘அப்பாவின் டயரி’ என்ற கதை உயிரோட்டமும் உணர்வோட்டமும் கலந்து வாசகர் மனங்களை கதையின்பால் இறுகப் பிணைத்து வைக்கிறது. தாய் வீடு, அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும், போன்ற கதைகள் அத்தகைய தறியில் அழுத்தமாக நெய்யப்பட்ட அழகான சிறுகதைகளாகப் பரிணமிக்கின்றன.  சமூக சேவகி, தோழி ஜெனீரா, ரியுசன் மாஸ்டர் போன்ற கதைகளில்  கப்பார் தன் எழுத்தை சமூகப் பொறுப்புடன் முன்னிறுத்தி அவற்றை ஒரு சிற்பம் போல, தேர்ந்த ஒரு சிறுகதையின் வடிவம் தப்பாது செதுக்கியுள்ளார்.

 

தொகுப்பிலுள்ள  15   கதைகளும் நம்முடன் வாழுகிற நம்மவர்களின் இயல்புகளையே மையச் சரட்டாகக் கொண்டு நகர்ந்திருக்கின்றன..  சின்னச் சின்னக் கதைகளைத் தேர்ந்து சின்னச்சின்ன மொழிநடையில்  சிக்கலின்றி நேரடியாக கதை சொல்லியிருக்கும் தன்மையில் கப்பார் ஓர் எழுத்தாளராக வெற்றி பெற்றிருக்கிறார்.

 

அழகான வடிவைப்பும், தள நேர்த்தியும்  கொண்டு வெண்ணிலா பதிப்பக வெளியீடாக 105  பக்கங்களில்  ரூ;500  விலையில் கிடைக்கிறது இந்நூல்.

நூலை  காலம்சென்ற தன் அன்பு மனைவிக்கு சமர்ப்பணம் செய்திருப்பது மனதை நெகிழச் செய்கிறது.  ஒவ்வொரு கதைக்கு முன்னும் அக்கதை வெளியான தமிழன் பத்திரிகை நறுக்கை இணைத்திருப்பது ஒரு புது முயற்சி ஆகும்.

 

ஒரு கவிஞன், பத்திரிகாசிரியராக அறிந்து வைத்திருந்த நண்பர்  எஸ்.ஏ. கப்பார் அவர்களை இந்நூல் வாயிலாக ஒரு அழகான ‘கதை சொல்லி’யாகவும்   அறிந்து வியப்படைந்தேன்.  அன்பு வாழ்த்துக்கள் கப்பார். தொடர்புக்கு..07 7 6 9 6 8 6 7 1. 

 

 

 

 

 

 

 

 

இக்பால் அலியின் ‘காலத்தின் கால்கள்’

 

நாடறிந்த ஊடகவியலாளர் , கவிஞர், விமர்சகர், போன்ற பல்வேறுபட்ட துறைகளில் இயங்கி வரும் இக்பால் அலியின் புதிய வெளியீடாக வந்துள்ளது ‘காலத்தின் கால்கள்’  எனும் திறன் நோக்கு நூல்.   

 

இக்பால் அலி, தன்  தமிழிலக்கியப் பணியில்  நூற்றுக்கணக்கான நூல்களுக்கு திறன் நோக்குகள்/விமர்சனங்கள்  எழுதியுள்ள போதும், இந்நூலில், அவர் தேர்ந்தெடுத்த   34 நூல்களின் விமர்சன/திறனாய்வு கட்டுரைகள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன.  தனக்கே உரித்தான ஓர் அகன்ற பார்வையில் இந்நூல்களை எடை போட்டுப் பார்த்துள்ளார் இக்பால் அலி.  இக்கட்டுரைகள், சுடர் ஒளி, நயனம்,ஞாயிறு தினக்குரல், தினகரன் வாரமஞ்சரி, தீம்புனல்  ஆகியவற்றில் பிரசுரம் பெற்றவை ஆகும்.

