Saturday, June 14, 2025

அ.வா. முஹ்சீனின், ‘தற்கொலை குறித்து ஓர் உரையாடல்’. (சிறுகதைகள்)

 

அ.வா. முஹ்சீனின், ‘தற்கொலை குறித்து ஓர் உரையாடல்’. (சிறுகதைகள்)

--------------------------------------------------------------------------------------------

 

அ.வா. முஹ்சீன்,  எளிமையான முறையில் தன் கதைகளை நகர்த்திச் செல்கின்ற உத்தியை விடாப்பிடியாகக் கையாளும் ஓர் அபாரமான கதைசொல்லி என்பது என் துணிபு.  ஏற்கனவே ‘இங்கினயும் ஒரு மஹ்சர்’’ என்ற, சோனகமொழிச்  சிறுகதைத் தொகுதியை வாசித்த போதே மொழியைக் கவனமாகக்   கையாளும் விசித்திர  வித்தைகள் தெரிந்தவர் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன்.  

 

இப்போது, அவரது, 9 சிறுகதைகளைக் கொண்ட ‘’ தற்கொலை குறித்து ஓர் உரையாடல்’’ என்ற சிறுகதைத் தொகுதியைப் படித்து முடித்த பின் எனக்குள் ஏற்பட்ட அவரது எழுத்துக்கள், மற்றும் சொல்நேர்த்திகள்  குறித்த ஆச்சரியம் இன்னும் அதிகரித்தே இருக்கிறது.

 

கதையின் மையச் சரட்டை, இயல்பு வாழ்க்கையுடன் இயைந்து போகும்படி கட்டமைத்துக் கதை சொல்லும் முஹ்சீனின் கதைப்பின்னல்  வியக்கத்தக்கது. அவரது எல்லாக் கதைகளிலும் இயல்பான கதை ஓட்டமும்,  யதார்த்தமான  பார்த்திர வார்ப்புகளும், குறிப்பிடும்படி அமைந்திருக்கும்.  சிக்கலில்லாத மொழியில் பேசுவதில்  அவரது தனித்தன்மையும்  வெளிப்பட்டு நிற்கும்..

 

இது தொகுதியில் உள்ள 9 கதைகளிலும், ‘’ தற்கொலை குறித்து ஓர் உரையாடல்’’ என்ற தலைப்புக் கதை என்னை மிகவும் ஆகர்ஷித்தது.  கதை நெடுகிலும், ஓர் உளவியல் தன்மையைத் தூவிச் செல்லும் போதே, கதையின் சித்தரிப்பையும் , காட்சிப் புலத்தையும் வாசகருக்கு காண்பித்து, இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பத்தில் கொண்டு போய் கதையையும் நம்மையும் நிறுத்துகிறார். ஏன் இப்படி   அமைத்தார் என்று வாசகரை சிந்திக்க விடுவதில் சிரத்தை கொண்டுள்ளாரோ என எண்ணத் தோன்றியது.. என்றாலும், இக்கதையின் வெற்றிக்கு இந்த உத்தி ஒரு முக்கிய முனை ஆகிறது..

 

‘’ஜின்னுடன் உறவாடுதல்’’ என்பது இன்னொரு முக்கிய கதை.. அமானுஷ்யம் பேசும் இக்கதையின் கருவை, எடுத்தாளுதல் அநேகருக்கு கடினமான ஒன்று. முஹ்சின் மிக கவனத்துடன் ஜின்னுடன் உறவாடியிருக்கிறார்.  மனப்பிராந்தி, பேய், வாசிலாத்து எல்லாம் கடந்து ஜின்கள்  பற்றிய வேறொரு உலகத்தைக் காட்டியிருக்கிறார். தானே உணர்ந்த தன்னுடைய மன அவசத்தை, தற்கூற்று மொழியில்   இயல்பாக சொல்லிச் செல்கிறார். இதனால் இக்கதையின் மீது ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டுவிடுகிறது. எழுத்தும்,  வலுவுடன்  ஊன்றி நிற்கிறது. ஜின்களின் பால் அடையாளம் போன்ற விடயங்களில் எனக்கு சில தனிப்பட்ட முரண்பாடுகள் இருந்த போதிலும்,  முஹ்சினின் கதையோடு ஒன்றிச் செல்வதில் ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை.   

‘’ஆண்மனம்’’ என்ற கதை பல வாசகரைக் கவர்ந்த ஓர் ஆக்கம் என்பது தெரியவருகிறது.  அது உண்மைதான்.. அடுத்த வீட்டின் அகலக் குறுக்குகளை அளந்தெடுத்த மொழியில் அனாயஸ்யமாக சொல்லிச் செல்லும் அழகை இக்கதை நெடுகிலும் காணலாம்.   கதையை,  அடுத்த வீட்டுக் கதவைத் திறந்து, அங்குள்ள மாந்தரின் இயல்பு நிலையை, அவர்தம்  உளக் கிடக்கைகளை இயல்பாகச் சொல்வதால்  இக்கதை  உயிர்பெற்று எழுந்து நிற்கிறதுவாழ்வின் பல்வேறு சாத்தியங்களையும் விரித்துக் காட்டுகிறது.. அதுவே இப்படைப்பின் வெற்றியாகவும் இருக்கிறது.

