கண்ணழகிகளின் கனன்றுகொண்டிருக்கும் கனவுலகம்
அஷ்ரபா நூர்தீனின் கவிதைகள் கனவுலகிலிருந்து அரண்டு வந்து நிஜத்தை
நோக்கி நெருப்புக் கொளுத்தி எறிபவை... ஹூருலீன்களின் கண்களில் எரிமலையை நிரப்பி
எச்சரிக்கும் தன்மையவை. சலிப்படைந்த சொற்களைத் தள்ளி வைத்து விட்டு
எரிசாம்பலிலிருந்து எடுத்துத் தீச்சரம் கோர்ப்பவை.
ஹூருலீன்கள் தொகுதியின், பெரும்பாலான கவிதைகள் அவர் மனதின்
வெப்புசாரங்களின் வெளிப்பாடுகள் எனலாம். அவர் எடுத்தாளும், எறிகணைச் சொற்கள்,அடுத்தடுத்த
பக்கங்களில் ஆண்களைக் கொஞ்சம் சினமுற
வைக்கவே செய்யும். ..அதேசமயம் பெண்களுக்கும்,சிறுவர்களுக்கும் பேராதரவுக் கரம்
நீட்டி தலைதடவி செல்கின்றன..
அஷ்ரபா, தன் ‘ஆகக் குறைந்த
பட்சம்’ என்ற முதல் கவிதை தொகுதிக்குப்
பின், 12 வருடங்கள் கவிதைக் காடேறிய பின், மௌனத்தவம் கலைத்து ஹூருலீன்கள் என்ற இத்தொகுதியை
அளித்திருக்கிறார். 100 பக்கங்களில் 73 கவிதைகள்
அணிவகுத்து நிற்க, அவற்றின் மத்தியில் ஒரு கவிதைக் கம்பீரத்தோடு நடந்து
வருகிறார்.. தொகுதியை வாசித்துச் செல்லும் போது, வாசகருடன் உரையாடிக் கொண்டே அவரும்,
கூடவே வருவது போல், இயல்பான சொற்களை தேர்ந்தெடுத்து பக்கங்கள் முழுவதும்
தூவியிருக்கிறார்,
ஆதரவற்ற பெண் வர்க்கத்தின் பல்லூழிகாலத் துயர்களையும்,
தவிப்புகளையும், காட்சிப் படுத்தும் தன்மையில்
பல பெண்ணியல்வாதக் கவிஞர்களை விட்டும் வெகுவாக வித்தியாசம் காட்டுகிறார்.
ஹூருலீன்கள் என்ற தலைப்புக் கவிதை நம்முன் வைக்கும் சந்தேகங்கள் புறக்கணிக்க
முடியாதவை. படைத்த இறைவனிடம் தன் முறையீட்டை சமர்ப்பிக்கும் ஒவ்வொரு பந்தியிலும்
ஆற்றாமை தொனிக்கிறது.
‘’ நான் மட்டும் அவன் ஹூருலீனாய்//இம்மை மறுமை இரண்டிலும் இருக்கப்
//பிரியம் கொண்ட போதிலும்//நானும் அவனது ஹூருலீன்தான் எனும்// பன்மைக்குள்
ஒன்றாவதும்// இறைவா உனது கட்டளையின் பிரகாரமே//
மனைவியான பின்//கணவனைத் தவிர எவர் மனத்தும்// நுழைந்தின்பம் தராதவளா
யிருக்க//கற்பை அவனுக்காகவே பாதுகாத்திருக்க// பலவீனப்பட்ட ஆண்கள் மனம்// அழகைக்
கண்டு இவ்வுலகில் அலைபாய்தலும்// ஒன்றுக்கு மேல் துணைவியரை//ஹலாலாக்கிக்
கொள்வதும்// பின்னரும் வீதிகளில்பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளாதிருப்பதும்// அசூயை
ஆன மனதோடு// மனைவியை நெருங்குதலும் // சரிதானா இறைவா?//
இவ்வாறு கவிதை முழுவதும் முறையீடு செய்து கொண்டிருக்கும்
ஒட்டுமொத்தப் பெண்களின் ஒப்பாரிக்கு இறைவனின் பதில்தான் என்ன... கனத்த மனதுடன்
கவிதையின் பக்கங்களைக் கடந்து போனாலும், கவிதையும் அது தந்த வலியும் விட்டுப் போவதாயில்லை.
‘’புனிதம் என்னும் நீர்க்குமிழ்ப் பறவை எத்தனைக் காலம் உடையாமல் ஊர்
சுற்ற முடியும். இவர்களின் புனிதக் குடுவைகள் போலி இல்லறத்திலிருந்து வீசப்பட்டு
வீதிகளில் விழுந்து நொறுங்குகின்றன. விழுந்த வீதியெங்கும் கற்பும் ஒழுக்கமும்
அள்ளிக் குவித்த சாக்கடைப் போல நாற்றமெடுக்கின்றன.’’ என்ற, தமிழக விமர்சகன் மா. சுகுமாரின் வார்த்தைகள்
இவ்விடத்தில் ஞாபகம் வருகின்றன..
என்ன இருந்தாலும், தந்தை, சகோதரன், மகன் என்ற ஆண்பாலுயிர்கள் பெண்கள்
மீது கொண்டிருக்கும் தூய நேசத்தைக் கருத்திற்கொண்டு, அடுத்த நூலிலாவது ஆண்கள் மீது
அன்புப் ‘பாலையூற்று அஷ்ரபா.. கொதிக்கும் எரி குளம்பையல்ல...
ஹூருலீன்கள் தொகுதியின்
ஒவ்வொரு கவிதை பற்றிய விரிவான உரையாடலுக்கு வேறு தளமும் இடமும் தேவை. இன்னொரு சந்தர்ப்பத்தில் முயல்வோம்.
நாமிக் ரீஷ்மானின் அழகிய அட்டைப் பட வடிமைப்புடன், மிக நேர்த்தியான
முறையில் நூலை, மகுடம் வெளியீடாக, ரூ; 600/- என்ற குறைந்த விலையில் கொண்டு வந்திருக்கும்,
நண்பர் மைக்கல் கொலினை எவ்வளவும் பாராட்டலாம். தேவையானோர் 0774338878 உடன் தொடர்புகொள்க..
0
தீரன்
No comments:
Post a Comment