Tuesday, October 1, 2024

எஸ். பாயிஷா அலி- பூந்துணர்

 

வரிகளுக்கூடான வாழ்க்கை மாற்றம்

 

கிண்ணியா, பாடசாலை தோழிகள் இருவர்  உருவாக்கிய   KGC 95  என்ற  வட்ஸ் அப்  குரூப் இன்று, கிண்ணியா மகளிர் மஞ்சரி ( KMM) என்ற  அரச அங்கீகாரம்  பெற்ற மகளிர் அமைப்பாக வியாபித்து, பெரு வளர்ச்சி கண்டுள்ள  வரலாறு  நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த அமைப்பானது, கிண்ணியாவில் நன்கு வேரூன்றி ஏறக்குறைய 250 மகளிரைக் கொண்டு, கிண்ணியாவில் கலை இலக்கிய சமூகப் பணிகளில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது..

குறைந்த வருமானம் உடைய பாடசாலை மாணவர்களுக்கு  பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்,  அனர்த்த நிவாரணம்,  இலவச சிங்கள, ஆங்கில  நிகழ்நிலை வகுப்புகள்,  ஆன்மீக வழிகாட்டல், புனித குர்ஆன் விளக்க வகுப்புகள்  எனப் பல்வேறு சேவைகளை வழங்கி வரும்  இந்த அமைப்பின், எதிர்கால நோக்கங்களாக,  மகளிருக்கான ஒரு நூலகம் அமைத்தல், முச்சக்கர வண்டிக்கான பெண் சாரதிகளை பயிற்றுவித்தல், அடைவுமட்டம் குறைந்த வகுப்புக்களை பாரமெடுத்து உயர்த்துதல்,  இஸ்லாமிய மரணச் சடங்குப் பயிற்சி நெறி, பெண்களுக்கான உளவியல் வலுவூட்டல் நிகழ்வுகள், முதியோர் பராமரிப்பு,  வைத்திய முகாம் மற்றும் இரத்த தான நிகழ்வுகள்.....இப்படி இன்னும் பலவிதமான ஆரோக்கியமான நிகழ்ச்சி நிரல்களை தம் வசம் வைத்துக் கொண்டிருக்கும்  இந்த  கிண்ணியா மகளிர் மஞ்சரி  வெளியிட்டிருக்கும் ஒரு சஞ்சிகை பூந்துணர் என்ற பெயரில்  மலர்ந்துள்ளது.. அவர்களின் ஒரு நல்ல சஞ்சிகைக்கான கனவு இன்று சாத்தியமாகியிருக்கிறது....

 

“வரிகளுக்கூடான வாழ்க்கை மாற்றம்”  என்ற மகுட வாசகத்தை அணிந்துகொண்டு,  அழகான தளக்கோலத்துடன்,  காத்திரமான –பல ஆக்கங்களுடன், பன்னூலாசிரியர், திருமதி, பாயிஷா அலி  அவர்களின் நெறியாள்கையில் கிண்ணியா மகளிரின் பல்வேறுபட்ட காத்திரமான ஆக்கங்களுடன், வெளிவந்துள்ளது.  

 

சஞ்சிகையில் உள்ள, அருமையான பல ஆக்கங்களில், றைஹானத்தும்மா ரீச்சர் என்னும் ஆளுமை, தன் பிள்ளைகளிடம் விதைத்து விட்ட  அந்த, திடவுறுதி, தன்னம்பிக்கை போன்ற உணர்வுகளை கவர்ச்சியான எழுத்து நடையில்  சொல்லியிருக்கும்  பாயிஷா அலியின் வனராணி என்ற  கட்டுரை உயிரோட்டம் மிக்கதாய் உள்ளது.  

 

குத்துக் கச்சான் என்ற பம்பரா நிலக்கடலையின், பூர்வீகம், வளர்ச்சி, விளைச்சல் பற்றி, அப்துல் ஹசன் ஆயிஷா அவர்கள் விபரித்துச் சொல்லும்  பெறுமதியான ஒரு ஆக்கமும் பூந்துணர் சஞ்சிகையை அலங்கரிக்கின்றது. கிண்ணியா சபீனா வின் இருள் விலகுமே... என்ற சிறுகதை ஒரு நல்ல நூலிழையில் பின்னப்பட்டிருந்த போதிலும், கதையின் பாத்திரங்கள்  கிண்ணியா நிலத்தின் மொழி நடையைப் பேசவில்லை என்பது ஒரு நெருடல்...

 

ரிக்காசா முகமத் நபாரின்,  ‘உறவாடுவோம்’ என்ற  உரைநடைச் சித்திரம்  மனித வாழ்வின் அன்பு,  உறவு, இயல்பு, போன்றவற்றை  இலகு நடையில் விபரித்துச் செல்கிறது. சன்ஷீதா ஜமீலின், உளத் தூய்மை என்ற ஆக்கம்   மானுட உளவியலை  இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் விளக்கும் ஒரு சிறந்த ஆக்கம் ஆகும்.

ஆசிரியர்களின் வாண்மை விருத்திச் செயற்பாடுகள் என்ற மாபெரும்  விடயதானத்தை நன்கு சுருக்கித் தந்துள்ளார் பிரதி அதிபர்,  சித்தி ஷிஹாரா  முகம்மது அலி   அவர்கள்..

 

பூந்துணரின்  முதன்மைப் பெண் ஆளுமைகள் வரிசையில்  முதலாவதாக,  மூதூர் முதல் பா.உ. அபூபக்கர் அவர்களின் பேர்த்தியும், பட்டதாரிக் கல்வியியலாளருமான, திருமதி சல்மத்துல் ஜெஸீலா நிஜாம்தீன் அவர்களுக்கு இந்த இதழில் கிரீடம் சூட்டிக் கௌரவம் செய்திருக்கிறார்கள். 

 

இவ்விதழில்,  ‘புகை’ என்ற தலைப்பில்,  வைத்திய கலாநிதி  ரஜியா முயீஸ் அவர்களின் அனுபவப் பகிர்வு  குறிப்பிடத்தக்க ஓர் ஆக்கம் ஆகும்.

 

ஓய்வுபெற்ற அதிபர், திருமதி ரைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்கள் எழுதியிருக்கும், கிண்ணியாவின் கல்வித் தாய் சித்தி ரீச்சர்  என்ற விவரணம், சித்தி ரீச்சரின், கல்விப் பணிகள், அவரது குணாதிசயங்கள் , போன்றவற்றை விபரமாக எடுத்துச் சொல்லும் ஒரு முக்கிய கட்டுரை ஆகும்.. கிண்ணியாவின் கல்வி வரலாற்றில் இவரைப் போன்ற மூத்த மகளிரின் வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

 

‘’சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கக் கூடிய  மனோதைரிய உள்ளவராக இருந்தால்தான்  சிறப்பான மாணவ சமுதாயத்தை  உருவாக்கலாம்...’’ என்று பிரகடனம் செய்யும்  திருமதி  நாதிரா ஷஹீத்  அமீன்பாரி  என்ற ஓய்வு நிலைப் பள்ளி முதல்வரின் நேர்காணல் எத்தனையோ காத்திரமான  கல்வியியல் கருத்துக்களையும், நிர்வாக மேம்பாட்டு ஆலோசனைகளையும் சொல்கிறது.  இந்நேர்காணலை திறம்படச் செய்துள்ளார், ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான் அவர்கள்.

 

கின்னியாச் செல்வி என எழுத்துலகில் பேர்பெற்ற  நூலாசிரியர்  கலாபூஷணம்,  ராஹிலா மஜீத் நூன்  என்பாரின், ‘’இல்லத்தரசிகளும், இல்லற வாழ்வும்’’ என்ற நூல் பற்றிய ஒரு அறிமுகத்தையும், நூலாசிரியரின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி நாம் அறியாத பல தகவல்களையும்  எஸ். மிஸ்ரியா அமீன் தந்துள்ளார்..

 

கிண்ணியா மகளிர் மஞ்சரி என்ற இயக்கம், துளிர்விட்ட வரலாறு தொடக்கம், மஞ்சரி ஆற்றிய, ஆற்றிவரும்   பணிகள் சேவைகள் பற்றி விலாவாரியான  ஒரு கட்டுரையை வரைந்துள்ளார் இவ்வமைப்பின் உப தலைவர்  டாக்டர்  மு.ச. நஸ்லுன் சிதாரா அவர்கள்.

 

பாடசாலைக் கல்வி தொடர்பாக  சம காலத்தில் பேணப்பட வேண்டிய  சிறுவர் உரிமைகள் பற்றி, சட்டத்தரணி எஸ். நசீரா நஜாத் அவர்கள் பெறுமதியான, விரிவான  ஒரு ஆக்கத்தை தந்துள்ளார். யு. கிசோர் ஜகான் என்பார் ‘’பெண்களின் புலம்பல்’’ என்ற சுவாரஸ்யமான ஒரு தலைப்பில் பெண்கள் அன்றாட வாழ்வில் எதிகொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், தொல்லைகளைப் படியளிட்டு அவற்றுக்கான தீர்வுகளையும்  அழகுறத் தந்துள்ளார்.

 

பாடசாலையில் வைத்து பூப்பெய்தும்  ஒரு மாணவியின் உடல், உள வலிகளை மிக அற்புதமான மொழி நடையில் சொல்கிறது   கிண்ணியா பாயிஷா அலியின், ’புரிதல்’ என்ற சிறுகதை, அந்த மாணவியின் வேதனை, அவள் எதிர்கொள்ளும் வினைகள் போன்றவற்றை மையச் சரட்டாகக் கொண்டு  கதையை இலகுவாக நகர்த்தியிருக்கிறார் ஆசிரியர்.

 

மற்றும், பாத்திமா  முஸ்னா பவாஸின் ‘சமையல் குறிப்பு’  உட்பட பல நல்ல கவிதைகளையும் உள்ளடக்கி  வெளிவந்துள்ள பூந்துணர் சஞ்சிகை நானூறு ரூபாய் விலையில் 71 பக்கங்களில் மிக அழகான தோற்றப் பொலிவுடன் கிடைக்கிறது.

 

கிண்ணியா மகளிர் மஞ்சரிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.