 

மேலும், ‘மூலை வீடு’, ‘விடுதலைபோன்ற  கதைகள் மிகவும் மனவேக்காடுகளின் வலிகளைப் பேசுபவை..முஹ்சின் தன் கதைகளின் மீது ஓட விட்டிருக்கும் இயல்பான மொழிப் பிரவாகம், அவரது ஒவ்வொரு கதைகளின் வெற்றிக்கும் காரணமாகிறது. அவர் தன்  கதைகளின் மீது அக்கறையுடன் போர்த்திக் கொண்டிருக்கும்  அந்த ‘எளிமை நிலைஅவரது   படைப்புகளை இன்னொரு  உன்னத நிலைக்கு உயர்த்தி விடுகிறது.

 

முஹ்சினின் கதைகள் பற்றிப் பேச விரிந்த தளமும், நேரமும் தேவை. முகநூலுக்காக சுருங்கிய அளவில் சொல்லியிருக்கிறேன்.

 

 இந்நூல் மூத்த கதை சொல்லி எஸ்.எல்.எம்.முக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளதானது ஒரு முக்கிய வரலாறு ஆகும். ... இச் சிறுகதைத்தொகுப்பு, 168 பக்கங்களுடன், மூதூர் JMI வெளியீட்டகத்தின் நேர்த்தியான அச்சுப் பதிப்புடன்,  கவர்ச்சியான தளக் கோலத்துடன்,  மு.தானிஷ் அப்ரித்தின், அழகிய அட்டை வடிவமைப்புடன்  ரூ.700/= விலையில், கிடைக்கிறது. தொடர்புகளுக்கு0778089827.

 

Tuesday, March 25, 2025

மரீனா இல்யாஸ் ஷாபி-என்மேல் விழுந்த மழைத் துளிகள்..

 என்மேல் விழுந்த மழைத் துளிகள்..(அனுபவக் கட்டுரைகள்)