 

இக்பால் அலியின் இலக்கியப் பணிகளை, அவரது ஊடகப்பணி பெருமளவு விழுங்கிய போதிலும் அவற்றிலிருந்து விடுபட்டு இலக்கியத்துக்கும் நேரம் ஒதுக்கி இந்நூலை அவர் வெளிக் கொணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது.  ‘’..எனது,  மனதைத் தொட்ட  சில நூல்களை  நுகர்ந்து சுவைத்து  அந்நூல்களில் மறைந்துள்ள  மாபெரும் அழகுகளை  பளிச்சென்று சூரிய வெளிச்சம் போல  தெரியுமளவுக்கு துலங்கச் செய்துள்ளேன் .’’ என்று கூறுகிறார்.

 

எம்.ஏ. நுஹ்மானின் ‘கவிஞன்’ கவிதை இதழ், சாதியா பௌசரின்,’மலையக கவிதைகளில் பெண்களும், சிறுவர்களும்’ , ரா.நித்தியானந்தனின், ‘இரவைத் தேடும் நிழல்’, பண்டிதர். ச.வே. பஞ்சாட்சரத்தின் ‘விலங்குப்பறவை’,  ஜின்னாஹ் ஷரிபுத்தீனின், ‘பனிமலையின் பூபாளம்’, எஸ்.ஏ.இஸ்ஸத் பாத்திமாவின்  ‘புதையலைத் தேடி’, எம்.ஐ.எம். அஷ்ரப்பின் ‘இன்னும் உயிரோடு’, எஸ்.யூ. கமர்ஜான்  பீவியின் ‘நான் மூச்சயர்ந்த போது’,  நா.வை. குமரி வேந்தனின்  ‘தமிழ் எழுச்சி’, வெலிகம ரிம்ஸா முகம்மதின்  ‘எரிந்த சிறகுகள்,’ கலாநிதி செ. சுதர்சனின் ‘காலிமுகத்திடல்’, நா.வை. குமரி வேந்தனின்  ‘மொழி-பண்பாடு-வரலாறு, மீட்பு-காப்பு-வளர்ப்பு’, இரா.மகேஸ்வரனின்  ‘அமைதி வழியும் மதுர மொழியும்’, மருதநிலா நியாஸின்  ‘வேர்கள் அற்ற மனிதர்கள்’,  இராசையா மகேஸ்வரனின் ‘ஆண்ட பரம்பரை’, நா.வை. குமரி வேந்தனின்  ‘தமிழியற்  சான்றோர்’, கவிஞர் யோசுவாவின்  ‘கரிகாட்டுப் பூக்கள்’,  முப்தி யூஸுப் ஹனிபாவின்  ‘ஆசிரியம் ஓர் இறைவணக்கம்’, எஸ்.ஆர். தனபாலசிங்கத்தின் ‘நீங்களும் எழுதலாம்’,

 

தீரன்.ஆர்.எம். நௌஷாத்தின்   ‘முத்திரையிடப்பட்ட மது’,  ஏ.பீர்முகமதுவின் ‘இளம்பிறை எம்..ஏ. ரஹ்மான்- இருட்டடிப்புக்களை மீறி வெளிச்சத்துக்கு வந்தவர்’,  பவானியின்  ‘சில கணங்கள்’,  பேராசிரியர்.எம்.எஸ்.எம். அனஸ், கலாநிதி வீ. அமீர்தீன்,  ஏ.ஜே.எஸ். வசீல் ஆகியோரின்,  ‘இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும்’,  மஷூரா சுஹூர்தீனின்  ‘நதிகளின் தேசிய கீதம்’,  பாவலர் பஸில் காரியப்பரின் ‘ஆத்மாவின் அலைகள்’, எம்.எம்.எம். நூறுல் ஹக்கின் ‘சிறுபான்மையினர் சில அவதானங்கள்’,  எஸ்.நஸீருதீனின் ‘நல்லதோர் வீணை செய்தே’,  தெ.கி.ப. கழகம் வெளியிட்ட பேராசிரியர் ஆ.மு.உவைஸ் பற்றிய சிறப்புமலரான ‘மர்கசி’, ரா. நித்தியானந்தனின் ‘19ஆம் நூற்றாண்டின்  இந்தியத் தமிழரின்  இலக்கை நோக்கிய  அசைவியக்கமும்,  தள்ளல்-இழுவை காரணிகளின்  செயற்பாடும்’, நுஹா பின்த் ரிஸானாவின் ‘யூஜி’, மைக்கல் கொலினின்  ‘சிலுவைகளே சிறகுகளாய்’, மருதூர் கொத்தனின்   ‘மோகனம்’, ஏ.பீர்முகம்மதின்  ‘திறன் நோக்கு’,  வேலணையூர் ரஜிந்தனின் ‘பேரன்பின் படிமங்கள்’

