நபீலின்,
தென்னம்படல் மறைப்பு.
நடந்த நாட்களின்
நூதனசாலை
என்னத்தை எழுதவில்லை
நபீல்..? காகிதங்கள் முழுவதும் நினைவு
மேகங்கள் கொண்டு கடந்த காலங்களை, பெருமழையாகப் பெய்து தள்ளியிருக்கிறார்.. அந்த
ஞாபக வெளி முழுவதும் நம்மையும் அழைத்துச் செல்கிறார்.
நூலின் ஒவ்வொரு தாளாகப் புரட்டப்
புரட்ட, ஒரு கருப்பு வெள்ளை ஆல்பத்தின் செருகேடுகளைப் புரட்டிப் புரட்டி வியக்கும்
உணர்வில் இலயித்து விட்டேன்.
நடந்த நாட்களின்
நூதனசாலையின் ஒவ்வொரு அறையாக, நபீலின் எழுத்துநடை திறந்து காட்டுகிற நுட்பத்தில் மெய்மறந்து, சாப்பிடக் கூட மறந்து நூலை வாசித்து முடித்து
விட்டேன். என்னடா நபீல்.. உன் கணினி, சொற்களை அள்ளி எறியும் கடலா என்ன...அலையலையாக
ஞாபகங்களை அள்ளியள்ளி வீசுகிறதே..
வண்டில் மாடு மூத்தப்பா, நைனார்
மாமா, புள்ளிம்மா, வானொலி மாமா, இலங்க மஸ்தார்,
ஆலாத்திக்காரி, குழந்தம்மா, என்று
எங்கள் மண்ணின் மூத்த மைந்தர்களை மறுபடி உயிர்ப்பித்துக் காட்டுகிறார். ஈர்க்கில் மிட்டாய்
,சோத்துக்களறி, பணியாரம், கிழங்குப் பொரியல், கஞ்சிக் கிடாரம் குஞ்சுச் சோறு, என்று மீண்டும் வாயூற வைக்கிறார். கடற்கரைப்பள்ளி, பிச்சிப்பிலாவடி, சலூன்கடை,
சந்தை, தேநீர்கடை, கக்கூஸ், கடல்வாடி முழுவதும் நடந்து திரிகிறார். பூணாரம்,புள்ளக்கூடு,பாய்,
கிடுகு வேலி, கிறுக்குச் சித்திரம், லக்ஸ்பிறே பசு, என்று மறைந்த,மறந்த பொருட்களைக்
காட்டி அதிசயம் செய்கிறார். அத்துடன் பேய்
வரும் என்று வேறு பயமுறுத்துகிறார்.
‘’... கற்பனைகளைக்
காண்பிக்கவில்லை, நமது முகத்தை நாமே பார்க்கும் ஒரு புகைப்பட ஆல்பத்தை விரித்துப் போடுகிறேன். என்னை என்னிடமே மீட்டுத்
தந்த என் பால்ய கால நினைவுகளை உங்களிடம் ஒப்புவிக்கிறேன்..’’ என்று நபீல்
சொல்வதுதான் உண்மை. நீ இன்னுமின்னும் ஒப்புவிக்க வேண்டும், அதைஎல்லாம் நாங்கள்
கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.. இதன் இரண்டாவது பாகத்தை இன்னும் எழுதவில்லையா
நீ?
பத்திரிகையில் இத்தொடர்
வரும்போது இரசித்து வாசித்து வியந்தவன் நான்.
காரணம், பத்தி எழுத்துக்களை ஒரு சிறுகதைக்குரிய சாயலில் புதுமையான நடையில் அவர்,
தன் புதினங்களைச் சொல்லியிருந்த விதம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.
ஏற்கனவே,2010 இல், ‘காலமில்லாக் காலம்’,2011 இல், ‘எதுவும் பேசாத மழை நாள்’ ஆகிய இரு கவிதை நூல்களைத் தந்தவர் நபீல். கிழக்கு
மாகாண சாகித்திய விருதும் பெற்றவர்.