=========================
அனுபவங்கள் பொழியும்
அற்புத துளிகள்
----------------
விட்டிலுக்கு
விளக்கு என்ன தொட்டிலா?
விழுந்து பார் தெரியும்!
என்று அனுபவத்தின் சாரத்தை சொன்ன வரிகள்தாம் எத்தனை யதார்த்தமானது...
நியுசீலாந்து நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராகக் கடமை புரியும், நம் நாட்டுப் படைப்பாளியான மரீனா இல்யாஸ் ஷாபியின், அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பான என் மேல் விழுந்த மழைத் துளிகள் என்ற நூலின் வாசிப்பனுபவங்கள் பல..
அவை, நம்மை, பல இடங்களில் சிலிர்க்கச் செய்பவை..விழிகளை விரிய வைத்து வியக்க வைப்பவை.. இன்னும் சில வெகு சுவாரஷ்யமானவை.. வேறுசில சோகம் இழையோடும் சொற்களில் சொல்லிச் செல்லும் பாணியில், நம்மை பெருமூச்சில் ஆழ்த்துபவை..
அடடா, வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நிகழுகின்ற சம்பவங்களில் உற்பவிக்கும் அனுபவங்களின் உந்துதலை உணர்ந்து சொல்லும், இந்நூலாசிரியரின் இலகு தமிழ் மொழிநடை பாராட்டத் தக்கது.
தன் சுயவாழ்வின் நிகழ்ச்சி நிரல்களில் சிலவற்றை 33 தலைப்புக்களில் கச்சிதமாக, கையாண்டுள்ளார் ஆசிரியர்.. அவரது புலம்பெயர் வாழ்வில், அவர் கடந்து வந்த பாதையில், எதிர்கொண்ட ஏற்ற இறக்கங்களைச் சொல்லும் போது ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு அனுபவத் துளிகளாக கோர்த்து ஒரு பெரும் மழையாகப் பொழிந்து நூல் முழுவதும் வெள்ளமெனப் பாய்ந்தொலிக்க விடுகிறார் இந்தப் படைப்பாளி.
முகநூலில் இந்த அனுபவங்களில் பலவற்றை நான் வாசித்து வந்திருக்கிறேன். அவற்றைச் செப்பனிட்டு, ஒன்று சேரத் தொகுத்து நூலாக்கி தரும் போதுதான் அந்த அனுபவக் குறிப்புகளின் தாக்கத்தை பூரணமாக உணரக் கூடியதாக இருக்கிறது.
‘விபத்து’ என்ற அவரது அனுபவத் துளியை வாசிக்கும்போது நமக்கு மனதெல்லாம் வலிக்கிறது. நியுசீலாந்தில் எவ்வளவு ஆனந்தமாக வாழ்ந்திருப்பார் என்று நாம் நினைத்ததற்கு மாறாக இவர் இரண்டுவிபத்துகளில் அகப்பட்டு, வருடக்கணக்காகப் பட்ட வேதனையும் வெப்புசாரமும் எத்தனை கொடுமையான அனுபவம்... அதிலும், நடக்க முடியா நிலையிலும், தன் கணவரின் ஒத்துழைப்புடன் ஹஜ் பயணம் மேற்கொண்டு கஹ்பாவை வலம் வந்த அந்த உணர்ச்சிமிக்க தருணத்தை அவர் சொல்லும் போது நமது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.
அனுபவம் எளிமையாகத் தானிருக்கும் ஆனால் வலுவான சேதங்களிலிருந்து நம்மைக் காக்கிறது.
என்பதற்கொப்ப, இவரது ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் நாமும் ஒவ்வொரு பாடம் படிக்கும்படியான செய்தி உள்ளது..
‘’மூச்சுத் திணறிய புற்கள்’’ என்ற இன்னொரு அனுபவத் துளி ...ஆஹா, புற்களுக்கு மூச்சுத் திணறும் ஆகவே பொலித்தீன் விரிப்பை தரையில் விரித்து அதில் அமர்ந்திருத்தல் நல்லதல்ல என்ற தோட்டக்காரனின் இங்கிதமும் பசுமை மீதான அபிமானமும்...வாசிக்கும் போது, வீடுகட்ட மரங்களைக் கண்டபடி தறித்துக் கொண்டு வாழும் நாம் வாழ்வில் நாம் எங்கே நிற்கின்றோம் என்று நமக்கே நம்மீது வெறுப்பு ஏற்படுகிறது..
‘’சிலருக்கு நேரும் அனுபவங்கள் பலருக்கு வழிகாட்டுகின்றன; எச்சரிக்கை செய்கின்றன. சதுப்பு நிலத்தில் விழுந்து உயிர் பிழைத்து வருபவர்கள் அதைக்குறித்து எச்சரிக்கை செய்யும் தகுதியைப் பெறுகிறார்கள்.. ‘’ இத்தகைய தகுதி பல்வேறுபட்ட விசித்திர அனுபவங்களைப் பெற்று புடம்போடப்பட்டு வாழுகிற இந்த சகோதரிக்கு இருக்கிறது என்பதை மறுக்கவியலாது..
‘சட்டத்தில் ஓர் ஓட்டை’ என்ற சம்பவம் ஒரு வித்தியாசமான அனுபவத் துளி.. இறுதியில், பூக்களால் ஆன ஆடையைக் களைந்து விட்டு முட்களால் என்னைப் போர்த்திக் கொண்டு பயணிக்கிறேன் என்று நூலாசிரியர் சொல்லும் போது வியப்புடன் கவலைப்படுகின்றோம்..
‘பாதியில் சிதறிய பயணம்’ என்ற அனுபவத்துளியை இவர் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது நெஞ்சம் பதைபதைத்து விடுகிறது.. விமானப் பயணத்தில் கணவருக்கு ஏற்பட்ட உபாதை...அந்நிய தேசத்தில் அறிமுகங்கள் அற்ற, கொடூரமான ஆதரவற்ற நிலை..இதனை இவர் எதிர்கொண்ட விதம்...கணவரின் துணிகரம், தைரியமூட்டும் அறிவுரை...ஒரு நாவலே எழுதும் அளவுக்கு விரிவான விசித்திரங்கள் நிறைந்த சம்பவங்கள்..
‘’அரிதாரங்களை நமக்கு அடையாளம் காட்டி நிஜத்தின் நித்தியத்தை நமக்குக் கற்றுத்தருவது அனுபவம்தான். வேரில் ஊற்றிய நீரை உச்சியில் இனிமையான இளநீராகத் தரும் தென்னைமரம் மாதிரி சிலர் எப்போதும் உயர்ந்த செயல்களைச் செய்துகொண்டே இருப்பார்கள்.’’ என்று இராகுலன் கூறுவது போல் தன் அனுபவங்களை தொகுத்து நூலுருவில் கொணர்ந்திருக்கும் இந்நூலாசிரியரின் எல்லா அனுபவங்களையும், ஒரே மூச்சில் வாசித்து முடித்த போது மரினா இல்யாஸ் ஷாபி என்ற தைரியமிக்க ஒரு பெண்மணியின் வாழ்க்கை நம் விழிகளை வியப்பில் விரிய வைக்கிறது.
அவரது பிரார்த்தனைகளின் பலமும்,பலனும் மெச்சத்தக்க அளவில் நமக்குள் ஊடு பாய்கிறது.. எதிர்கால இளைய சந்ததிகளுக்கு இவரது அனுபவங்கள் துணிகரமான வாழ்வியல் முறையை கற்றுத் தருகிறது..
‘’....நான் உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, என் மரணத்தின் பின்னரும் உங்கள் பிரார்த்தனைகள் என்னைப் பின் தொடர்ந்து வரவேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து விடை பெறுகிறேன்...’’ என்ற கோரிக்கையை இறுதியில் முன் வைக்கிறார் நூலாசிரியை.
அவுஸ்திரேலியா வளர்பிறைப் பதிப்பக வெளியீடாக, தன் பெற்றோருக்கும், கணவருக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டு வெளிவந்துள்ள ‘என் மேல் விழுந்த மழைத் துளிகள்’’ என்ற அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு, ரூ. 800/=க்கு கிடைக்கிறது.
இது, பத்தி எழுத்துக்களின் ஒரு நவீன உத்தி என துணிந்து கூற முடியும்.. நூலாசிரியருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்களும், பிரார்த்தனைகளும்...
‘...மலைகளைக் குடைந்துதான் மாற்றங்களை உருவாக்க முடியும் என்றில்லை.. அழகிய வார்த்தைகளுக்கும் அந்த சக்தி இருக்கிறது...’’ – மரீனா இல்யாஸ் ஷாபி.
0
தீரன்