இவையே இக்பால் அலி தேர்ந்தெடுத்த நூல்களின் பட்டியல் ஆகும்.

 

 

இவ்வளவு பெறுமதிக்க நூல்கள் பற்றிய குறிப்புக்கள் அடங்கியுள்ள  இந்நூலில், ஆங்காங்கே காணப்படும் சில எழுத்துப்பிழைகள்  வாசிப்பில் உறுத்துகின்றது என்பதையும்,  பொருளடக்கத்தில் நூலாசிரியர்களின் பெயர்களோடு நூல் பெயரையும் பக்க எண்ணையும் குறிப்பிட்டிருந்தால் விரைவான தேடலுக்கு உதவியாய் இருந்திருக்கும் என்பதையும், கட்டுரை ஆரம்பத்தில்  ஒவ்வொரு நூலினதும் முன் அட்டைப்படத்தை இட்டிருந்தால் இன்னும் இதன் அழகுப்பெறுமானம் கூடியிருக்கும் என்பதையும்  சொல்லாமல் இருக்க முடியவில்லை.

 

அம்னா பதிப்பகம் மூலம் அழகிய அட்டையுடன் 155 பக்கங்களுடன் கனதியாக வெளியாகி ரூ. 800/-  விலையில் கிடைக்கிறது இந்நூல். நூலின் பின்னட்டைக் குறிப்பை தீம்புனல் ஆசிரியர் சூரன்.ஏ. ரவிவர்மா அவர்கள் எழுதியுள்ளார்.  தேவையானோர், 0763744700 இலக்கத்துடன் தொடர்பு கொள்க.

Wednesday, August 16, 2023

செங்கதிரோன். த.கோபாலகிருஷ்ணன்---யாவும் கற்பனையல்ல-

 யாவும் கற்பனையல்ல- 

சிறுகதைத்தொகுப்பு-

செங்கதிரோன். த.கோபாலகிருஷ்ணன்


மனங்களில் உச்சரிக்கும் எழுத்து மந்திரம்,


  என் அபிமானத்துக்குரிய எழுத்தாளரும், நாடறிந்த இலக்கியகர்த்தாவும் , இதழியலாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான செங்கதிரோன் திரு. த. கோபாலகிருஷ்ணன் அவர்களின் இந்த சிறுகதைத்தொகுப்பை வாசித்த பின், என் மனதில் பொங்கிய அருட்டுணர்வின் சில கூறுகளை ஒரு வாசகனாக இங்கு பதிவு செய்து கொள்கிறேன். 

இத்தொகுப்பில் உள்ள 13 கதைகளையும் சிறுகதைகளுக்குரிய பண்புகள் மாறாமல், தனக்குரிய இயல்பான எழுத்து நடையில் ஒரு தவ நிலையில் இருந்து படைத்து தந்திருக்கிறார் இந்த எழுத்து வித்தைக்காரர். 

சிறுகதை என்ற சொல்லுக்கு அகராதிப் பொருள் போல, 13 சிறுசிறு, கதைகளை தந்துள்ள இந்தப் படைப்பாளியின் எழுத்தில்,ஆங்காங்கே தூவப்பட்டுள்ள ஏதோ ஒரு மந்திரப் பொடி நம்மை அவரின் எழுத்தின் மீது வசியம் செய்து இடையறாது வாசிக்கவும்,  இவருடனே வசிக்கவும் செய்து விடுகிறது.. 