நண்பர் பிரவீனின், அழகிய
அட்டைப் படமும், நேர்த்தியான தளக் கோலமும் கொண்டு, 286 பக்கங்களில், அதிசயங்களை அடைத்து வைத்திருக்கும் இந்நூல், ஒரு
காலச்சுவடு வெளியீடாகும். ரூ: 1200/ விலையில் கிடைக்கும் இந்நூல் அடுத்த தலைமுறையின்
அதிசய புதையல் ஆகும். வாழ்த்துக்கள் நபீல். (0772858095)
அப்பாவின் டயரி-
இது கப்பாரின்
உயிரி.
எஸ்.ஏ. கப்பார்- 1977
களில் உற்பவித்துப் பாய்ந்த ஓர் எழுத்து ஆறு. எழுத்தாளர், சஞ்சிகை ஆசிரியர்,
பத்திரிகையாளர், வங்கி மேலாளர் எனப் பல முகங்கள் கொண்டவர். வெண்ணிலா எனும் காலாண்டிதழை கடந்த 2021 முதல் நடத்தி வருகிறார். இவர் வங்கித் தொழிலிருந்து ஓய்வு பெற்றபின்
பல்வேறு ஊடகங்களில் எழுதி வந்தாலும், தமிழன் பத்திரிகையில் வெளியான தன் 15
சிறுகதைகளைத் தொகுத்து ‘அப்பாவின் டயரி ‘ என்ற இந்நூலை கொணர்ந்துள்ளார்.
தன் வாழ்வியலில் கண்டு ,
கேட்டு , அனுபவித்த மானுடவியலின் பல்வேறு கூறுகளை எழுதுவது இவரது இயல்பான சுவாபம் ஆகும். இத்தொகுப்பிலுள்ள பல கதைகள் இதற்கு சான்றாக
உள்ளன. மானுட வாழ்வின் இழிகுணத்தை
சுட்டெரிக்கின்ற தன்மை இவரது கதை நெடுகிலும் ஊடுபாவிச் செல்கின்றன.. தவிர மானுட வாழ்வின் சில மென்மையான பக்கங்களை, அவர்
தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு, தொட்டுச்
செல்வதிலும் அவரது எழுத்தனுபவம் நன்கு வெளிப்பட்டு நிற்கிறது
‘அப்பாவின் டயரி’ என்ற கதை
உயிரோட்டமும் உணர்வோட்டமும் கலந்து வாசகர் மனங்களை கதையின்பால் இறுகப் பிணைத்து
வைக்கிறது. தாய் வீடு, அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும், போன்ற கதைகள்
அத்தகைய தறியில் அழுத்தமாக நெய்யப்பட்ட அழகான சிறுகதைகளாகப் பரிணமிக்கின்றன. சமூக சேவகி, தோழி ஜெனீரா, ரியுசன் மாஸ்டர்
போன்ற கதைகளில் கப்பார் தன் எழுத்தை
சமூகப் பொறுப்புடன் முன்னிறுத்தி அவற்றை ஒரு சிற்பம் போல, தேர்ந்த ஒரு சிறுகதையின்
வடிவம் தப்பாது செதுக்கியுள்ளார்.
தொகுப்பிலுள்ள 15 கதைகளும்
நம்முடன் வாழுகிற நம்மவர்களின் இயல்புகளையே மையச் சரட்டாகக் கொண்டு
நகர்ந்திருக்கின்றன.. சின்னச் சின்னக்
கதைகளைத் தேர்ந்து சின்னச்சின்ன மொழிநடையில் சிக்கலின்றி நேரடியாக கதை சொல்லியிருக்கும்
தன்மையில் கப்பார் ஓர் எழுத்தாளராக வெற்றி பெற்றிருக்கிறார்.
அழகான வடிவைப்பும், தள
நேர்த்தியும் கொண்டு வெண்ணிலா பதிப்பக
வெளியீடாக 105 பக்கங்களில் ரூ;500 விலையில் கிடைக்கிறது இந்நூல்.
நூலை காலம்சென்ற தன் அன்பு மனைவிக்கு சமர்ப்பணம் செய்திருப்பது
மனதை நெகிழச் செய்கிறது. ஒவ்வொரு கதைக்கு
முன்னும் அக்கதை வெளியான தமிழன் பத்திரிகை நறுக்கை இணைத்திருப்பது ஒரு புது
முயற்சி ஆகும்.