Friday, March 14, 2025

அஷ்ரபா நூர்தீன் - ஹூருலீன்கள்

 

 

கண்ணழகிகளின் கனன்றுகொண்டிருக்கும் கனவுலகம்

 

அஷ்ரபா நூர்தீனின் கவிதைகள் கனவுலகிலிருந்து அரண்டு வந்து நிஜத்தை நோக்கி நெருப்புக் கொளுத்தி எறிபவை... ஹூருலீன்களின் கண்களில் எரிமலையை நிரப்பி எச்சரிக்கும் தன்மையவை. சலிப்படைந்த சொற்களைத் தள்ளி வைத்து விட்டு எரிசாம்பலிலிருந்து எடுத்துத் தீச்சரம் கோர்ப்பவை.

ஹூருலீன்கள் தொகுதியின், பெரும்பாலான கவிதைகள் அவர் மனதின் வெப்புசாரங்களின் வெளிப்பாடுகள் எனலாம். அவர் எடுத்தாளும், எறிகணைச் சொற்கள்,அடுத்தடுத்த பக்கங்களில் ஆண்களைக் கொஞ்சம்  சினமுற வைக்கவே செய்யும். ..அதேசமயம் பெண்களுக்கும்,சிறுவர்களுக்கும் பேராதரவுக் கரம் நீட்டி தலைதடவி செல்கின்றன..

அஷ்ரபா,  தன் ‘ஆகக் குறைந்த பட்சம்’ என்ற  முதல் கவிதை தொகுதிக்குப் பின், 12 வருடங்கள் கவிதைக் காடேறிய பின்,  மௌனத்தவம் கலைத்து ஹூருலீன்கள் என்ற இத்தொகுதியை அளித்திருக்கிறார்.  100 பக்கங்களில் 73 கவிதைகள் அணிவகுத்து நிற்க, அவற்றின் மத்தியில் ஒரு கவிதைக் கம்பீரத்தோடு நடந்து வருகிறார்.. தொகுதியை வாசித்துச் செல்லும் போது, வாசகருடன் உரையாடிக் கொண்டே அவரும், கூடவே வருவது போல், இயல்பான சொற்களை தேர்ந்தெடுத்து பக்கங்கள் முழுவதும் தூவியிருக்கிறார்,  

ஆதரவற்ற பெண் வர்க்கத்தின் பல்லூழிகாலத் துயர்களையும், தவிப்புகளையும்,  காட்சிப் படுத்தும் தன்மையில் பல பெண்ணியல்வாதக் கவிஞர்களை விட்டும் வெகுவாக வித்தியாசம் காட்டுகிறார்.

ஹூருலீன்கள் என்ற தலைப்புக் கவிதை நம்முன் வைக்கும் சந்தேகங்கள் புறக்கணிக்க முடியாதவை. படைத்த இறைவனிடம் தன் முறையீட்டை சமர்ப்பிக்கும் ஒவ்வொரு பந்தியிலும் ஆற்றாமை தொனிக்கிறது.

‘’ நான் மட்டும் அவன் ஹூருலீனாய்//இம்மை மறுமை இரண்டிலும்  இருக்கப்  //பிரியம் கொண்ட போதிலும்//நானும் அவனது ஹூருலீன்தான் எனும்// பன்மைக்குள் ஒன்றாவதும்// இறைவா உனது கட்டளையின் பிரகாரமே//

மனைவியான பின்//கணவனைத் தவிர எவர் மனத்தும்// நுழைந்தின்பம் தராதவளா யிருக்க//கற்பை அவனுக்காகவே பாதுகாத்திருக்க// பலவீனப்பட்ட ஆண்கள் மனம்// அழகைக் கண்டு இவ்வுலகில் அலைபாய்தலும்// ஒன்றுக்கு மேல் துணைவியரை//ஹலாலாக்கிக் கொள்வதும்// பின்னரும் வீதிகளில்பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளாதிருப்பதும்// அசூயை ஆன மனதோடு// மனைவியை நெருங்குதலும் // சரிதானா இறைவா?//

இவ்வாறு கவிதை முழுவதும் முறையீடு செய்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்தப் பெண்களின் ஒப்பாரிக்கு இறைவனின் பதில்தான் என்ன... கனத்த மனதுடன் கவிதையின் பக்கங்களைக் கடந்து போனாலும், கவிதையும்  அது தந்த வலியும் விட்டுப் போவதாயில்லை.

’புனிதம் என்னும் நீர்க்குமிழ்ப் பறவை எத்தனைக் காலம் உடையாமல் ஊர் சுற்ற முடியும். இவர்களின் புனிதக் குடுவைகள் போலி இல்லறத்திலிருந்து வீசப்பட்டு வீதிகளில் விழுந்து நொறுங்குகின்றன. விழுந்த வீதியெங்கும் கற்பும் ஒழுக்கமும் அள்ளிக் குவித்த சாக்கடைப் போல நாற்றமெடுக்கின்றன.’’ என்ற,  தமிழக விமர்சகன் மா. சுகுமாரின் வார்த்தைகள் இவ்விடத்தில் ஞாபகம் வருகின்றன..

