Saturday, February 8, 2025

முல்லை முஸ்ரிபா

 

முல்லை முஸ்ரிபாவின்,

ஐந்தாம் மீராக் கிழவர் முதலியர் புதினம்

இதுவரை வாசிக்கப்படவில்லை

௦௦௦

 

ஏற்றலுக்கும், மறுதலிப்புக்குமான ஒரே பிரதி.

 

முல்லை முஸ்ரிபாவின், ஐந்தாம் மீராக் கிழவர் முதலியர் புதினம் இதுவரை வாசிக்கப்படவில்லை என்ற  பிரதி 31 பின் நவீனத்துவ  கடுகுப் புனைவுகளை தொகுத்து முல்லை வெளியீடாக வந்துள்ளஒரு, சிறுகதைத் திரட்டு ஆகும்.  ‘’.. கதையில்லாக் கதைகளாக  அல்லது கதையில் கதைகளாக அல்லது பெருங்கதையின் சிறு துண்டாகவோ கதையின் வெட்டுமுகமாகவோ இந்தப் புனைவுகளை ஒருசேர வாசித்த போது உணர்ந்தேன்...’’  என்று பொன்மீராவாக அவதாரம் எடுத்து தான் பிரசவித்த பனுவல்கள் குறித்து பிரதியின் ஆசிரியர் குறிப்பிடுவது போலவே இவற்றை நுகர்வோரும் உணர்வர் ..

 

ஒரு வேலைக்காரன் தடியைப் போல வயல் வெளியிலும், வாழ்க்கைக் காலத்திலும் தன் காலூன்றி நின்ற தன் தந்தையாருக்கும், எழுதித் தீரா நிலத்தில் அலைந்து திரியும் மீராக் கிழவர்களுக்கும் இதை சமர்ப்பித்திருக்கும் முல்லை முஸ்ரிபாவின், இந்த 31 பனுவல்களுக்குள்ளும் புகுந்து வெளியேறும் போது ஒவ்வொரு தடவையும் என் செட்டைகளில் புதுவர்ணம் பூசிக் கொண்டேன்..

 

‘’வெவ்வேறு தளத்தில் இயங்கும் குறியீடுகளை வைப்பதன் மூலம், அவை தங்களுக்குள் ஊடாடி உருவாகும் பிரதித் தன்மையை நம்பியே பின் நவீனத்துவ படைப்பு இயங்குகிறது..’’  என்பதற்கு அச்சொட்டான வாக்குமூலமாக இவரது பனுவல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன...

 

‘நனவிலி’  என்னும் பனுவலில், வரும், மென்சியின் ஆகர்ஷிப்பால்  சூம்பியின் மன வேக்காட்டில் நிகழும் எதிர்வினைகளை நுன்கோர்ப்புத் திறனுடன், ஆரம்பித்து, உணர்ச்சிக்கு மேம்பட்ட தளத்தில், நின்று, ஒரு எழுத்துச் சிலந்தியாய்  பின்னிக் கட்டிவிடுகிறார் முஸ்ரிபா..

 

‘புதிய அரிச்சுவடி- வீமாவர் குறிப்பு.’ –ஒரு, மொழியின் மீது சில வன்முறைகளை நிகழ்த்துகிற ஒரு  வித்தியாசமான வார்ப்பு ஆகும். இ-ஈ குறில் நெடில் பொருத்தமற்றவை என்றும், உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை மீதான சந்தேகமும், ஊனாவுக்கு மேலே ளானாபோட்டால் ஊவன்னா வராதுஎன்றும், அரவுக்கு மேலே குற்று வைத்தால் எப்படி ர் வரும்  என்பதுமாக கதை முழுவதும் வினாக்களும், சந்தேகமுமாய்.., புதிய அரிச்சுவடி ஒன்றை ஆக்கும்  வீமாவரின் எத்தனங்கள், இறுதியில், 22ஆம் நூற்றாண்டில் கையில் புதியதொரு  மின் அரிச்சுவடியை  அரங்கேற்றுவதில் வீமாவர்க் கிழவன் வெற்றியடைகிறார். கடந்த காலத்திற்குள் மாற்றுப் பார்வையுடன் பயணம் செய்ய வேண்டும் எனக்கருதும் ஒரு திறமையான நியாயப்படுத்தலை  இங்கு நிறுவியிருக்கிறார் முஸ்ரிபா..

 

‘மாயப் பேய் வெருட்டி’  என்பது, இத்திரட்டிலுள்ள ஒரு முக்கியமான நிர்மாணம் ஆகும். மொழியின், கட்டற்ற வெளிப்பாட்டுத்தன்மை, நுகர்பவனின் அறிதலில் ஒரு புதிய வாசிப்பையும், அக வயமாகவோ புற வயமாகவோ எந்த முடிவுக்கும் வராதிருப்பதையும்  எச்சரிக்கையுடன் நோக்குகிறது இது.  பனுவல்களிளிருந்து பழைய சொற்களை அள்ளி எறியும் போது, நாமும் தவிர்க்க முடியாவாறு வெளியே வந்து விழுகிறோம்..