தேர்ந்த கதைக் கருக்களை நேர்த்தியான முறையில் வடிவமைத்து, தன் நிர்மாணங்களை தகுந்த முறையில் கட்டமைத்து வாசகர்முன் வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்த எழுத்து எந்திரி.

எழுத்துத் தொழிலில் நீண்டகால  அனுபவச் செழுமை காரணமாக தன் கதைகளை மிகவும் இலாவகமாக சொல்லிச் செல்லும் இந்தக் கதைசொல்லியின் வாழ்வியலின் பல்வேறுபட்ட அனுபவக் கூறுகளும், ஆழமான வாசிப்பின் அறிவுக் கூர்மையும், இத் தொகுப்பில் விரவிக் கிடப்பதை நம்மால் உணரக்கூடியதாக உள்ளது . 

இந்தக்கதைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து ஆராய்ந்து அவற்றின், வார்ப்புத் திறன், சொல்முறைமை, கையாண்ட உத்திகள் எனப் பேசிச் செல்ல  எத்தனையோ விடயங்கள் உள்ளன.அகண்ட தமிழிலக்கியப் பரப்பில் அவைபற்றிப் பேசப்படவேண்டிய அவசியமும் உள்ளது.  

தவிரவும், இவருக்குள் இயங்கும் ஒரு சமூகப் போராளியின்,ஆக்ரோஷ வெளிப்பாடு, சில கதைகளில் முனைப்புக் காட்டுகிறது. அதே சமயம்  அவர்  அக்கதைகளை ஒரு, தீவிரப் போக்கில் சொல்லுகிற தன்மை, செங்கதிரோனின் சமுக அக்கறையை வெளிக்காட்டுகிறது. மட்டுமன்றி, சமூகக் கொடுமைகளுக்கெதிராகவும்,தனிமனித சிறுமைத் தனத்துக்கு எதிராகவும் உரத்துக் குரல் கொடுக்கும் தன்மைகளும் வெளிப்பட்டு நிற்கின்றது.  ‘துரோகி’, ‘சகோதரத்துவம்’, போன்ற கதைகளில் இந்த பண்பினை காணக் கூடியதாக உள்ளது.

அதே போல, அவர் சில  கதைகளைச்  சொல்லிச் செல்லும் போக்கிலேயே தன், இயல்பான  நகைச்சுவையையும், குறும்புத் தனத்தையும் அளவோடு கலந்து தெளித்து விடுகிற பாங்கினை,  நன்றாக இரசிக்கவும் முடிகிறது.  ‘குடை கவனம்’ என்ற கதையில் மனைவிக்கு கொடுக்கின்ற ‘குறும்புக்கல்தா’வும், ‘ஒரு குழந்தையின் அழுகை’ கதையின் முடிவில் வாசகருக்குத் தரும் அதிரடி முடிவிலும் நம்மை புன்னகைக்க வைத்துவிடுகிறார் இந்த எழுத்துக் குறும்பர். 

மேலும், “அந்த ஏவறை சத்தம்’, ‘கூடு விட்டு’, ‘யாவும் கற்பனையல்ல”,போன்ற கதைகள்,  அமானுஷ்யத் தன்மையின எனலாம். இந்தவகையான கதைக் கருக்களை தமிழ்ச் சிறுகதை தளத்தில் பரிசோதித்துப் பார்த்தவர்கள் சொற்பளவினரே. இதில், செங்கதிரோன் தன் மாயத் தமிழ் நடையையும்,  கைவால்யமான எழுத்தனுபவத்தையும் கொண்டு மிக இலாவகமாக இக்கதைகளை நகர்த்தி, தன்  அனுபவ உணர்வை வாசகருக்குள் தொற்றிவிடச் செய்வதில் வெற்றி பெற்று விடுகிறார். இக்கதைகள் தரும் விசித்திர நுகர்வை வாசகரால் இலகுவில் கடந்து விட முடிவதில்லை.