என்ன இருந்தாலும், தந்தை, சகோதரன், மகன் என்ற ஆண்பாலுயிர்கள் பெண்கள் மீது கொண்டிருக்கும் தூய நேசத்தைக் கருத்திற்கொண்டு, அடுத்த நூலிலாவது ஆண்கள் மீது அன்புப்  ‘பாலையூற்று அஷ்ரபா..  கொதிக்கும் எரி குளம்பையல்ல...

ஹூருலீன்கள்  தொகுதியின் ஒவ்வொரு கவிதை பற்றிய விரிவான உரையாடலுக்கு வேறு தளமும் இடமும் தேவை.  இன்னொரு சந்தர்ப்பத்தில் முயல்வோம்.

நாமிக் ரீஷ்மானின் அழகிய அட்டைப் பட வடிமைப்புடன், மிக நேர்த்தியான முறையில் நூலை, மகுடம் வெளியீடாக, ரூ; 600/-  என்ற குறைந்த விலையில் கொண்டு வந்திருக்கும், நண்பர் மைக்கல் கொலினை எவ்வளவும் பாராட்டலாம். தேவையானோர் 0774338878 உடன்  தொடர்புகொள்க..

0

தீரன்

 

 

 

 

 

 

 

அஷ்ரப் சிகாப்தீன்-கழுதை மனிதன்

 

அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’

நாடுகளை இணைக்கும் மொழிக் கயிறு

.......................................................................................................

 

மொழிபெயர்ப்புக்களினால் பல அரிய படைப்புக்கள் தமிழில் நமக்குக் கிடைக்கின்றன.  ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு, தான் பெயர்க்கும் படைப்பின் மீதான கவனம், அந்த  மொழி மீதான அறிவு, என்பன இன்றியமையாதன. இன்னும் தன் படைப்பு மொழியின் மீதும் ஆழ்ந்த நுண்ணறிவும் தேவையாகிறது.  முக்கியமாக, மொழிபெயர்ப்பாளனுக்குள்  ஒரு படைப்பாளன் இருத்தல் வேண்டும்..  இவற்றை  எல்லாம் உள்வாங்கிக் கொண்டுள்ள நண்பர் அஷ்ரஃப் சிஹாப்தீனின், மூன்றாவது மொழிபெயர்ப்பு நூலான ‘’கழுதை மனிதன்’  ஒன்பது சிறுகதைகளை உள்ளடக்கி, யாத்ரா வெளியீடாக வந்துள்ளது.  ஏற்கனவே,  ‘ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்’, ‘பட்டாம்பூச்சிக் கனவுகள்’ ஆகிய இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதை நூல்களை தந்தவர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

இவற்றை எல்லாம், இவர், ஆங்கில மொழி வழியாகவே பெயர்த்துள்ளதனால் இவை ஏறக்குறைய மூன்றாவது வடிகட்டல் தன்மையின என்றாகிறது.  மூலமொழியின்,  நிஜமான நுகர்வுணர்ச்சி இவற்றில் காணக் கிடைக்காவிட்டாலும்,  இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின், உணர்ச்சியை தமிழுக்குக் கடத்துவதில்  இம் மொழிபெயர்ப்பாளர் வெற்றி பெற்றுள்ளார் எனலாம்.

மூலப் படைப்பில் நடமாடித் திரியும் பாத்திரங்களின் பண்பாட்டுப் பின்புலங்களை  அறிந்து கொண்டு அப்பாத்திரத்தின் உரையாடல்களை தான் பெயர்க்கும் மொழிக்குள் கொணர்தல் என்பது ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு சிரமம் தரும் சவால் ஆகும்.   இந்தச் சவாலை இந்நூலாசிரியர், தன் நீண்டகால  எழுத்தனுபவத்தின்  மூலம் எதிர்கொண்டு இலாவகமாக கடந்து சென்றுள்ளார்.

இத்தொகுதியிலுள்ள, கழுதை வணிகம், பெட்டை நாய், கழுதை மனிதன் என்பன குறிப்பிடத்தக்க திறமையான தேர்ந்தெடுப்புக்கள் ஆகும். ‘’ஒரேயொரு எதிர்பார்ப்பு’’   என்ற இலங்கை எழுத்தாளர் புத்ததாச ஹேவகேயின்  கதை நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு மொழிபெயர்ப்பாகும். ஒன்பது கதைகளுமே ஒரு வகையில்  வாசக மனங்களை ஈர்க்கும் வகையில் அமைந்தவை.  

உலகின் இலக்கியங்கள் யாவும் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்வழியாக புதிய வெளிச்சத்தையும் அதன் தாக்கத்தினால் புதிய தடங்களையும் கண்டிருக்கின்றன. இங்கும், ஈரான், ஈராக், பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளின் கதைகளைத் தமிழ்ச் சாரளம் வழியாக நாம் தரிசித்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.  இந்த சாரளத்தை திறந்து தந்த மொழிபெயர்ப்பாளர் பன்னூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை எவ்வளவும் பாராட்டலாம்.