 

இவ்வாறே, ‘ரபான்’ கதையில்,  அந்த ஒலியின் இசைவாக்கத்தில் ஒன்றிப் போன மஹ்தியின் மனம், தனக்கான  பண்பாட்டு வெளியில், ரபான் தரும் ஒலியை விருப்பத்துக்குரிய ஒரு பேசுபொருளாக மாற்றி விடுகிறது. அந்த தெய்வீக இசைக்காக ஏங்குகிறது.. மஹதியும் சுற்றுப்புற சூழல் குறித்த கவலைகள் அற்றுப் போய், தானே பக்கீர் ஆகி விடுகிறான்.... அருமையான ஒரு வார்ப்பு இது.

 

அழகிரிசாமியின் அணில், நாய் பார்க்கிற வேலை, முட்டை வாசி  என்னும், தலைப்புக்களில், நாமும் மேய்ந்து கொண்டிருக்கும் போது அவை முன் வைக்கும் பேசுபொருளுடன் அவற்றைப் பேசுவதன் தன்மை குறித்தும் பரிசீலனைசெய்ய வேண்டியிருக்கிறதை மறுதலிப்பதற்கில்லை. இக்கதைகளின் மையமான பொருள், ஆசிரியனுக்கு உரித்தானதா, ஆசிரியன் இக்கதைகளுக்கான சூழ்நிலைகளையும் கதாபாத்திரங்களையும் உருவாக்குகிறானா என்பதில் நமக்கு ஒரு புரிதல் ஏற்படவே செய்கிறது.. இக்கதைகளில், சூழலியல் பிறழ்வுகளை தான் ஒழுங்கமைத்த பாத்திரங்களில் இட்டு நிரப்புகிற, அற்புத  வேலையை செய்கிறார் என்றே தோன்றுகிறது.

 

ஒரு வாழ்க்கைக் கோடு, முட்டையன் முபாரக்கனோடு இணங்கிச் செல்லும் தன்மையை தனக்குரிய முட்டை மொழியில், எடுத்துரைக்கும் முட்டைவாசி ஒரு ஆச்சரியம் பொதிந்த கட்டுமானம் ஆகிறது. முட்டையில் வசிக்கும் நிலையில், முட்டைவாசி என்றும்,  முட்டையை வாசிக்கும்  நிலையில் முட்டை-வாசி  என்றும் பக்கங்கள் முழுவதும் முட்டையிட்டு  செல்லும் கதை சொல்லி, ஓர் எளிய முட்டைக்கருவை  இலகு  வடிவத்தில்  ஒத்துப்போகும் தன்மையுடன்  புரிந்து வைத்திருந்ததற்கு மாறாக வேறு நோக்கங்களுடனும்  அணுகலாம் என்ற சிந்தனையுடன் முட்டையை உருட்டிச் செல்கிறார்...ஒரு இலகு கதை சொல்லியாக முட்டை படாமல் போட்டியின் பெயரைக் காப்பாற்றி விடுகிறார்.

 

அமிர்தலிங்கம் லிங்கேஷன் எனும், லிங்கி பட்டுப் போன ஆலமரக் காலத்தை எண்ணி வர்ணக் கண்ணீர் விடும் பாங்கினை அதீதத் தனத்துடன் சொல்லுகின்ற முஸ்ரிபா என்னும் ‘கதை நிர்மானி’யின் வார்த்தைகள் 77 ஆம் பக்கத்தில் சறுக்கி விழுந்து, காயமுற்ற சொற்களை கொஞ்சம் ஆறுதல்படுத்தியிருக்கின்றன என்றே எண்ணத் தோன்றுகிறது.

 

‘’...  துண்டு துண்டானவை, தொடர்பற்றவை, தற்காலிக மானவை, நிலையற்றவை நேர் கோட்டுத்தனமற்றவை, பன்மியப்பாங்கு கொண்டவை, நேர்க்காட்சித் தளத்தவை ஆகியவை பின்னை நவீனத்தால் பாராட்டப்படுகின்றன.....’’ பேராசிரியர் முத்துமோகனின் இந்தக் கூற்றை நாம் முல்லை முஸ்ரிபாவின்,சினத்த முகத்தை அணிந்தவன்,ஏஐ. விருத்தர்,காலம் வீடு மரம் போன்ற  இயற்றுகைகளுடன் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவை,நமக்கு இயல்பாகவே  ஏற்படவே செய்கிறது,,  

 

தொடர்ச்சியற்றதாகக் கதைசொல்லும் முறை கொப்ப,  முஸ்ரிபாவின்,  இயற்றுகைகளை,  ‘’கதை’’ என்பதற்குள் வகைப்படுத்த முடியாதுதான். அவர் தயாரித்து அளித்துள்ள மனிதவார்ப்புக்கள் ஒவ்வொன்றும்,  தனித் தன்மையின. அவர்களின் மொழியை முழுவதுமாக அவரே மொழிந்து விடுவது இயற்கையை மீறும் செயலாகவும் இருக்கிறது. வருஷன், பெயின்ற் மாஸ்டர், வென்று தணியும் தாகத்தில் வரும் கோச் ஆகிய மானுட வார்ப்புகளுக்கு இன்னும் சிறிது  மொழிச் சுதந்திரம் கொடுத்திருக்க முடியும்..

 

இக் கதைத் திரட்டில் உள்ள, ‘ஐந்தாம் மீராக் கிழவர் கூற்று’  என்னும் இயற்றுகை ஒரு உச்சக்கட்ட  திரட்சி என்று கூறலாம். நிலச் சுவாவாந்தரான கதிர் மீரா என்னும் முதலாம் மீராக் கிழவன் –கற்பூரப்புல், குமாரபுரம் பகுதிகளில் குடியேறிய மக்கள் கூட்டத்தின் பிரதிநிதியான இரண்டாம் கதிர் மீராக் கிழவன்,  தண்ணீருற்றில் நிலை கொண்ட மக்கள் தொகுதியின் பிரதிநிதியான மூன்றாம் மீராக் கிழவன், 1950 களில் வாழ்ந்த மீராசாஹிபு அப்பா என்னும், நான்காம் மீராக் கிழவன், புதினம் பெருக்கெடுத்தலில் நிராசையாகிப் போன ஐந்தாம் மீரான், ஆகியோரின் பண்பாட்டசைவுகளை சித்தரித்து இவர்களை வரலாற்றின் நெடிய வாய்க்காலில் இணைக்கின்ற முயற்சியில், அலைந்து திரிந்த இக்கதை சொல்லிக்கும், நமக்கும்  1995க்குப் பின் ஒரு தகவலும் சரியாகக் கிடைக்கவில்லை எனினும் புதினம் நிறையப் பறந்து திரியும் பொன்னி வண்டுக்காவது கிடைக்கலாம்.

 

முல்லை முஸ்ரிபாவின், பனுவல்களில் உள்ள சுயமோகக் கூறுகளைக் கண்டறிந்து, அவற்றின், தளங்களின் மீதும், குறியீடுகளின் மீதும் ஆச்சரியப்படும்படியான கேள்விகளை எழுப்பி , அவற்றுக்கான விடைகளை தேடுவதில் வாசகனின் கவனக் குவிப்பு  மிகவும், தேவையுடையதாகிறது. வாழ்க்கைக் கோடுகளை வரைவதில்  இப்பிரதி உருவாக்குனர் எத்தகைய ஆச்சரியங்களை, நுகர்வோரில் செதுக்குகிறார் என்பது ஒரு முக்கிய நிலைப் பண்பு ஆகும்..

 

நூறு மீற்றர் ஓடுவது போல இந்நூலில் எல்லோராலும் ஓட முடியாது.. சாக்கினுள் வாசகனும், நூலாசிரியரும் காலை விட்டுக் கொண்டு,  நிறுத்தி நிதானித்து ஓடவேண்டி இருக்கிறது..வாசகரை தன் சக பயணியாகப் பாவிக்காமல், தன் போக்கினைத் தொடரும்படி பிரதி  முழுவதும் அதட்டுகிறார்.

 

சிறுகதைகள் பற்றி, இளைய எழுத்தாளர்கள் பலர் கொண்டிருக்கும் மாயாஜாலத்தை  இவரது இக்கதைகள் முற்றிலும் உடைத்து விடும் எனலாம். பனுவல்களின்    கட்டமைப்புகளும், ஏன் கருமுட்டைகளும் ஒழுங்கற்றதோர் ஒழுங்கமைப்பில் அடுக்கப்பட்டிருப்பதையும்  கண்டு கொள்ள முடியும்.  இவரது, எல்லா அளிப்புகளும் தொடர்ச்சியின்மையை விடாப்பிடியாகத் தொடர்வதையும்  புரிந்து கொள்ளவும் இயலும். 

 

முல்லை பப்ளிகேஷன் வெளியீடாக, லார்க் பாஸ்கரனின் வியத்தகும் அட்டை அமைப்புடன் வந்துள்ள ஐந்தாம் மீராக் கிழவர் முதலியர் புதினம் இதுவரை வாசிக்கப்படவில்லை  எனும் முல்லை முஸ்ரிபாவின் கதைத் திரட்டு இந்த காலப்பகுதியில் வெளியான உச்சபட்ச அதிநவீனக் கதைக் கோர்ப்பு என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.  மேலும், இந்த கதை நிர்மானங்கள் பற்றி, உரத்த தொனியிலான  உரையாடலுக்கும்  இடமுண்டு என்பதைக் கூறிவிடுகிறேன். .....   (தொடர்புகள்..077 5562475.)

௦௦௦

 

n  தீரன்.ஆர்.எம். நௌஷாத்.