ஒரு கவிஞன்,
பத்திரிகாசிரியராக அறிந்து வைத்திருந்த நண்பர் எஸ்.ஏ. கப்பார் அவர்களை இந்நூல் வாயிலாக ஒரு அழகான
‘கதை சொல்லி’யாகவும் அறிந்து
வியப்படைந்தேன். அன்பு வாழ்த்துக்கள்
கப்பார். தொடர்புக்கு..07 7 6 9 6 8 6 7 1.
இக்பால் அலியின்
‘காலத்தின் கால்கள்’
நாடறிந்த ஊடகவியலாளர் ,
கவிஞர், விமர்சகர், போன்ற பல்வேறுபட்ட துறைகளில் இயங்கி வரும் இக்பால் அலியின் புதிய
வெளியீடாக வந்துள்ளது ‘காலத்தின் கால்கள்’ எனும் திறன் நோக்கு நூல்.
இக்பால் அலி, தன் தமிழிலக்கியப் பணியில் நூற்றுக்கணக்கான நூல்களுக்கு திறன் நோக்குகள்/விமர்சனங்கள் எழுதியுள்ள போதும், இந்நூலில், அவர்
தேர்ந்தெடுத்த 34 நூல்களின் விமர்சன/திறனாய்வு கட்டுரைகள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன. தனக்கே உரித்தான ஓர் அகன்ற பார்வையில்
இந்நூல்களை எடை போட்டுப் பார்த்துள்ளார் இக்பால் அலி. இக்கட்டுரைகள், சுடர் ஒளி, நயனம்,ஞாயிறு
தினக்குரல், தினகரன் வாரமஞ்சரி, தீம்புனல் ஆகியவற்றில் பிரசுரம் பெற்றவை ஆகும்.
இக்பால் அலியின் இலக்கியப்
பணிகளை, அவரது ஊடகப்பணி பெருமளவு விழுங்கிய போதிலும் அவற்றிலிருந்து விடுபட்டு
இலக்கியத்துக்கும் நேரம் ஒதுக்கி இந்நூலை அவர் வெளிக் கொணர்ந்திருப்பது
பாராட்டுக்குரியது. ‘’..எனது, மனதைத் தொட்ட சில நூல்களை நுகர்ந்து சுவைத்து அந்நூல்களில் மறைந்துள்ள மாபெரும் அழகுகளை பளிச்சென்று சூரிய வெளிச்சம் போல தெரியுமளவுக்கு துலங்கச் செய்துள்ளேன் .’’ என்று
கூறுகிறார்.
எம்.ஏ. நுஹ்மானின் ‘கவிஞன்’
கவிதை இதழ், சாதியா பௌசரின்,’மலையக கவிதைகளில் பெண்களும், சிறுவர்களும்’ , ரா.நித்தியானந்தனின்,
‘இரவைத் தேடும் நிழல்’, பண்டிதர். ச.வே. பஞ்சாட்சரத்தின் ‘விலங்குப்பறவை’, ஜின்னாஹ் ஷரிபுத்தீனின், ‘பனிமலையின் பூபாளம்’,
எஸ்.ஏ.இஸ்ஸத் பாத்திமாவின் ‘புதையலைத்
தேடி’, எம்.ஐ.எம். அஷ்ரப்பின் ‘இன்னும் உயிரோடு’, எஸ்.யூ. கமர்ஜான் பீவியின் ‘நான் மூச்சயர்ந்த போது’, நா.வை. குமரி வேந்தனின் ‘தமிழ் எழுச்சி’, வெலிகம ரிம்ஸா முகம்மதின் ‘எரிந்த சிறகுகள்,’ கலாநிதி செ. சுதர்சனின் ‘காலிமுகத்திடல்’,
நா.வை. குமரி வேந்தனின் ‘மொழி-பண்பாடு-வரலாறு,
மீட்பு-காப்பு-வளர்ப்பு’, இரா.மகேஸ்வரனின் ‘அமைதி வழியும் மதுர மொழியும்’, மருதநிலா நியாஸின்
‘வேர்கள் அற்ற மனிதர்கள்’, இராசையா மகேஸ்வரனின் ‘ஆண்ட பரம்பரை’, நா.வை.