இந்நூலை, தன் இலக்கியப் பயணத்தில்  உந்துதலாகவும், உறுதுணையாகவும் நிற்கின்ற,  ‘காப்பியக்கோ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்,  கவிஞர்  அல் அஷூமத், கவிஞர் தாஸிம் அகமது,  கவிஞர் நாச்சியாதீவு பர்வீன்  ஆகியோருக்கு சமர்ப்பணம் ஆக்கி தன் விரிவான மனதை வெளிக்காட்டியுள்ளார் நண்பர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

 

அழகிய கருத்தாழமிக்க அட்டைப்படத்துடன், முன்னுரை, அணிந்துரை போன்ற ‘கரைச்சல்கள்’ ஏதுமின்றி,  இலகு வாசிப்புக்கு ஏற்ற வடிவில் 97 பக்கங்களுக்கு மட்டுப்படுத்திய அளவில், வெளிவந்துள்ளது ‘கழுதை மனிதன்’.  நாடுகளை இணைக்கும் இலக்கியக் கயிறு இது.. நூலாசிரியரின் மொழிபெயர்ப்பு பணிக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்... தொடர்புகளுக்கு,  0777 303 818.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Saturday, February 8, 2025

முல்லை முஸ்ரிபா

 

முல்லை முஸ்ரிபாவின்,

ஐந்தாம் மீராக் கிழவர் முதலியர் புதினம்

இதுவரை வாசிக்கப்படவில்லை

௦௦௦

 

ஏற்றலுக்கும், மறுதலிப்புக்குமான ஒரே பிரதி.

 

முல்லை முஸ்ரிபாவின், ஐந்தாம் மீராக் கிழவர் முதலியர் புதினம் இதுவரை வாசிக்கப்படவில்லை என்ற  பிரதி 31 பின் நவீனத்துவ  கடுகுப் புனைவுகளை தொகுத்து முல்லை வெளியீடாக வந்துள்ளஒரு, சிறுகதைத் திரட்டு ஆகும்.  ‘’.. கதையில்லாக் கதைகளாக  அல்லது கதையில் கதைகளாக அல்லது பெருங்கதையின் சிறு துண்டாகவோ கதையின் வெட்டுமுகமாகவோ இந்தப் புனைவுகளை ஒருசேர வாசித்த போது உணர்ந்தேன்...’’  என்று பொன்மீராவாக அவதாரம் எடுத்து தான் பிரசவித்த பனுவல்கள் குறித்து பிரதியின் ஆசிரியர் குறிப்பிடுவது போலவே இவற்றை நுகர்வோரும் உணர்வர் ..

 

ஒரு வேலைக்காரன் தடியைப் போல வயல் வெளியிலும், வாழ்க்கைக் காலத்திலும் தன் காலூன்றி நின்ற தன் தந்தையாருக்கும், எழுதித் தீரா நிலத்தில் அலைந்து திரியும் மீராக் கிழவர்களுக்கும் இதை சமர்ப்பித்திருக்கும் முல்லை முஸ்ரிபாவின், இந்த 31 பனுவல்களுக்குள்ளும் புகுந்து வெளியேறும் போது ஒவ்வொரு தடவையும் என் செட்டைகளில் புதுவர்ணம் பூசிக் கொண்டேன்..

 

‘’வெவ்வேறு தளத்தில் இயங்கும் குறியீடுகளை வைப்பதன் மூலம், அவை தங்களுக்குள் ஊடாடி உருவாகும் பிரதித் தன்மையை நம்பியே பின் நவீனத்துவ படைப்பு இயங்குகிறது..’’  என்பதற்கு அச்சொட்டான வாக்குமூலமாக இவரது பனுவல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன...

 

‘நனவிலி’  என்னும் பனுவலில், வரும், மென்சியின் ஆகர்ஷிப்பால்  சூம்பியின் மன வேக்காட்டில் நிகழும் எதிர்வினைகளை நுன்கோர்ப்புத் திறனுடன், ஆரம்பித்து, உணர்ச்சிக்கு மேம்பட்ட தளத்தில், நின்று, ஒரு எழுத்துச் சிலந்தியாய்  பின்னிக் கட்டிவிடுகிறார் முஸ்ரிபா..

 

‘புதிய அரிச்சுவடி- வீமாவர் குறிப்பு.’ –ஒரு, மொழியின் மீது சில வன்முறைகளை நிகழ்த்துகிற ஒரு  வித்தியாசமான வார்ப்பு ஆகும். இ-ஈ குறில் நெடில் பொருத்தமற்றவை என்றும், உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை மீதான சந்தேகமும், ஊனாவுக்கு மேலே ளானாபோட்டால் ஊவன்னா வராதுஎன்றும், அரவுக்கு மேலே குற்று வைத்தால் எப்படி ர் வரும்  என்பதுமாக கதை முழுவதும் வினாக்களும், சந்தேகமுமாய்.., புதிய அரிச்சுவடி ஒன்றை ஆக்கும்  வீமாவரின் எத்தனங்கள், இறுதியில், 22ஆம் நூற்றாண்டில் கையில் புதியதொரு  மின் அரிச்சுவடியை  அரங்கேற்றுவதில் வீமாவர்க் கிழவன் வெற்றியடைகிறார். கடந்த காலத்திற்குள் மாற்றுப் பார்வையுடன் பயணம் செய்ய வேண்டும் எனக்கருதும் ஒரு திறமையான நியாயப்படுத்தலை  இங்கு நிறுவியிருக்கிறார் முஸ்ரிபா..

