Tuesday, March 25, 2025

மரீனா இல்யாஸ் ஷாபி-என்மேல் விழுந்த மழைத் துளிகள்..

 என்மேல் விழுந்த மழைத் துளிகள்..(அனுபவக் கட்டுரைகள்)

=========================
அனுபவங்கள் பொழியும்
அற்புத துளிகள்
----------------
விட்டிலுக்கு
விளக்கு என்ன தொட்டிலா?
விழுந்து பார் தெரியும்!
என்று அனுபவத்தின் சாரத்தை சொன்ன வரிகள்தாம் எத்தனை யதார்த்தமானது...
நியுசீலாந்து நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராகக் கடமை புரியும், நம் நாட்டுப் படைப்பாளியான மரீனா இல்யாஸ் ஷாபியின், அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பான என் மேல் விழுந்த மழைத் துளிகள் என்ற நூலின் வாசிப்பனுபவங்கள் பல..
அவை, நம்மை, பல இடங்களில் சிலிர்க்கச் செய்பவை..விழிகளை விரிய வைத்து வியக்க வைப்பவை.. இன்னும் சில வெகு சுவாரஷ்யமானவை.. வேறுசில சோகம் இழையோடும் சொற்களில் சொல்லிச் செல்லும் பாணியில், நம்மை பெருமூச்சில் ஆழ்த்துபவை..
அடடா, வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நிகழுகின்ற சம்பவங்களில் உற்பவிக்கும் அனுபவங்களின் உந்துதலை உணர்ந்து சொல்லும், இந்நூலாசிரியரின் இலகு தமிழ் மொழிநடை பாராட்டத் தக்கது.
தன் சுயவாழ்வின் நிகழ்ச்சி நிரல்களில் சிலவற்றை 33 தலைப்புக்களில் கச்சிதமாக, கையாண்டுள்ளார் ஆசிரியர்.. அவரது புலம்பெயர் வாழ்வில், அவர் கடந்து வந்த பாதையில், எதிர்கொண்ட ஏற்ற இறக்கங்களைச் சொல்லும் போது ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு அனுபவத் துளிகளாக கோர்த்து ஒரு பெரும் மழையாகப் பொழிந்து நூல் முழுவதும் வெள்ளமெனப் பாய்ந்தொலிக்க விடுகிறார் இந்தப் படைப்பாளி.
முகநூலில் இந்த அனுபவங்களில் பலவற்றை நான் வாசித்து வந்திருக்கிறேன். அவற்றைச் செப்பனிட்டு, ஒன்று சேரத் தொகுத்து நூலாக்கி தரும் போதுதான் அந்த அனுபவக் குறிப்புகளின் தாக்கத்தை பூரணமாக உணரக் கூடியதாக இருக்கிறது.
‘விபத்து’ என்ற அவரது அனுபவத் துளியை வாசிக்கும்போது நமக்கு மனதெல்லாம் வலிக்கிறது. நியுசீலாந்தில் எவ்வளவு ஆனந்தமாக வாழ்ந்திருப்பார் என்று நாம் நினைத்ததற்கு மாறாக இவர் இரண்டுவிபத்துகளில் அகப்பட்டு, வருடக்கணக்காகப் பட்ட வேதனையும் வெப்புசாரமும் எத்தனை கொடுமையான அனுபவம்... அதிலும், நடக்க முடியா நிலையிலும், தன் கணவரின் ஒத்துழைப்புடன் ஹஜ் பயணம் மேற்கொண்டு கஹ்பாவை வலம் வந்த அந்த உணர்ச்சிமிக்க தருணத்தை அவர் சொல்லும் போது நமது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.
அனுபவம் எளிமையாகத் தானிருக்கும் ஆனால் வலுவான சேதங்களிலிருந்து நம்மைக் காக்கிறது.
என்பதற்கொப்ப, இவரது ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் நாமும் ஒவ்வொரு பாடம் படிக்கும்படியான செய்தி உள்ளது..
‘’மூச்சுத் திணறிய புற்கள்’’ என்ற இன்னொரு அனுபவத் துளி ...ஆஹா, புற்களுக்கு மூச்சுத் திணறும் ஆகவே பொலித்தீன் விரிப்பை தரையில் விரித்து அதில் அமர்ந்திருத்தல் நல்லதல்ல என்ற தோட்டக்காரனின் இங்கிதமும் பசுமை மீதான அபிமானமும்...வாசிக்கும் போது, வீடுகட்ட மரங்களைக் கண்டபடி தறித்துக் கொண்டு வாழும் நாம் வாழ்வில் நாம் எங்கே நிற்கின்றோம் என்று நமக்கே நம்மீது வெறுப்பு ஏற்படுகிறது..