குமரி வேந்தனின் ‘தமிழியற் சான்றோர்’, கவிஞர் யோசுவாவின் ‘கரிகாட்டுப் பூக்கள்’, முப்தி யூஸுப் ஹனிபாவின் ‘ஆசிரியம் ஓர் இறைவணக்கம்’, எஸ்.ஆர்.
தனபாலசிங்கத்தின் ‘நீங்களும் எழுதலாம்’,
தீரன்.ஆர்.எம். நௌஷாத்தின்
‘முத்திரையிடப்பட்ட மது’, ஏ.பீர்முகமதுவின் ‘இளம்பிறை எம்..ஏ. ரஹ்மான்-
இருட்டடிப்புக்களை மீறி வெளிச்சத்துக்கு வந்தவர்’, பவானியின் ‘சில கணங்கள்’, பேராசிரியர்.எம்.எஸ்.எம். அனஸ், கலாநிதி வீ.
அமீர்தீன், ஏ.ஜே.எஸ். வசீல் ஆகியோரின், ‘இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும்’, மஷூரா சுஹூர்தீனின் ‘நதிகளின் தேசிய கீதம்’, பாவலர் பஸில் காரியப்பரின் ‘ஆத்மாவின் அலைகள்’,
எம்.எம்.எம். நூறுல் ஹக்கின் ‘சிறுபான்மையினர் சில அவதானங்கள்’, எஸ்.நஸீருதீனின் ‘நல்லதோர் வீணை செய்தே’, தெ.கி.ப. கழகம் வெளியிட்ட பேராசிரியர் ஆ.மு.உவைஸ்
பற்றிய சிறப்புமலரான ‘மர்கசி’, ரா. நித்தியானந்தனின் ‘19ஆம் நூற்றாண்டின் இந்தியத் தமிழரின் இலக்கை நோக்கிய அசைவியக்கமும்,
தள்ளல்-இழுவை காரணிகளின் செயற்பாடும்’, நுஹா பின்த் ரிஸானாவின் ‘யூஜி’,
மைக்கல் கொலினின் ‘சிலுவைகளே சிறகுகளாய்’,
மருதூர் கொத்தனின் ‘மோகனம்’, ஏ.பீர்முகம்மதின்
‘திறன் நோக்கு’, வேலணையூர் ரஜிந்தனின் ‘பேரன்பின் படிமங்கள்’
இவையே இக்பால் அலி
தேர்ந்தெடுத்த நூல்களின் பட்டியல் ஆகும்.
இவ்வளவு பெறுமதிக்க
நூல்கள் பற்றிய குறிப்புக்கள் அடங்கியுள்ள இந்நூலில், ஆங்காங்கே காணப்படும் சில
எழுத்துப்பிழைகள் வாசிப்பில் உறுத்துகின்றது
என்பதையும், பொருளடக்கத்தில்
நூலாசிரியர்களின் பெயர்களோடு நூல் பெயரையும் பக்க எண்ணையும் குறிப்பிட்டிருந்தால் விரைவான
தேடலுக்கு உதவியாய் இருந்திருக்கும் என்பதையும், கட்டுரை ஆரம்பத்தில் ஒவ்வொரு நூலினதும் முன் அட்டைப்படத்தை
இட்டிருந்தால் இன்னும் இதன் அழகுப்பெறுமானம் கூடியிருக்கும் என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
அம்னா பதிப்பகம் மூலம்
அழகிய அட்டையுடன் 155 பக்கங்களுடன் கனதியாக வெளியாகி ரூ. 800/- விலையில் கிடைக்கிறது இந்நூல். நூலின்
பின்னட்டைக் குறிப்பை தீம்புனல் ஆசிரியர் சூரன்.ஏ. ரவிவர்மா அவர்கள்
எழுதியுள்ளார். தேவையானோர், 0763744700
இலக்கத்துடன் தொடர்பு கொள்க.
No comments:
Post a Comment