 

‘மாயப் பேய் வெருட்டி’  என்பது, இத்திரட்டிலுள்ள ஒரு முக்கியமான நிர்மாணம் ஆகும். மொழியின், கட்டற்ற வெளிப்பாட்டுத்தன்மை, நுகர்பவனின் அறிதலில் ஒரு புதிய வாசிப்பையும், அக வயமாகவோ புற வயமாகவோ எந்த முடிவுக்கும் வராதிருப்பதையும்  எச்சரிக்கையுடன் நோக்குகிறது இது.  பனுவல்களிளிருந்து பழைய சொற்களை அள்ளி எறியும் போது, நாமும் தவிர்க்க முடியாவாறு வெளியே வந்து விழுகிறோம்..

 

இவ்வாறே, ‘ரபான்’ கதையில்,  அந்த ஒலியின் இசைவாக்கத்தில் ஒன்றிப் போன மஹ்தியின் மனம், தனக்கான  பண்பாட்டு வெளியில், ரபான் தரும் ஒலியை விருப்பத்துக்குரிய ஒரு பேசுபொருளாக மாற்றி விடுகிறது. அந்த தெய்வீக இசைக்காக ஏங்குகிறது.. மஹதியும் சுற்றுப்புற சூழல் குறித்த கவலைகள் அற்றுப் போய், தானே பக்கீர் ஆகி விடுகிறான்.... அருமையான ஒரு வார்ப்பு இது.

 

அழகிரிசாமியின் அணில், நாய் பார்க்கிற வேலை, முட்டை வாசி  என்னும், தலைப்புக்களில், நாமும் மேய்ந்து கொண்டிருக்கும் போது அவை முன் வைக்கும் பேசுபொருளுடன் அவற்றைப் பேசுவதன் தன்மை குறித்தும் பரிசீலனைசெய்ய வேண்டியிருக்கிறதை மறுதலிப்பதற்கில்லை. இக்கதைகளின் மையமான பொருள், ஆசிரியனுக்கு உரித்தானதா, ஆசிரியன் இக்கதைகளுக்கான சூழ்நிலைகளையும் கதாபாத்திரங்களையும் உருவாக்குகிறானா என்பதில் நமக்கு ஒரு புரிதல் ஏற்படவே செய்கிறது.. இக்கதைகளில், சூழலியல் பிறழ்வுகளை தான் ஒழுங்கமைத்த பாத்திரங்களில் இட்டு நிரப்புகிற, அற்புத  வேலையை செய்கிறார் என்றே தோன்றுகிறது.

 

ஒரு வாழ்க்கைக் கோடு, முட்டையன் முபாரக்கனோடு இணங்கிச் செல்லும் தன்மையை தனக்குரிய முட்டை மொழியில், எடுத்துரைக்கும் முட்டைவாசி ஒரு ஆச்சரியம் பொதிந்த கட்டுமானம் ஆகிறது. முட்டையில் வசிக்கும் நிலையில், முட்டைவாசி என்றும்,  முட்டையை வாசிக்கும்  நிலையில் முட்டை-வாசி  என்றும் பக்கங்கள் முழுவதும் முட்டையிட்டு  செல்லும் கதை சொல்லி, ஓர் எளிய முட்டைக்கருவை  இலகு  வடிவத்தில்  ஒத்துப்போகும் தன்மையுடன்  புரிந்து வைத்திருந்ததற்கு மாறாக வேறு நோக்கங்களுடனும்  அணுகலாம் என்ற சிந்தனையுடன் முட்டையை உருட்டிச் செல்கிறார்...ஒரு இலகு கதை சொல்லியாக முட்டை படாமல் போட்டியின் பெயரைக் காப்பாற்றி விடுகிறார்.

 

அமிர்தலிங்கம் லிங்கேஷன் எனும், லிங்கி பட்டுப் போன ஆலமரக் காலத்தை எண்ணி வர்ணக் கண்ணீர் விடும் பாங்கினை அதீதத் தனத்துடன் சொல்லுகின்ற முஸ்ரிபா என்னும் ‘கதை நிர்மானி’யின் வார்த்தைகள் 77 ஆம் பக்கத்தில் சறுக்கி விழுந்து, காயமுற்ற சொற்களை கொஞ்சம் ஆறுதல்படுத்தியிருக்கின்றன என்றே எண்ணத் தோன்றுகிறது.

 

‘’...  துண்டு துண்டானவை, தொடர்பற்றவை, தற்காலிக மானவை, நிலையற்றவை நேர் கோட்டுத்தனமற்றவை, பன்மியப்பாங்கு கொண்டவை, நேர்க்காட்சித் தளத்தவை ஆகியவை பின்னை நவீனத்தால் பாராட்டப்படுகின்றன.....’’ பேராசிரியர் முத்துமோகனின் இந்தக் கூற்றை நாம் முல்லை முஸ்ரிபாவின்,சினத்த முகத்தை அணிந்தவன்,ஏஐ. விருத்தர்,காலம் வீடு மரம் போன்ற  இயற்றுகைகளுடன் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவை,நமக்கு இயல்பாகவே  ஏற்படவே செய்கிறது,,  

 