‘’சிலருக்கு நேரும் அனுபவங்கள் பலருக்கு வழிகாட்டுகின்றன; எச்சரிக்கை செய்கின்றன. சதுப்பு நிலத்தில் விழுந்து உயிர் பிழைத்து வருபவர்கள் அதைக்குறித்து எச்சரிக்கை செய்யும் தகுதியைப் பெறுகிறார்கள்.. ‘’ இத்தகைய தகுதி பல்வேறுபட்ட விசித்திர அனுபவங்களைப் பெற்று புடம்போடப்பட்டு வாழுகிற இந்த சகோதரிக்கு இருக்கிறது என்பதை மறுக்கவியலாது..
‘சட்டத்தில் ஓர் ஓட்டை’ என்ற சம்பவம் ஒரு வித்தியாசமான அனுபவத் துளி.. இறுதியில், பூக்களால் ஆன ஆடையைக் களைந்து விட்டு முட்களால் என்னைப் போர்த்திக் கொண்டு பயணிக்கிறேன் என்று நூலாசிரியர் சொல்லும் போது வியப்புடன் கவலைப்படுகின்றோம்..
‘பாதியில் சிதறிய பயணம்’ என்ற அனுபவத்துளியை இவர் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது நெஞ்சம் பதைபதைத்து விடுகிறது.. விமானப் பயணத்தில் கணவருக்கு ஏற்பட்ட உபாதை...அந்நிய தேசத்தில் அறிமுகங்கள் அற்ற, கொடூரமான ஆதரவற்ற நிலை..இதனை இவர் எதிர்கொண்ட விதம்...கணவரின் துணிகரம், தைரியமூட்டும் அறிவுரை...ஒரு நாவலே எழுதும் அளவுக்கு விரிவான விசித்திரங்கள் நிறைந்த சம்பவங்கள்..
‘’அரிதாரங்களை நமக்கு அடையாளம் காட்டி நிஜத்தின் நித்தியத்தை நமக்குக் கற்றுத்தருவது அனுபவம்தான். வேரில் ஊற்றிய நீரை உச்சியில் இனிமையான இளநீராகத் தரும் தென்னைமரம் மாதிரி சிலர் எப்போதும் உயர்ந்த செயல்களைச் செய்துகொண்டே இருப்பார்கள்.’’ என்று இராகுலன் கூறுவது போல் தன் அனுபவங்களை தொகுத்து நூலுருவில் கொணர்ந்திருக்கும் இந்நூலாசிரியரின் எல்லா அனுபவங்களையும், ஒரே மூச்சில் வாசித்து முடித்த போது மரினா இல்யாஸ் ஷாபி என்ற தைரியமிக்க ஒரு பெண்மணியின் வாழ்க்கை நம் விழிகளை வியப்பில் விரிய வைக்கிறது.
அவரது பிரார்த்தனைகளின் பலமும்,பலனும் மெச்சத்தக்க அளவில் நமக்குள் ஊடு பாய்கிறது.. எதிர்கால இளைய சந்ததிகளுக்கு இவரது அனுபவங்கள் துணிகரமான வாழ்வியல் முறையை கற்றுத் தருகிறது..
‘’....நான் உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, என் மரணத்தின் பின்னரும் உங்கள் பிரார்த்தனைகள் என்னைப் பின் தொடர்ந்து வரவேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து விடை பெறுகிறேன்...’’ என்ற கோரிக்கையை இறுதியில் முன் வைக்கிறார் நூலாசிரியை.
அவுஸ்திரேலியா வளர்பிறைப் பதிப்பக வெளியீடாக, தன் பெற்றோருக்கும், கணவருக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டு வெளிவந்துள்ள ‘என் மேல் விழுந்த மழைத் துளிகள்’’ என்ற அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு, ரூ. 800/=க்கு கிடைக்கிறது.
இது, பத்தி எழுத்துக்களின் ஒரு நவீன உத்தி என துணிந்து கூற முடியும்.. நூலாசிரியருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்களும், பிரார்த்தனைகளும்...
‘...மலைகளைக் குடைந்துதான் மாற்றங்களை உருவாக்க முடியும் என்றில்லை.. அழகிய வார்த்தைகளுக்கும் அந்த சக்தி இருக்கிறது...’’ – மரீனா இல்யாஸ் ஷாபி.
0
தீரன்

No comments:

Post a Comment