சமுக அழுக்குகள் மீது வெஞ்சினம் கொண்டு வாழுகிற, இந்த எழுத்துப்போராளி,  ‘ஊர்மானம்’ என்ற கதையில், வேலாப்போடியின் உருவகத்தில் தானே வந்து, சமூகத்திடம் உரத்துக் கேட்கிற கேள்விகளுக்கு தமிழ்-முஸ்லிம் சமுகத்தில் யாரிடமும் பதில் இல்லை. 

‘அங்கிருந்து வந்தவர்கள்’ என்ற கதை, விடுதலைப்போராளிகளின் கட்டுப்பாடு சிலபோதில் கைமீறிச் சென்று பரிதாபத்துக்குரிய ஓர் இளைஞனைப் படுகொலை செய்வதில் வந்து முடிகிற துர்ப்பாக்கிய சம்பவம் ஒன்றை பதைபதைக்க வைக்கும் மொழியில் விபரிக்கிறது. விறுவிறுப்பான எழுத்தில் அதே சமயம் நிதானமான முறையில் இக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் ஆசிரியர்..

இத்தொகுதியில்,உள்ள, ‘கரப்பத்தான் பூச்சி’  என்ற கதை, இந்நூலின் தலைப்பாக போடக் கூடிய அளவு முக்கியமான ஒரு நட்சத்திரக் கதையாகும்.  இரு கரப்பத்தான் பூச்சிகளின் புணர்வில், மகாபாரதப் புராணத்தின் ஒரு சம்பவத்தைக் கொண்டு வந்து கச்சிதமாகப் பொருத்தி, கடைசியில், //இரு உயிர்கள் கலவி இன்பத்தில் ஈடுபட்டிருக்கையில், அதனைக் குழப்புவது அல்லது கெடுப்பது சாபத்துக்குரிய பாவம்.// என்று கதாசிரியர் அவற்றைத் தப்பிக்க வைப்பதுவும், பாண்டு மன்னனை மறுவாசிப்பு செய்துள்ள வகையிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இந்தப் படைப்பாளியின் உயர்ந்த, இளகிய  மனோபாவத்தின் போற்றுதலுக்குரிய பண்பும் இக்கதையில் இழையோடி நிற்கிறது. .. 

பொதுவாக, இத்தொகுப்பிலுள்ள கதைகள், சொல்நேர்த்தியிலும், எடுத்தாண்ட கருப் பொருள்களாலும் வெற்றி பெற்று விடுகின்றன. வாசகர் மனதிலும் தங்கி விடுகின்றன..ஆசிரியர் தன் கதைகளை,  தான் வாழும் சூழலை ஒட்டியே நகர்த்துவதால் கதைகள் மிக யதார்த்தமான தன்மையை பெற்று, வாசகரை கதையோடு ஒன்றிக்க வைத்து விடுகின்றன. இது ஆசிரியருக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்,  தவிரவும், சிறுகதைகள் பற்றிய ஆசிரியரின் தெளிவான பார்வையையும் இது வெளிக்காட்டி நிற்கிறது.  இத்தொகுப்பில் உள்ள பலகதைகள்  பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளமை அதற்குச் சான்றாகவும் அமைகின்றன. 

கற்பனைப் புனைவுகளுக்கு ஒப்பனைப் பூச்சு தீற்றி தமிழ் வெளியில் சஞ்சரிப்போர்  மத்தியில், இவை யாவும் கற்பனையல்ல என்று யதார்த்தச் சிறகுகளைப் பொருத்தி தன் படைப்புலகில் தனித்துவமாகப் பறக்கின்ற செங்கதிரோன் என்ற எழுத்து விஞ்ஞானியை மனமுவந்து பாராட்டுகின்றேன். வாழ்க அவர் எழுத்துப் பணி..

தீரன். ஆர்.எம். நௌஷாத்.

2023.07.15