தொடர்ச்சியற்றதாகக் கதைசொல்லும் முறை கொப்ப,  முஸ்ரிபாவின்,  இயற்றுகைகளை,  ‘’கதை’’ என்பதற்குள் வகைப்படுத்த முடியாதுதான். அவர் தயாரித்து அளித்துள்ள மனிதவார்ப்புக்கள் ஒவ்வொன்றும்,  தனித் தன்மையின. அவர்களின் மொழியை முழுவதுமாக அவரே மொழிந்து விடுவது இயற்கையை மீறும் செயலாகவும் இருக்கிறது. வருஷன், பெயின்ற் மாஸ்டர், வென்று தணியும் தாகத்தில் வரும் கோச் ஆகிய மானுட வார்ப்புகளுக்கு இன்னும் சிறிது  மொழிச் சுதந்திரம் கொடுத்திருக்க முடியும்..

 

இக் கதைத் திரட்டில் உள்ள, ‘ஐந்தாம் மீராக் கிழவர் கூற்று’  என்னும் இயற்றுகை ஒரு உச்சக்கட்ட  திரட்சி என்று கூறலாம். நிலச் சுவாவாந்தரான கதிர் மீரா என்னும் முதலாம் மீராக் கிழவன் –கற்பூரப்புல், குமாரபுரம் பகுதிகளில் குடியேறிய மக்கள் கூட்டத்தின் பிரதிநிதியான இரண்டாம் கதிர் மீராக் கிழவன்,  தண்ணீருற்றில் நிலை கொண்ட மக்கள் தொகுதியின் பிரதிநிதியான மூன்றாம் மீராக் கிழவன், 1950 களில் வாழ்ந்த மீராசாஹிபு அப்பா என்னும், நான்காம் மீராக் கிழவன், புதினம் பெருக்கெடுத்தலில் நிராசையாகிப் போன ஐந்தாம் மீரான், ஆகியோரின் பண்பாட்டசைவுகளை சித்தரித்து இவர்களை வரலாற்றின் நெடிய வாய்க்காலில் இணைக்கின்ற முயற்சியில், அலைந்து திரிந்த இக்கதை சொல்லிக்கும், நமக்கும்  1995க்குப் பின் ஒரு தகவலும் சரியாகக் கிடைக்கவில்லை எனினும் புதினம் நிறையப் பறந்து திரியும் பொன்னி வண்டுக்காவது கிடைக்கலாம்.

 

முல்லை முஸ்ரிபாவின், பனுவல்களில் உள்ள சுயமோகக் கூறுகளைக் கண்டறிந்து, அவற்றின், தளங்களின் மீதும், குறியீடுகளின் மீதும் ஆச்சரியப்படும்படியான கேள்விகளை எழுப்பி , அவற்றுக்கான விடைகளை தேடுவதில் வாசகனின் கவனக் குவிப்பு  மிகவும், தேவையுடையதாகிறது. வாழ்க்கைக் கோடுகளை வரைவதில்  இப்பிரதி உருவாக்குனர் எத்தகைய ஆச்சரியங்களை, நுகர்வோரில் செதுக்குகிறார் என்பது ஒரு முக்கிய நிலைப் பண்பு ஆகும்..

 

நூறு மீற்றர் ஓடுவது போல இந்நூலில் எல்லோராலும் ஓட முடியாது.. சாக்கினுள் வாசகனும், நூலாசிரியரும் காலை விட்டுக் கொண்டு,  நிறுத்தி நிதானித்து ஓடவேண்டி இருக்கிறது..வாசகரை தன் சக பயணியாகப் பாவிக்காமல், தன் போக்கினைத் தொடரும்படி பிரதி  முழுவதும் அதட்டுகிறார்.

 

சிறுகதைகள் பற்றி, இளைய எழுத்தாளர்கள் பலர் கொண்டிருக்கும் மாயாஜாலத்தை  இவரது இக்கதைகள் முற்றிலும் உடைத்து விடும் எனலாம். பனுவல்களின்    கட்டமைப்புகளும், ஏன் கருமுட்டைகளும் ஒழுங்கற்றதோர் ஒழுங்கமைப்பில் அடுக்கப்பட்டிருப்பதையும்  கண்டு கொள்ள முடியும்.  இவரது, எல்லா அளிப்புகளும் தொடர்ச்சியின்மையை விடாப்பிடியாகத் தொடர்வதையும்  புரிந்து கொள்ளவும் இயலும். 

 

முல்லை பப்ளிகேஷன் வெளியீடாக, லார்க் பாஸ்கரனின் வியத்தகும் அட்டை அமைப்புடன் வந்துள்ள ஐந்தாம் மீராக் கிழவர் முதலியர் புதினம் இதுவரை வாசிக்கப்படவில்லை  எனும் முல்லை முஸ்ரிபாவின் கதைத் திரட்டு இந்த காலப்பகுதியில் வெளியான உச்சபட்ச அதிநவீனக் கதைக் கோர்ப்பு என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.  மேலும், இந்த கதை நிர்மானங்கள் பற்றி, உரத்த தொனியிலான  உரையாடலுக்கும்  இடமுண்டு என்பதைக் கூறிவிடுகிறேன். .....   (தொடர்புகள்..077 5562475.)

௦௦௦

 

n  தீரன்.ஆர்.எம். நௌஷாத்.