Friday, March 14, 2025

அஷ்ரப் சிகாப்தீன்-கழுதை மனிதன்

 

அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’

நாடுகளை இணைக்கும் மொழிக் கயிறு

.......................................................................................................

 

மொழிபெயர்ப்புக்களினால் பல அரிய படைப்புக்கள் தமிழில் நமக்குக் கிடைக்கின்றன.  ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு, தான் பெயர்க்கும் படைப்பின் மீதான கவனம், அந்த  மொழி மீதான அறிவு, என்பன இன்றியமையாதன. இன்னும் தன் படைப்பு மொழியின் மீதும் ஆழ்ந்த நுண்ணறிவும் தேவையாகிறது.  முக்கியமாக, மொழிபெயர்ப்பாளனுக்குள்  ஒரு படைப்பாளன் இருத்தல் வேண்டும்..  இவற்றை  எல்லாம் உள்வாங்கிக் கொண்டுள்ள நண்பர் அஷ்ரஃப் சிஹாப்தீனின், மூன்றாவது மொழிபெயர்ப்பு நூலான ‘’கழுதை மனிதன்’  ஒன்பது சிறுகதைகளை உள்ளடக்கி, யாத்ரா வெளியீடாக வந்துள்ளது.  ஏற்கனவே,  ‘ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்’, ‘பட்டாம்பூச்சிக் கனவுகள்’ ஆகிய இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதை நூல்களை தந்தவர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

இவற்றை எல்லாம், இவர், ஆங்கில மொழி வழியாகவே பெயர்த்துள்ளதனால் இவை ஏறக்குறைய மூன்றாவது வடிகட்டல் தன்மையின என்றாகிறது.  மூலமொழியின்,  நிஜமான நுகர்வுணர்ச்சி இவற்றில் காணக் கிடைக்காவிட்டாலும்,  இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின், உணர்ச்சியை தமிழுக்குக் கடத்துவதில்  இம் மொழிபெயர்ப்பாளர் வெற்றி பெற்றுள்ளார் எனலாம்.

மூலப் படைப்பில் நடமாடித் திரியும் பாத்திரங்களின் பண்பாட்டுப் பின்புலங்களை  அறிந்து கொண்டு அப்பாத்திரத்தின் உரையாடல்களை தான் பெயர்க்கும் மொழிக்குள் கொணர்தல் என்பது ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு சிரமம் தரும் சவால் ஆகும்.   இந்தச் சவாலை இந்நூலாசிரியர், தன் நீண்டகால  எழுத்தனுபவத்தின்  மூலம் எதிர்கொண்டு இலாவகமாக கடந்து சென்றுள்ளார்.

இத்தொகுதியிலுள்ள, கழுதை வணிகம், பெட்டை நாய், கழுதை மனிதன் என்பன குறிப்பிடத்தக்க திறமையான தேர்ந்தெடுப்புக்கள் ஆகும். ‘’ஒரேயொரு எதிர்பார்ப்பு’’   என்ற இலங்கை எழுத்தாளர் புத்ததாச ஹேவகேயின்  கதை நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு மொழிபெயர்ப்பாகும். ஒன்பது கதைகளுமே ஒரு வகையில்  வாசக மனங்களை ஈர்க்கும் வகையில் அமைந்தவை.  

உலகின் இலக்கியங்கள் யாவும் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்வழியாக புதிய வெளிச்சத்தையும் அதன் தாக்கத்தினால் புதிய தடங்களையும் கண்டிருக்கின்றன. இங்கும், ஈரான், ஈராக், பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளின் கதைகளைத் தமிழ்ச் சாரளம் வழியாக நாம் தரிசித்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.  இந்த சாரளத்தை திறந்து தந்த மொழிபெயர்ப்பாளர் பன்னூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை எவ்வளவும் பாராட்டலாம்.

இந்நூலை, தன் இலக்கியப் பயணத்தில்  உந்துதலாகவும், உறுதுணையாகவும் நிற்கின்ற,  ‘காப்பியக்கோ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்,  கவிஞர்  அல் அஷூமத், கவிஞர் தாஸிம் அகமது,  கவிஞர் நாச்சியாதீவு பர்வீன்  ஆகியோருக்கு சமர்ப்பணம் ஆக்கி தன் விரிவான மனதை வெளிக்காட்டியுள்ளார் நண்பர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

 

அழகிய கருத்தாழமிக்க அட்டைப்படத்துடன், முன்னுரை, அணிந்துரை போன்ற ‘கரைச்சல்கள்’ ஏதுமின்றி,  இலகு வாசிப்புக்கு ஏற்ற வடிவில் 97 பக்கங்களுக்கு மட்டுப்படுத்திய அளவில், வெளிவந்துள்ளது ‘கழுதை மனிதன்’.  நாடுகளை இணைக்கும் இலக்கியக் கயிறு இது.. நூலாசிரியரின் மொழிபெயர்ப்பு பணிக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்... தொடர்புகளுக்கு,  0777 303 818.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment