அ.வா. முஹ்சீனின், ‘தற்கொலை குறித்து ஓர்
உரையாடல்’. (சிறுகதைகள்)
--------------------------------------------------------------------------------------------
அ.வா. முஹ்சீன், எளிமையான முறையில் தன் கதைகளை நகர்த்திச் செல்கின்ற
உத்தியை விடாப்பிடியாகக் கையாளும் ஓர் அபாரமான கதைசொல்லி என்பது என் துணிபு. ஏற்கனவே ‘இங்கினயும் ஒரு மஹ்சர்’’ என்ற,
சோனகமொழிச் சிறுகதைத் தொகுதியை வாசித்த போதே
மொழியைக் கவனமாகக் கையாளும் விசித்திர வித்தைகள் தெரிந்தவர் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன்.
இப்போது, அவரது, 9 சிறுகதைகளைக் கொண்ட ‘’
தற்கொலை குறித்து ஓர் உரையாடல்’’ என்ற சிறுகதைத் தொகுதியைப் படித்து முடித்த பின் எனக்குள்
ஏற்பட்ட அவரது எழுத்துக்கள், மற்றும் சொல்நேர்த்திகள் குறித்த ஆச்சரியம் இன்னும் அதிகரித்தே இருக்கிறது.
கதையின் மையச் சரட்டை, இயல்பு வாழ்க்கையுடன்
இயைந்து போகும்படி கட்டமைத்துக் கதை சொல்லும் முஹ்சீனின் கதைப்பின்னல் வியக்கத்தக்கது. அவரது எல்லாக் கதைகளிலும் இயல்பான
கதை ஓட்டமும், யதார்த்தமான பார்த்திர வார்ப்புகளும், குறிப்பிடும்படி அமைந்திருக்கும். சிக்கலில்லாத மொழியில் பேசுவதில் அவரது தனித்தன்மையும் வெளிப்பட்டு நிற்கும்..
இது தொகுதியில் உள்ள 9 கதைகளிலும், ‘’ தற்கொலை
குறித்து ஓர் உரையாடல்’’ என்ற தலைப்புக் கதை என்னை மிகவும் ஆகர்ஷித்தது. கதை நெடுகிலும், ஓர் உளவியல் தன்மையைத் தூவிச் செல்லும்
போதே, கதையின் சித்தரிப்பையும் , காட்சிப் புலத்தையும் வாசகருக்கு காண்பித்து,
இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பத்தில் கொண்டு போய் கதையையும் நம்மையும் நிறுத்துகிறார்.
ஏன் இப்படி அமைத்தார் என்று வாசகரை சிந்திக்க விடுவதில் சிரத்தை
கொண்டுள்ளாரோ என எண்ணத் தோன்றியது.. என்றாலும், இக்கதையின் வெற்றிக்கு இந்த உத்தி ஒரு
முக்கிய முனை ஆகிறது..
‘’ஜின்னுடன் உறவாடுதல்’’ என்பது இன்னொரு
முக்கிய கதை.. அமானுஷ்யம் பேசும் இக்கதையின் கருவை, எடுத்தாளுதல் அநேகருக்கு கடினமான
ஒன்று. முஹ்சின் மிக கவனத்துடன் ஜின்னுடன் உறவாடியிருக்கிறார். மனப்பிராந்தி, பேய், வாசிலாத்து எல்லாம் கடந்து
ஜின்கள் பற்றிய வேறொரு உலகத்தைக்
காட்டியிருக்கிறார். தானே உணர்ந்த தன்னுடைய மன அவசத்தை, தற்கூற்று மொழியில் இயல்பாக சொல்லிச் செல்கிறார். இதனால் இக்கதையின்
மீது ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டுவிடுகிறது. எழுத்தும், வலுவுடன் ஊன்றி நிற்கிறது. ஜின்களின் பால் அடையாளம் போன்ற
விடயங்களில் எனக்கு சில தனிப்பட்ட முரண்பாடுகள் இருந்த போதிலும், முஹ்சினின் கதையோடு ஒன்றிச் செல்வதில் ஒரு
பிரச்சினையும் ஏற்படவில்லை.
‘’ஆண்மனம்’’ என்ற கதை பல வாசகரைக்
கவர்ந்த ஓர் ஆக்கம் என்பது தெரியவருகிறது.
அது உண்மைதான்.. அடுத்த வீட்டின் அகலக் குறுக்குகளை அளந்தெடுத்த மொழியில்
அனாயஸ்யமாக சொல்லிச் செல்லும் அழகை இக்கதை நெடுகிலும் காணலாம். கதையை, அடுத்த வீட்டுக் கதவைத் திறந்து, அங்குள்ள
மாந்தரின் இயல்பு நிலையை, அவர்தம் உளக் கிடக்கைகளை இயல்பாகச் சொல்வதால் இக்கதை உயிர்பெற்று எழுந்து நிற்கிறது. வாழ்வின் பல்வேறு சாத்தியங்களையும் விரித்துக்
காட்டுகிறது.. அதுவே இப்படைப்பின் வெற்றியாகவும் இருக்கிறது.
மேலும், ‘மூலை வீடு’, ‘விடுதலை’ போன்ற கதைகள் மிகவும் மனவேக்காடுகளின் வலிகளைப் பேசுபவை..முஹ்சின் தன் கதைகளின் மீது ஓட விட்டிருக்கும் இயல்பான மொழிப் பிரவாகம், அவரது ஒவ்வொரு கதைகளின் வெற்றிக்கும் காரணமாகிறது. அவர் தன் கதைகளின் மீது அக்கறையுடன் போர்த்திக் கொண்டிருக்கும் அந்த ‘எளிமை நிலை’ அவரது படைப்புகளை இன்னொரு உன்னத நிலைக்கு உயர்த்தி விடுகிறது.
முஹ்சினின் கதைகள் பற்றிப் பேச விரிந்த தளமும், நேரமும் தேவை. முகநூலுக்காக சுருங்கிய அளவில் சொல்லியிருக்கிறேன்.
இந்நூல் மூத்த கதை சொல்லி எஸ்.எல்.எம்.முக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளதானது ஒரு முக்கிய வரலாறு ஆகும். ...
இச் சிறுகதைத்தொகுப்பு, 168
பக்கங்களுடன், மூதூர் JMI வெளியீட்டகத்தின் நேர்த்தியான அச்சுப் பதிப்புடன், கவர்ச்சியான தளக் கோலத்துடன், மு.தானிஷ் அப்ரித்தின், அழகிய அட்டை வடிவமைப்புடன் ரூ.700/= விலையில், கிடைக்கிறது. தொடர்புகளுக்கு—0778089827.